Saturday, May 19, 2012

பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?


பெரிய புராணம் - ஒரு சூரியன் போதுமா ?

பெரிய புராணம்,

பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை பற்றியது.

இதை ஒரு வரலாற்று நூல் என்றே கூறலாம்.

ஏனென்றால் நாயன்மார்கள் கற்பனை கதா பாத்திரங்கள் அல்ல. 
உண்மையாக வாழ்ந்த மனிதர்கள்.

பெரிய புராணம் பன்னிரண்டாவது திருமுறை என்று அழைக்கப் படுகிறது.

படிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும்.

கம்ப இராமாயணம் போல் அவ்வளவு எளிமை அல்ல.

இருப்பினும், மிக இனிமையான பாடல்களை கொண்டது.

அதி காலை நேரம்.

கீழ் வானம் சிவக்கிறது.

வானெங்கும் பறவைகள்.

குளிர் பிரியா காற்று காதோரம் இரகசியம் பேசிச் செல்லும்.

மெல்லிய வானம்.

துல்லிய மேகம்.

பனியில் நனைந்த மலர்கள் மலரும் நேரம்.

அப்படி ஒரு கிராமத்தில், அந்த அதி காலை வேளையில் நடந்து போகிறீர்கள்.

அங்கங்கே குளங்கள் தென்படுகின்றன. அந்த குளங்களில் நிறைய தாமரை மலர்கள் பூத்து இருக்கின்றன.

அதை பார்க்கும் போது ஓராயிரம் சூரியன்கள் தரையில் உதித்த மாதிரி இருக்கிறது.

அந்த ஊர், திரு ஞான சம்பந்தர் பிறந்த சீர்காழி.

படிக்கும் போது மனதுக்குள் மழை அடிக்கும் அந்தப் பெரிய புராணப் பாடல்...


வளம்பயிலும் புறம்பணைப்பால் வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா மரைச்செவ்வித் தடமலராற்
களம்பயினீர்க் கடன்மலர்வ தொருபரிதி யெனக்கருதி
யிளம்பரிதி பலமலர்ந்தாற் போல்பவுள விலஞ்சிபல.


பதம் பிரித்தால் கொஞ்சம் எளிமையாக இருக்கும். 

வளம் பயிலும் புறம் பணைப்பால் வாசப் பாசடை அடைந்த
தளம் பொலியும் புனல் செந்தாமரை செவ்வி தட மலரால்
களம் பயில் நீர் கடன் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி
இளம் பரிதி பல மலர்ந்தார் போல உள்ள இலஞ்சி பல


வளம் பயிலும் = வளம் நிறைந்த

புறம் பணைப்பால் = புறம் என்றால் வெளியே. பணை என்றால் பெருத்த, அழகிய, உறுதியான (பணைத்தோள்) என்று பொருள். புறம் பணை என்பதை வயல் வெளி என்று கூறுவது மரபு.

வாசப் = வாசமான

பாசடை = பசுமை நிறைந்த

அடைந்த = வாசமும் பசுமையும் சேர்ந்த

தளம் = தளம் என்றால் இல்லை. துளசி தளம் என்று கூறுகிறோம் அல்லவா.

பொலியும் = இனிது விளங்கும்

புனல் = குளம், ஏரி முதலிய நீர் நிலைகள்

செந்தாமரை = செம்மையான தாமரை மலர்கள்

செவ்வி = சிவந்த

தட = பெருமையான (தடந்தோள்), வளைந்த

மலரால் = மலரால்

களம் = நீண்ட, பெரிய, அகன்ற என்று பல பொருள். இந்த இடத்தில் கடல் என்பதை குறிக்கும்.

பயில் நீர் = அந்த கடலில் நீர் அலை அடித்து பயின்று கொண்டு இருக்கிறது

கடன் = அதன் கண்

மலர்வது = பூப்பது

ஒரு பரிதி = ஒரு சூரியன்

எனக் கருதி = என்று கருதி

இளம் பரிதி = இளமையான சூரியன்கள், சின்ன சின்ன சூரியன்கள்

பல மலர்ந்தார் போல = பல மலர்ந்தார் போல

உள்ள இலஞ்சி பல = இலஞ்சி என்றால் கடல் (ஒரு வித பூ என்றும் அர்த்தம் உண்டு. ஆனால் இங்கு கடல் என்பது பொருந்தும்). அப்படி பல பல சூரியன்கள் உதித்தார் போல உள்ள கடல்கள் இங்கு நிறைய உள்ளன.

கடல் போன்ற நீர் பரப்பு கொண்ட குளங்கள்.

ஏதோ குட்டி குட்டி குளம் என்று நினைத்து கொள்ளாதீர்கள்.

கடல் போல பெரியது.

அது மட்டும் அல்ல, கடல் நீர் உப்பு கரிக்கும், இந்த குளங்களில் உள்ள நீர் நல்ல நீர்.

அந்த கடலில் ஒரே ஒரு சூரியன் தான், இந்த குளங்களில் பலப் பல சூரியன்கள்.

அந்த மாதிரி பல குளங்களை, நீர் நிலைகளை கொண்ட ஊர் சீர்காழி என்று அந்த ஊரை வர்ணிக்கிறார் சேக்கிழார்.


2 comments:

  1. "தளம் = தளம் என்றால் இல்லை" இது புரியவில்லை. தளம் என்றால் இடம் அல்லவா?

    நல்ல கற்பனைதான். ஒரு பரிதியைப் பார்த்துப் பல பரிதிகள் உதித்தாற்போலே போலே செந்தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்களாம். நன்று, நன்று.

    வழக்கம் போல - நன்றி!

    ReplyDelete
  2. "தளம் = தளம் என்றால் இலை"

    oru "ல்" extra typo...sorry...:)

    ReplyDelete