கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்
யுத்த காண்டம்.
இராவணன் களம் புகுகிறான். தேரில் வருகிறான்.
இராமன் தரையில் நிற்கிறான்.
அனுமன் இராமனை தன் தோளில் ஏற்றி கொள்கிறான்.
சாதாரண நிகழ்வு தான்.
ஆனாலும் கம்பன் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டார்கள் இதனால் என்று கற்பனை செய்கிறான்.
உலகளந்த பெருமானை தன் தோளில் தாங்கிய அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
திருமாலை தூக்கிச் சுமந்த கருடனுக்கு பொறாமை.
மாலோனை தாங்கிய ஆதி சேஷனுக்கு தலை நடுக்கம்.
நம்மால் தான் முடியும் என்றிருந்தோம், அனுமன் இராமனை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டானே என்று.
மாணியாய் உலகு அளந்த நாள், அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும், தலை நடுக்குற்றான்.
மாணியாய் = மாவலிக்காக
உலகு அளந்த நாள் = அன்று உலகு அளந்த நாள்
அவனுடை வடிவை = அவனுடைய வடிவை (குள்ள உருவமா ? உலகளந்த பெரிய உருவமா ?)
ஆணியாய் = ஆழமாக, தெளிவாக
உணர் மாருதி = உணர்ந்த மாருதி
அதிசயம் உற்றான் = அதிசயம் அடைந்தான். அவ்வளவு பெரிய ஆளை நம் தோளில் தூக்கி விட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியம்
காணி ஆகப் = காணி என்றால் பரம்பரை உரிமை. பிறப்பால் கிடைக்கும் உரிமை.
பண்டு உடையனாம் = முன்பே உடைய
ஒரு தனிக் கலுழன் = கலுழன் என்றால் கருடன். ஒரு தனிச் சிறப்பு மிக்க கருடனும்
நாணினான் = வெட்கம் அடைந்தான்
மற்றை அனந்தனும் = ஆதி சேடனும்
தலை நடுக்குற்றான். = தலை நடுக்கம் கொண்டான்
No comments:
Post a Comment