Wednesday, April 12, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்

    

 திருக்குறள் - பயனில சொல்லாமை - அரும்பயன் ஆயும் அறிவினார்



(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 



பயனற்ற சொற்களை பேசுவதை எப்படி விடுவது?  


பேசாதே பேசாதே என்று சொன்னால் போதாது. எப்படி அப்படி பேசாமல் இருக்க வேண்டும் என்ற வழியைச் சொல்ல வேண்டாமா?



வள்ளுவர் சொல்கிறார். 



நாம் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதைப் பற்றித்தான் பேசுவோம். இல்லையா?



மனதில், சிந்தனையில் எது ஓடிக் கொண்டிருக்கிறதோ அது தான் சொல்லில் வரும். 


நம் சிந்தனை எல்லாம் சில்லறை விடயங்களில் போய் கொண்டிருக்கிறது. 



அரசியல், சினிமா, டிவி யில் வரும் தொடர்கள், நாள் வார இதழ்களில் வரும் உணர்வுகளை தூண்டும் செய்திகள்,  என்று இருக்கிறது. 


whatsapp போன்ற சமூக வலை தளங்களில் யாராவது ஒன்றைச் சொன்னால் அதைப் பிடித்துக் கொண்டு மாறி மாறி கருத்துப் பரிமாற்றம் செய்வது. காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத விடயமாக இருக்கும். 



எனவே, நம் சிந்தனையை மாற்றினால், நம் பேச்சு மாறும். 


சிந்தனையை எதன் மேல் செலுத்துவது என்ற கே கேள்வி வரும். 


சமையல் குறிப்பு, அழகுக் குறிப்பு இதெல்லாம் முக்கியமில்லையா என்ற கேள்வி வரும். 


அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்


பொருள் 





(please click the above link to continue reading)


அரும்பயன் = அரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும் 

அறிவினார் = அறிவு உள்ளவர்கள் 

சொல்லார் = சொல்ல மாட்டார்கள் 

பெரும்பயன் = பெரிய பயன் 

இல்லாத சொல் = தராத சொற்களை 


அதாவது, அரிய  பயன்களைத் தருபவைகளைப் பற்றி ஆராயும் அறிவை உடையவர்கள் பெரிய பலன் தராத சொற்களை பேச மாட்டார்கள். 

சரி, அரிய பயன் என்றால் என்ன?


பரிமேல் உரையை பின் பார்ப்போம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


அரிய என்றால் அபூர்வமான, எளிதில் கிடைக்காத என்று பொருள் சொல்லுவோம். அரிய வகை பூ என்றால் சாதாரணமாக பூக்காத பூ. குறிஞ்சி மலர் போல.

எளிதில் கிடைக்காத பலன் எது?


பணம், செல்வாக்கு, அதிகாரம், உடல் நலம், உறவுகள்...இதெல்லாம் எளிதில் கிடைக்காதா?


இறை அருள், வீடு பேறு , முக்தி...இவை எளிதில் கிடைக்குமா?

பரிமேலழகர் சொல்கிறார் " அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார்" என்று. 

எளிதில் ஆராய்ந்து அறிந்து விட முடியாத பயன்கள். 


யோக முயற்சி செய்தால் என்ன கிடைக்கும்? அதன் பலன்களை எளிதில் அறிய முடியாது. துறவறம் நல்லதா?  எவ்வளவு சிந்தித்தாலும்  அதை முழுவதும் அறிந்து கொள்ள முடியாது. 

அது போன்ற விடயங்களை ஆராயும் அறிவை உடையவர்கள் என்று உரை செய்கிறார்.  மேலும், 


அது எது பற்றியது என்றால் "வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின" என்பார். 

கதி என்றால் பாதை. மேற்கதி உயர்ந்த நிலைக்கு நம்மை கொண்டு செல்லும் பாதை. அதைப் பற்றி ஆராயும் அறிவுஉள்ளவர்கள் என்கிறார். 




 
பெரும் பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் தரும் சொற்களைப் பேசுவார்களா என்று கேட்கக் கூடாது. 

பெரிய பயன் இல்லாத சொற்களை பேச மாட்டார்கள் என்றால் சிறு பயன் இல்லாத சொற்களையும் பேச மாட்டார்கள் என்பது குறிப்பு. 

பெரும் பயன் தரும் சொற்களை மட்டும் தான் பேசுவார்கள். 


அதாவது, நாம் பேசினால் அதனால் மற்றவர்களுக்கு பெரிய பயன் விளைய வேண்டும். ஏதோ பொழுது போக அரட்டை அடித்தேன் என்றால் அதுவும் ஒரு பலன் தான்.   ஆனால் அது சிறு பயன். அது பற்றி பேசக் கூடாது. 


இரண்டாவது, அறிவுள்ளவர்கள் அப்படி பேச மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?  அறிவு இல்லாத முட்டாள்கதான்  பெரும் பயன் அற்ற சொற்களைப் பேசுவார்கள் என்று அர்த்தம். 

நாம் யார் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 



(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html


நயன்சாரா நன்மையின் நீக்கும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


சீர்மை சிறப்பொடு நீங்கும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_23.html


 பதடி எனல் 

No comments:

Post a Comment