Monday, May 7, 2012

சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


சிலப்பதிகாரம் - இராமன் ஏன் கானகம் போனான்?


அசதி ஆடல் என்று தமிழ் பக்தி இலக்கியத்தில் ஒரு பகுதி.

இறைவன் மேல் அதீத அன்பின் காரணமாக அவனை கிண்டல் செய்வது, கேலி செய்வது, நண்பன் போல் நினைத்து பாடுவது என்று உண்டு.

சுந்தரர் அப்படி பாடியவர்.

காளமேகம் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

இரட்டை புலவர்கள் பாடி இருக்கிறார்கள் ('கூறு சங்கு கொட்டோசை அல்லாமால் சோறு கண்ட மூளி யார் சொல்' என்று சிவன் கோவிலில் கொட்டு சப்தம் தான் இருக்கிறது, சோறு இல்லை என்று கேலி செய்து பாடி இருக்கிறார்கள்).

இராமன் கானகம் போனது மிக மிக துக்ககரமான ஒரு நிகழ்ச்சி. 

உலகமே அழுதது என்பான் கம்பன். 

தாயின் வயிற்றில் இருந்த கரு அழுதது என்பான்.

அந்த நிகழ்ச்சியை ஒரு கேலிப் பாட்டாக பாடுகிறார் இளங்கோ அடிகள். 

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சிலப்பதிகாரம் கம்ப இராமாயணத்திற்கு முன்னால் எழுதப்பட்ட காப்பியம்.

"இராமா, நீ ஏன் காட்டிலும் மேட்டிலும் கல்லும் முள்ளும் குத்த கானகம் போனாய் தெரியுமா ?

அன்று, மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டு, அவனை ஏமாற்றி, ஓரடியால் பூவுலகும், மற்றோரடியால் மேலுலகும் அளந்து பின் மூன்றாவது அடி அவன் தலை மேலேயே வைத்து, உன்னை நம்பி நீயே அளந்து எடுத்துக்கொள் என்றவனை நீ ஏமாற்றினாய்..அந்த பாவம் இன்று நீ, இந்த மண் எல்லாம் கால் நோவ நடக்கிறாய்" என்று இளங்கோ அடிகள் பாடுகிறார். 

(ஏன் கல்லும் முள்ளும் குத்திற்று? 

ரதன் பாதுகையை வாங்கி கொண்டு சென்று விட்டான். 

காலணி இல்லை.)


அந்தப் பாடல் 



மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;

மூவுலகும் = மூன்று உலகும்

ஈரடியான் = இரண்டு அடியால்

முறைநிரம்பா = முறையாக முடியாமல் (இன்னும் ஒரு அடி பாக்கி இருக்கிறது)

வகைமுடியத் = அதை முடிக்க

தாவிய = உயர்ந்த

சேவடி = செம்மையான திருவடி

சேப்பத் = சிவக்க

தம்பியொடுங் = தம்பியான லக்ஷ்மனனோடு

கான்போந்து = கானகம் போன

சோவரணும் = சோ + அரனும் = செம்மையாக காக்கப் பட்ட அரணும் (மதில்)

போர்மடியத் = போரில் மடிய

தொல்லிலங்கை = தொன்மையான (பழமையான) இலங்கை

கட்டழித்த = அதன் கட்டுகோப்பை அழித்த

சேவகன் = அடியார்க்கு அடியவன் = சேவகன்

சீர் = பெருமை

கேளாத செவி = கேட்கத செவி

யென்ன செவியே = என்ன செவியே ?

திருமால் = திரு மால்

சீர் = பெருமை

கேளாத செவியென்ன செவியே ; = கேளாத செவி என்ன செவியே 


கேலி செய்வது போல் இருந்தாலும், இனிமையான பாடல்.

4 comments:

  1. இரசிக்கத் தகுந்த பாடல். விளக்கியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அற்புதம்

    உமாராம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளங்கோ அடிகளுக்கு...!

      Delete
  3. இப்படியும் உரிமை கொண்டாடி இறைவனையே கேலி செய்த புலவர்கள் வாழ்ந்த பூமி இது.

    ReplyDelete