Saturday, May 26, 2012

முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி.

மீன் பிடிக்கும் வலையையை கொலை கருவியாகப் பார்த்தார் வள்ளலார்.

கவிஞர்கள் என்றுமே உயிர்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்.

முத்தொள்ளாயிரம் என்ற சங்க இலக்கியத்தில், கூடு இழந்த சிலந்தியைப் பற்றி இங்கு ஒரு கவிஞர் கவல்கிறார்.

இலங்கை வேல் கிள்ளி என்று ஒரு அரசன். அவன் பிறந்தது ரேவதி நட்சத்திரத்தில் 

அவன் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

ஒரே பாட்டும்,கூத்தும் ஊரே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

கவிஞர் பார்க்கிறார். இவ்வளவு கோலா கலம் என்றால் வீடு எல்லாம் வெள்ளை அடிப்பார்கள் தானே?

அதற்கு முன்னால் ஒட்டடை அடிப்பார்கள்..அப்ப அந்த சிலந்தி அதன் வீட்டினை இழக்குமே என்று கவலைப் படுகிறார். 


அந்தணர் ஆவொடு பொன் பெற்றார்நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் -எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ?
சிலம்பி தன் கூடிழந்தவாறு

அந்தணர் = அந்தணர்கள்

ஆவொடு = பசு மாடு மற்றும்

பொன் பெற்றார் = பொன் பர்சில்களைப் பெற்றுச் சென்றனர்

நாவலர் = எழுத்தாளர்கள்/புலவர்கள்

மந்தரம் போல் = மந்திர மலையை போல

மாண்ட களிறு ஊர்ந்தார் = பெரிய யானையை பரிசாகப் பெற்று அதன்

மேல் ஊர்ந்து சென்றனர்

எந்தை = எம்முடைய தந்தை

இலங்கிலைவேல் கிள்ளி = இலங்கிலைவேல் கிள்ளி

இரேவதி நாள் என்னோ? = பிறந்த ரேவதி நட்சத்திரமான இன்று

சிலம்பி = சிலந்தி

தன் கூடிழந்தவாறு = தன்னுடைய கூட்டினை இழந்தது

இது அந்த சிலந்திக்கு மட்டுமா பாடிய பாடல்.

உலகில் எத்தனையோ சந்தோஷங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இதயம் ஏதோ ஒரு சோகத்தில் அழது கொண்டுதான் இருக்கும்.

அந்த உயிர் தான் இந்த பாடலில் வரும் சிலந்தியோ ?

1 comment:

  1. சிலந்தி அழுவதில் வியப்பில்லை, புலவர் அதை நினைத்து அழுவதுதான் வியப்பு.

    ReplyDelete