அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி
எது இன்பம், எது துன்பம் என்று அறியாமல் உயிர்கள் தடுமாறுகின்றன.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்பம் எது துன்பம் எது என்று கூடவா தெரியாமல் இருப்பார்கள், அதெல்லாம் தெரியும் எங்களுக்கு என்று சிலர் கூறலாம். சிந்திப்போம்.
இனிப்பு சாப்பிடுவது இன்பமா, துன்பமா?
சந்தேகம் என்ன? இன்பம் தான்.லட்டு, பூந்தி, பாதுஷா, ஜாங்கிரி, ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிடுவது இன்பம்தான்.
அப்படியா? யோசித்துப் பாருங்கள்.
அவை எவ்வளவு துன்பம் தருகிறது என்று தெரியும்.
அதே போல் உடற் பயிற்சி செய்வது இன்பமா, துன்பமா?
புகை பிடிப்பது, மது அருந்துவது, திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது....?
துன்பத்தை, இன்பம் என்று நினைத்துக் கொண்டு உயிர்கள் அவற்றின் பின்னால் போகின்றன.
உள்ளத்துக்குள்ளேயே பெரிய துன்பம், இந்தப் பிறவியில் மீண்டும் மீண்டும் பிறந்து, வளர்ந்து, இறந்து, மீண்டும் அதே போல்...எவ்வளவு பெரிய துன்பம். அது தெரியாமல், காதல், கல்யாணம், பிள்ளைகள், வீடு, வாசல் என்று உயிர்கள் அறியாமையில் கிடந்து உழல்கின்ற.
நாம், துன்பத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல், அதுவே இன்பம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றன.
பெரிய பெரிய ஞானிகள் எல்லாம், இந்த பிறவி என்பது துன்பம் நிறைந்தது, அதில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றே நினைத்தார்கள்.
"அம்மா, அபிராமி, என்னால் முடியவில்லை. இந்த பிறப்பு, இறப்பு என்று பிறவிச் சுழலில் கிடந்து தளர்கின்றேன். தயிர் மத்தில் அகப்பட்ட தயிர் போல, வெளியே போவதும், உள்ளே வருவதுமாக கிடந்து அலைகின்றேன் . என்னை இந்தத் துன்பத்தில் இருந்து காப்பாற்று"
என்று வேண்டுகிறார்.
பாடல்
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
பொருள்
ததியுறு = தயிரை கடையும்
மத்தின் = மத்தில் கிடந்து
சுழலும் என் ஆவி = சுழல்கின்றது என் ஆவி
தளர்விலதோர் = தளர்வில்லாத ஒரு
கதியுறு வண்ணம் = வழியை
கருது = கருதுவாய். நினைப்பாய் .
கண்டாய் = நீ கண்டாய்
கமலாலயனும் = தாமரை மலரில் இருக்கும் அயனும் (ப்ரம்மா)
மதியுறு = திங்களை
வேணி = சடை (சடையில் சூடிக் கொண்ட )
மகிழ்நனும் = மகிழ்ந்து இருக்கும் சிவனும்
மாலும் = திருமாலும்
வணங்கி = உன்னை வணங்கி
என்றும் = எப்போதும்
துதியுறு = துதிக்கும்
சேவடியாய் = சிறந்த திருவடிகளை கொண்ட
சிந்துரானன = சிவந்த மேனியைக் கொண்ட
சுந்தரியே = அழகானவளே
திரும்ப திரும்ப பிறவி எடுப்பது நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை. போன பிறவியில் என்னவாக இருந்தோம்? தெரியாது. எனவே, அதில் வரும் களைப்பு தெரிவதில்லை.
நம்மை விட பல படி மேலே போனவர்கள் அவற்றை உணர்கிறார்கள்.
என் வீடு வாசலில் இருந்து பார்த்தால், ஒரு பத்தடி தூரம் தெரியும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு இருபது அடி தூரம் தெரியும். எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அந்த இருபதடிக்கு மேல் உலகமே கிடையாது என்று சொல்ல முடியுமா?
வீட்டு மாடி மேல் ஏறி நின்று பார்த்தால், சில பல கிலோ மீட்டர் தூரம் தெரியும்.
பெரிய கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால், இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும்.
மலை மேல் நின்று பார்த்தால், வெகு தூரம் தெரியும்.
ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் மிகப் பெரிய பரப்பை பார்க்க முடியும் அல்லவா.
அது போல, நமக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.
ஞானிகளுக்கு பல பிறவிகள் ஞாபகம் இருக்கிறது....
"புல்லாய் புழுவாய்..." என்று ஆரம்பித்து....
"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் "
என்பார் மணிவாசககர். பிறந்து இறந்து , பிறந்து இறந்து இளைத்துப் போனேன் என்பார்.
"தளர்ந்தேன் என்னைத் தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார் நீத்தல் விண்ணப்பத்தில்.
"புனரபி ஜனனம், புனரபி மரணம்..." என்பது ஆதி சங்கரர் வாக்கு.
ப்ரம்மா, திருமால் இருவரும் அபிராமியை தொழுதார்கள். சரி.
சிவன் ஏன் தொழ வேண்டும்? சிவனின் மனைவி தானே அபிராமி? மனைவியை போய் யாராவது தொழுவார்களா?
பெண்ணின் பெருமை அப்படி.
அவள் மனைவியாக இருப்பாள், சில நேரம் தோழியாக, சில நேரம் தாயாக இருந்து பார்த்துக் கொள்வாள், சில நேரம் சகோதரியாக இருப்பாள், சில நேரம் மகளாக கூட மாறி அடம் பிடிப்பாள், மந்திரியாக யோசனை சொல்வாள்.
பட்டர் ஒரு படி மேலே போகிறார்.
இத்தனையாகவும் இருக்கும் அவள், ஏன் தொழும் தெய்வமாகவும் இருக்க முடியாது?
அவளின் அன்பை, கருணையை, வாஞ்சையை, தியாகத்தை எண்ணி, சிவனே அவளே தொழுதார் என்கிறார் பட்டர்.
சிவன் அவளை தொழுதது அவளிடம் இருந்து ஏதோ வரம் வேண்டி அல்ல. அது ஒரு நன்றிக் கடன்.
அபிராமி.
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_9.html
கடைசி மூன்று பத்திகள் அருமை. நன்றி.
ReplyDeleteயாவுமாகி நின்றாள் அன்னை.. அருமை அன்பு நண்பரே
ReplyDelete