Tuesday, May 12, 2020

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?


நல்ல கார் ஒன்று வாங்கி வருகிறோம். சிறிது நாளில் சரியாக ஓட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிது. இல்லை என்றால் பிரேக் பிடிக்காமல் எங்கோ சென்று மோதி விடுகிறது. பின்னொரு நாள் முன் விளக்கு எரியாமல் போகிறது.....

தப்பு யார் பேரில்? நம் பேரிலா, அல்லது அந்த ஓட்டை வண்டியை செய்த அந்த கார் கம்பெனி பேரிலா?

சரியானபடி தயார் செய்யாத அந்த கம்பனிதானே பொறுப்பு?

அது போல,

நம் புலன்களும், இந்திரியங்களும் சரியான படி வேலை செய்யாமல் கண்டமேனிக்கு திரிந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவற்றைப் படைத்த அந்த பிரம்மன் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? நாம் என்ன செய்ய முடியும் ? என்று கேட்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்


கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்ததாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.



பொருள்


கோடாத = கோணல் இல்லாத, குற்றம் இல்லாத

வேதனுக்கு = வேதங்களைக் கொண்டு பிறப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கு

யான்செய்த குற்றமென் = நான் என்ன குற்றம் செய்தேன்

 குன்றெறிந்த = கிரௌஞ்ச மலை என்ற குன்றின் மேல் வேல் எறிந்தவனே

தாடாள னே = விடா முயற்சி உள்ளவனே

தென் தணிகைக் குமர = தென் புரத்தில் உள்ள தணிக்கை மலையில் உள்ள குமரனே

நின் = உன்னுடைய

றண்டையந்தாள் = தண்டை அணிந்த திருவடிகள்

சூடாத சென்னிம் = வைத்துக் கொள்ளாத தலையும்

நாடாத கண்ணுந் = உன்னை வந்து காணாத கண்களும்

தொழாதகையும் = உன்னை தொழாத கைகளும்

பாடாத நாவு = பாடாத நாவும்

மெனக்கே = எனக்கே

தெரிந்து = தெரிந்து

படைத்தனனே. = படைத்தானே

சரி, செய்த கார் நிறுவனத்தின் பிழைதான். அதற்காக, அந்த நிறுவனத்தின் மேலாளரை வாய்க்கு வந்த படி  பேச முடியுமா?

அவரிடம் மெல்ல, மென்மையாக எடுத்துச் சொல்லி, காரியத்தை முடிப்பதுதானே சாமர்த்தியம்?

பிரம்மன் தவறு செய்து விட்டான்.

அவன் தான் குற்றவாளி என்று சொன்னால், பிரம்மனுக்கு கோபம் வரும்.  அடுத்த பிறவியில் குரங்காகவோ, கொரோனா வைரஸ் ஆகவோ படைத்து விட்டால் என்ன செய்வது?

எனவே, "கோடாத வேதனுக்கு" என்று ஆரம்பிக்கிறார்.

அவன் எப்போதும் தவறு செய்ய மாட்டான்.

"எனக்கே தெரிந்து படைத்ததனனே"...நான் மோசமான ஆளுன்னு தெரிஞ்சு எனக்கு இப்படி ஒரு  டப்பா காரை கொடுத்து விட்டான்.

பிழை என்பேரில் இல்லை.  அவர் பேரிலும் இல்லை. நீ பார்த்து ஏதாவது செய்  என்று   வேண்டுகிறார்.

நான் வேணும்னு உன்னை வணங்காமல் இருக்க வில்லை. இந்த வண்டி கொஞ்சம்  டப்பா. எனவே என் மேல் கோபிக்காதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.

வண்டிய service க்கு விடணும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_12.html

1 comment:

  1. மிகவும் சுவாரசியமான பாடல். என்ன ஒரு இடக்கு முடுக்கான வாதம்!

    ReplyDelete