Friday, February 17, 2023

கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்

 கம்ப இராமாயணம் - மறைகளுக்கு இறுதி ஆவார்


மாலை பாம்பு போலத் தெரியும் உதாரணம் பலவிதங்களில், பல இடங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. எல்லோரும் அறிந்ததுதான். அந்த உதாரணத்தை கம்பர் காட்டும் விதம் பிரமிப்பு ஊட்டும்.


நாம் உலகில் பலவற்றை காண்கிறோம். 


பொருள்கள், உறவுகள், நட்பு,  இன்பம், சுகம், பகை, துன்பம், செல்வம், வறுமை என்று காண்கிறோம். 


அவை எல்லாம் உண்மையா? எது உண்மை? எது பொய் ?


செல்வம் இருந்தால் நம் துன்பங்கள் நீங்கிவிடும்.


வயதான காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்துக் கொள்வார்கள். 


இப்படி பல "உண்மைகளை" நாம் கொண்டிருக்கிறோம். 


கம்பர் விளக்குகிறார். 


வெளிச்சம் போதுமானதாக இல்லாமல் இருப்பதால் மாலையா பாம்பா என்று தெரியவில்லை. 


கொஞ்சம் வெளிச்சம் வந்தவுடன், ஓ...இது மாலை, பாம்பு இல்லை என்று அறிந்து பெருமூச்சு விடுகிறோம். 


சற்றுப் பொறுங்கள். 


அது மாலையா? 


இல்லை, பூ, நார், நூல், ஜரிகை சேர்ந்த கலவை.  மாலை என்று பெயர் தந்திருக்கிறோம் அவ்வளவுதான். 


சரி,  நூல் என்றால் பஞ்சு. நார் பூ என்பது செடி கொடியில் இருந்து வருவது.  செடி கொடி என்பது விதை, நீர், சூரிய ஒளி, மண் சத்து இவற்றின் கலவை. 


இது இப்படி போய்க் கொண்டே இருக்கும். எங்கு போய் இது முடியும்? எது உண்மை? 


எந்த அளவில் நாம் நிறுத்துவது? 


இந்த உலகம் என்பது பஞ்ச பூதங்களின் கலவை. அடிப்படையில் பஞ்ச பூதங்கள். அவ்வளவுதான்.  


ஆனால், அது நமக்குத் தெரியுமா? மனைவி, கணவன், பிள்ளைகள், என்றால் உணர்ச்சிகள், ஞாபகங்கள் எல்லாம் சேர்ந்து வருகிறது. பஞ்ச பூதங்களின் கலவை என்று நினைக்க முடியுமா? 


முடியும். 


எப்போது என்றால் இறைவன் முன். இறை உணர்வோடு நாம் ஒன்று படும்போது இந்த வேறுபாடுகள் மறைந்து எல்லாம் ஒன்றே என்ற எண்ணம் வரும். 



பாடல் 


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை  அரவு என, பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப்பாட்டின்  வேறுபாடு உற்ற வீக்கம்

கலங்குவது எவரைக் கண்டால் ?  அவர், என்பர்- கைவில் ஏந்தி,

இலங்கையில் பொருதார்; அன்றே,  மறைகளுக்கு இறுதி யாவார்!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_17.html


(Please click the above link to continue reading)


அலங்கலில் = மாலையில் 


தோன்றும்  = தோன்றும் 


பொய்ம்மை = பொய்மை 


அரவு என = பாம்பு என்று 


பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும் 


விலங்கிய விகாரப்பாட்டின்  = ஒன்றோடு ஒன்று சேர்ந்தும், விலகியும் தோன்றும் 


வேறுபாடு = வேறு வேறாக  தோன்றும் 


உற்ற வீக்கம் = பெரிதாகத் தோன்றும் 


கலங்குவது = மறைவது 


 எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து என்றால் 


அவர், = அவர் 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி 


இலங்கையில் = இலங்கையில் 


பொருதார் = சண்டையிட்டார் 


அன்றே = அப்போதே 


மறைகளுக்கு = வேதங்களுக்கு 


இறுதி யாவார்! = முடிவில் உள்ளார் 


இறைவன் முன் இந்த வேறுபாடுகள் எல்லாம் மறையும்.  உயர்ந்தவன், தாழ்ந்தவன், இன்பம், துன்பம், செல்வம், வறுமை என்ற வேறுபாடுகள் எல்லாம் இறைவன் முன் மறையும்


யார் அந்த இறைவன் என்றால், அது இராமன்தான் என்கிறார் கம்பர். 




No comments:

Post a Comment