Monday, February 27, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும்

திருக்குறள் - பயனில சொல்லாமை - சொல்லும் செயலும் 


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


சொல்லா? செயலா ? எதற்கு வலிமை அதிகம்?


நம்மைக் கேட்டால் பெரும்பாலானோர் சொல்லுவது செயல் தான் வலிமை மிக்கது என்று. 



உங்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தர எனக்கு விருப்பம் என்று சொல்லுவதை விட, ஆயிரம் ரூபாய் கொடுக்கும் செயல் உயர்ந்ததுதானே. 


எனக்கு வர்ற கோபத்துக்கு அவனை வெட்டிப் போட்டாலும் பரவாயில்லை என்று சொல்லும்சொல்லை விட, உண்மையாகவே வெட்டிப் போடுவது வலிமை மிக்கது அல்லவா?



நல்லது என்றாலும், கெடுதல் எது என்றாலும் சொல்லை விட செயலே ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. 



ஆனால், சில சமயம் செயலை விட சொல் வலிமை மிக்கதாக இருக்கும் என்கிறார் வள்ளுவர். 




அது எப்போது?


பயனற்ற சொற்களை படித்தவர் முன் சொல்வது, நமக்கு வேண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பத் தகாத செயல்களை செய்வதை விட மோசமானது என்கிறார். 



பாடல் 



பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல


நட்டார்கண் செய்தலின் தீது



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html



(please click the above link to continue reading)



பயன்இல = பயன் இல்லாத சொற்களை 



பல்லார்முன்  = அறிஞர்கள் முன் 



சொல்லல் = சொல்லுவது 



நயன்இல = நன்மை பயக்காத, விருப்பம் இல்லாத 



நட்டார்கண் = நெருங்கியவர்களுக்கு 



செய்தலின் தீது = செய்வதை விட தீமையானது 



அது ஏன் தீமையானது என்று வள்ளுவரும் சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லவில்லை. 



நாம் தான் சிந்திக்க வேண்டும். 



நமக்கு வேண்டியவர்கள், சொந்த, பந்தம் உள்ளவர்கள் முன் நாம் ஒரு வேண்டாத செயலைச் செய்தால் அவர்கள் முகம் சுளிப்பார்கள். நம்மை பற்றி கீழான அபிப்பிராயம் கொள்வார்கள். நம்மை வெறுப்பார்கள். 



அது ஒரு சின்ன வட்டம். 



ஆனால், கற்று அறிந்த பெரியோர் முன் பயனில சொன்னால், அவர்கள் மட்டும் அல்ல, அந்த சொல்லால் எல்லோரும் இகழத் தலைப்படுவார்கள். 


அது ஒரு பெரிய  வட்டம். 




இரண்டாவது,  சுற்றத்தார் இகழ்வது அந்த நேரத்தில் நடக்கும், அல்லது கொஞ்ச நாளைக்கு நடக்கும். ஆனால்,  அறிவுடைய பெரியாரால் இகழப் பட்டால்   அது கால காலத்துக்கும் நிற்கும். 



நெருங்கியோர் ஒருவனை விட்டு விலகிப் போனால் அதனால் வரும் நட்டம் அதிகம் இல்லை. 



அறிவுடையோர் ஒருவனை விட்டு விலகிப் போனால், அதனால் அவன் அடையும் நட்டத்துக்கு அளவில்லை. 



அவர்களிடம் இருந்து அவன் இம்மைக்கும், மறுமைக்கும் பெற்றுக் பயன் பெற வேண்டியவை அனைத்தையும் இழப்பான். 



மேலும், நெருங்கியவர்கள் ஒரு வேளை நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் கூடும். கணவனோ, மனைவியோ தவறு செய்தால் மற்றவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளக் கூடும். பிள்ளை தவறு செய்தால் பெற்றோர் வெறுத்து ஒதுக்கி விட மாட்டார்கள். 



ஆனால், அறிவுடையார், பயனில சொல் சொல்பவனை விட்டு விலகிப் போய் விடுவார்கள். 




எனவே, அந்தச் சொல், நெருங்கியவர்களுக்கு செய்யும் நன்மை தராத செயலை விட தீமையானது என்கிறார். 



இன்றைய சூழ்நிலையில், யார் அறிந்தோர் என்று நமக்குத் தெரியாது. எந்தக் கூட்டத்தில் எந்த அறிஞன் இருக்கிறான் என்று யாருக்குத் தெரியும்?




எனவே, எப்போதும் பயனுள்ள சொற்களையே பேசிப் பழக வேண்டும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html





No comments:

Post a Comment