இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?
முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம். போய் இறங்கியாச்சு. போய் சேர வேண்டிய இடம் தெரியும் ஆனால் வழி தெரியாது. வெளி நாடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாச்சு. இந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. முன்ன பின்ன இந்த ஊருக்கு வந்ததும் இல்லை.
என்ன செய்யணும்?
தெரிஞ்ச யார் கிட்டயாவது கேக்கணும். யார் கிட்ட என்றால், நம்மைப் போல முதன் முதலாய் அந்த ஊருக்கு வந்த இன்னொரு பயணியிடம் அல்ல. வழி தெரிந்த ஆளிடம் கேட்கணும்.
சரி, கேட்டாச்சு. அவரும் சரியான வழி சொல்லி விட்டார்.
போக வேண்டியதுதான் பாக்கி.
அங்க தான் சிக்கல் இருக்கு.
"அவரு சொல்ற வழி நல்லாத்தான் இருக்கு. ஆனா, அது எனக்கு சரிப் பட்டு வருமான்னு தெரியல. அந்த வழி எல்லாம், நடை முறைக்கு சரியா வராது..." என்று சொல்லி விட்டு, கால் போன போக்கில் நாம் போய் கொண்டிருந்தால் அது எவ்வளவு புத்திசாலித்தனம்?
அது போல, முன்ன பின்ன தெரியாத இந்த பூவுலகில் வந்து பிறந்து விட்டோம். முக்தி, வீடு பேறு என்று சொல்லும் இடத்துக்குப் போக வேண்டும்.
போக வழி சொல்லி இருக்கிறார்கள். பெரியவர்கள், ஆச்சாரியர்கள்,குருமார்கள், ஞானிகள், துறவிகள்...எல்லோரும்.
வழி எல்லாம் கேக்க வேண்டியது. அப்புறம், "...அது வந்து, வழி நல்லாத்தான் சொல்றாரு....ஆனா பாருங்க...நமக்கு அது சரிப்பட்டு வருமான்னு தெரியல "...என்று சொல்லி விட்டு நாம் அன்றாட வேலைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.
புத்திசாலித்தனம்?
"சரணம் என்று அடைத்த தருமனுக்காக முன்பு கௌரவர்களை அழித்த மாயனை, நம்மை எல்லாம் வணங்க வைத்த இராமானுஜன் இல்லை என்றால் நமக்கெல்லாம் வேறு துணை ஏது "
என்று பாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.
பாடல்
சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?
பொருள்
சரணம் அடைந்த தருமனுக்காப் = தன்னைச் சரணம் அடைந்த தருமனுக்காக
பண்டு = முன்பு
நூற்றுவரை = நூற்றுக்கணக்கான கௌரவர்களை
மரணம் அடைவித்த = கொன்ற
மாயவன் தன்னை = திருமாலை
வணங்கவைத்த = வணங்க வைத்த
கரணம் இவை = கரணங்கள் (புலன்கள்) இவை
யுமக் கன்று = உமக்கு அன்று
என்று = என்று
இராமா னுசன் = இராமானுஜன்
னுயிர்கட்கு = உயிர்களுக்கு
அரணங் கமைத்தில னேல் = அரண் வேலி ) அமைதிராவிட்டால்
அர ணார் = அரண் (வேலி ,காவல்) யார்
மற்றிவ் வாருயிர்க்கே? = மற்ற இந்த ஆருயிர்க்கே
நமக்கு புலன்கள் எதற்காக இருக்கின்றன?
ஆண்டு, அனுபவிக்கத்தானே ? எல்லாவற்றையும், ஒன்று விடாமல் அனுபவிக்கத்தானே இந்த புலன்கள் இருக்கின்றன?
இல்லை.
எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க இறங்கினால் என்ன ஆகும்?
எதிலும் ஒரு அளவு வேண்டும். வரை முறை வேண்டும்.
இன்பங்களின் பின்னால் போகும் புலன்களை, தடுத்து, அரண் அமைத்து, இறைவன் பால் வழி நடத்திய, இராமானுசன் இல்லை என்றால், இந்த உயிர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள்?
ஐந்து புலன்களும், உலகில் கிடந்து துன்பப் படுகின்றன.
அவனை சரண் அடைந்து விட்டால், நூற்றுக்கணக்கான கௌரவர்களை அழித்தது போல, நம் புலன்களுக்கு எதிரான அனைத்தையும் அவன் அழித்து விடுவான். புலன்கள் தறி கெட்டு ஓடாது.
அதற்கு, முதலில் அவனிடம் சரண் அடைய வேண்டும்.
அவன் யார், எப்படி சரண் அடைவது என்று நமக்குத் தெரியாது. அதைச் சொல்லித் தரத்தான் இராமானுஜர் போன்ற மகான்கள் அவதரித்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால், நாம் சரண் அடையப் போவதும் இல்லை, எதிரிகள் அழியப் போவதும் இல்லை.
குருவை நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். பின் ,அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.
உடம்பு சரி இல்லை என்று மருத்துவரிடம் போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார். வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?
"...அவரு சொல்லுவாரு ...நம்மால முடியுமா...." என்று நமக்குத் தெரிந்த மாத்திரைகளை வாங்கி தின்று கொண்டு இருந்தால், நோய் குணமாகுமா?
சாதாரண ஜலதோஷம் காய்ச்சலுக்கே இந்த கதி என்றால், மிகப் பெரிய நோயான பிறவிப் பிணிக்கு என்ன சொல்ல?
வழி தான் சொல்ல முடியும். அதில் பயணிப்பதும், அல்லது வேறு திசையில் போவதும் அவரவர் விருப்பம், விதி.
https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_14.html
No comments:
Post a Comment