Wednesday, March 15, 2023

திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்

  திருக்குறள் - பயனில சொல்லாமை - நயன்சாரா நன்மையின் நீக்கும்


(இந்த அதிகாரத்தின் முந்தைய குறள்களின் பதிவுகளை  இந்த பதிவின் முடிவில் காணலாம்) 


நீதி !



நீதி என்றால் என்ன?  



ஒரு சமுதாய கோட்பாடு. கட்டுப்பாடு. 



ஒரு சமுதாயத்தில் உள்ள எல்லோரும் கூடி வகுத்த ஒரு வாழ்க்கை நெறிமுறை. அதில் இருந்து 

விலகக் கூடாது. மீறினால் தண்டனை உண்டு. 



ஒரு மனிதனை சமுதாயத்தோடு ஒட்டி வாழ வழி செய்வது நீதி. 



ஒருவன் நீதியை மதிக்காமல் மனம் போனபடி வாழத் தலைப்பட்டால், அவனை சிறையில் அடைத்து, 

அவனை சமுதாயத்தில் இருந்து பிரித்து, தனி மனிதனாக ஆக்கப் படுவான். 



இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 



பயனில்லாத சொற்களை ஒருவன் பேசினால், அவனுக்கு நல்லது கிடைக்காதது மட்டும் அல்ல அவன் 

சமுத்தியாத்தால் தனிமை படுத்தப் படுவான் என்கிறார் வள்ளுவர். 



பாடல் 


நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லார் அகத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_15.html


(please click the above link to continue reading)



நயன்சாரா = நீதியோடு சேராத 



நன்மையின் = நன்மைகளில் இருந்து 



நீக்கும் = ஒருவனை நீக்கும் 



பயன்சாராப் = பயன்தராத 



பண்பில்சொல் = பண்பற்ற சொற்களை 



பல்லார் அகத்து = பலர் முன்னிலையில் (ஒருவன் பேசினால்)




பயனற்ற சொற்களை பேசினால் நன்மை வராது என்பது மட்டும் அல்ல, அவனை எல்லோரும் ஒதுக்கி வைத்து 


விடுவார்கள். அவன் தனிமை படுத்தப்படுவான். ஏறக்குறைய சிறைச்சாலை மாதிரித்தான். 


யோசித்துப் பாருங்கள். 


உங்கள் நட்பிலும், உறவிலும் கூட ஒரு சிலர் இருக்கலாம். 


'இரம்பம்', "சரியான அறுவை", "வாயாடி",  என்றெல்லாம் அழைக்கப் படுபவர்கள் இருப்பார்கள். 


அவர்களை கண்டு நீங்கள் விலகிப் போகிறீர்கள் அல்லவா? 


பயனற்ற சொற்களை பேசினால், நம்மை விட்டும் மற்றவர்கள் விலகிப் போய் விடுவார்கள். 


இல்லறத்தில் இருப்பவன் சமுதாயத்தோடு ஒன்றி வாழவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். 


ஊருடன் பகைக்கில் வேருடன் கெடும் 


"எனக்கு ஒரு நன்மையையும் வேண்டாம். நான் மனதில் பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன்" என்று பெருமை  பேசக் கூடாது. 


நன்மை வேண்டாம் என்று தள்ளிவிடலாம். 


உறவும், நட்பும் இல்லாமல் எப்படி வாழ்வது?


பிள்ளைகள், கணவன்/மனைவி, உடன் பிறந்தோர், சுற்றம், நட்பு எல்லாம் நாளடைவில் தள்ளிப் போய்விடும். 


"நான் சொல்வதை யாரும் கேட்பது இல்லை. பேச்சுத் துணைக்கு கூட யாரும் இல்லை" என்று பின்னால் வருந்து பயன் இல்லை. 


பயனுள்ள சொற்களை பேசிப் பழகிவந்தால் எல்லோரும் நம்மிடம் பேச விரும்புவார்கள். 


இப்படி எல்லாம் இந்தக் குறளில் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


"நயன்சாரா நன்மையின்" எனபதில் நயன் என்ற சொல்லுக்கு "நீதி" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


"நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்"


என்பது அவர் உரை. 


நீதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று சிந்தித்தபோது இப்படியும் ஒரு பொருள் இருக்கலாம் என்று தோன்றியது. 


தவறாகவும் இருக்கலாம். 


சரி என்றால் ஏற்றுக் கொள்ளவும். இல்லை என்றால் தள்ளி விடவும். 


(


ஒரு முன்னுரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_22.html


எல்லாரும் எள்ளப் படும்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_25.html


சொல்லும் செயலும் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_2.html


பாரித்து உரைக்கும் உரை 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_2.html



No comments:

Post a Comment