திருக்குறள் - பெண் பார்க்கும் படலம்
திருமணத்துக்கு என்று ஒரு பெண்ணை தேர்ந்து எடுப்பது என்றால் எப்படி தேர்ந்து எடுப்பது?
அழகு, கல்வி, செல்வம், உயரம், நிறம், எடை, இதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.
போன பிளாகில் வளத்தக்காள் என்றால் என்ன என்று பார்த்தோம்.
வரவுக்கு ஏற்ப செலவு செய்வது.
சரி, அது மட்டும் போதுமா?
"மனைத்தக்க மாண்புடையள் ஆகி" என்று சொல்கிறார். அது என்ன?
சிலருக்கு நல்ல குணம் இருக்கும். ஆனால், சில செயல் நன்றாக இருக்காது.
வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு நல்ல சாப்பாடு தருவாள், நல்ல துணிமணி தருவாள் ஆனால் ஒவ்வொரு நாளும் அவளை ஏதாவது குற்றம் கண்டு பிடித்து திட்டிக் கொண்டே இருப்பாள்.
உதவுகின்ற குணம் இருக்கிறது. மட்டு மரியாதை இல்லாமல் திட்டும் கெட்ட செயல் இருக்கிறது.
நல்ல குணமும், நல்ல செயலும் சேர்ந்ததைத் தான் "மனைத்தக்க மாண்பு என்கிறார் வள்ளுவர்.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
சரி, அது என்ன நல்ல குணம், நல்ல செயல் ?
பரிமேல் அழகர் உரை எழுதுகிறார் ...
"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.
நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"
துறந்தார் பேணல் என்றால், துறவிகளை போற்றுதல், பாதுகாத்தல்
விருந்து அயர்தல் என்றால் விருந்தை வரவேற்று, உபசாரம் செய்தால்.
ஏழைகள் மேல் அன்பு.
முதலாயின என்று சொல்லும் போது, அது போன்ற குணங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது, தேவைப்படும் தனி மனிதர்களுக்கு உதவுதல். பெண்ணிடம் அந்த அருள், அன்பு இருக்க வேண்டும்.
பிச்சைக்காரன் வந்தால், போ போ என்று விரட்டி அடிக்கும் பெண்ணிடம் அந்த அன்பு இல்லை என்று அர்த்தம்.
அவை நல்ல குணங்கள்.
நல்ல செயல்கள் என்றால் என்ன ?
முதலாவது, வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் அறிந்து கடை பிடித்தல்.
கடை பிடித்தல் என்றால் கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல். எது வாழ்கைக்குத் தேவையோ, அதை கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல்.
"நான் வியாழக்கிழமை மாமிசம் சாப்பிட மாட்டேன்"
"வெள்ளிக் கிழமை பொய் சொல்ல மாட்டேன்"
"புதன் கிழமை தண்ணி அடிக்க மாட்டேன்"
இதெல்லாம் , கடைசிவரை கை கொள்ளுதல் அல்ல. பெண்கள், ஒன்றைப் பிடித்தால், கடைசிவரை அதை விட மாட்டார்கள்.
மனைவி எவ்வளவு அழகாக, அறிவாக இருந்தாலும், ஆணின் மனம் மற்றொரு பெண்ணின் மேல் போவது பற்றி நாம் அறிந்து இருக்கிறோம்.
கணவன் எவ்வளவு மோசமானவாக இருந்தாலும், அவனை அவன் மனைவி விட்டு விடுவதில்லை என்றும் பார்க்கிறோம் .
விரதம், ஆசாரம், பக்தி, அன்பு, என்று பெண்கள் ஒன்றை நினைத்து விட்டால், அதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்வார்கள். அதில் இருந்து எளிதில் மாறமாட்டார்கள். ஆண்கள், எளிதில் மாறி விடுவார்கள்.
இரண்டாவது, அட்டில் தொழில் வன்மை. அட்டில் என்றால் சமையல். சமையல் செய்வதில் திறமை இருக்க வேண்டும். சமையல் செய்தால் போதாது. அதில் திறமை இருக்க வேண்டும்.
ருசி, இருப்பதைக் கொண்டு நல்ல உணவு தயாரித்தல், திடீரென்று உறவினர்களோ, நண்பர்களோ வந்து விட்டால் சட்டென்று ஏதோ ஒரு நல்ல உணவை தயார் செய்து தருவது போன்றவை.
கடையில் வாங்கித் தர மனைவி வேண்டுமா?
மனைவி கையின் மணம் , பக்குவம் சாப்பாட்டில் தெரிய வேண்டும்.
மூன்றாவது, ஒப்புரவு.
ஒப்புரவு என்றால் சமுதாயத்துக்கு செய்யும் நன்மை. தனி மனிதனுக்கு செய்யும் நன்மைகளுக்கு ஈகை என்று பெயர். சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகளுக்கு ஒப்புரவு என்று பெயர்.
அது என்ன ஒப்புரவு?
ஊரில் ஒரு விஷேஷம், கோவில் திருவிழா, குடியிருக்கும் அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு கொண்டாட்டம், என்றால் அதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வது. நமக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று இருக்கக் கூடாது.
நல்ல குணம், நல்ல செயல், வரவு அறிந்து செலவழிக்கும் பெண் நல்ல வாழ்க்கைத் துணை.
மற்றது?
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_16.html
ஒன்றையும் விடாமல் அனைத்து முக்கியமான நற் குணங்களை பற்றி சொல்லி இருக்கிறார்.உங்கள் விளக்கம் மேலும் பரிமளிக்க செய்கிறது.
ReplyDelete