Tuesday, May 29, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


விபீஷணனை தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

தாரை புலம்பலும், மண்டோதரி புலம்பலும் மிக மிக அர்த்தம் உள்ள புலம்பல்கள்.

அவர்களின் அறிவு திறம் வெளிப்படும் இடம்.

சோகமும், விரக்தியும், மனச் சோர்வும், கவித்துவமும் நிறைந்த பாடல்கள்.


மடோதரியின் புலம்பலில் இருந்து ஒரு பாடல்.


இராவணன் இறந்ததற்கு எவ்வளவோ காரணங்கள்...

அவன் ஜானகி மேல் கொண்ட காதல்.

ஜானகியின் கற்பு.

சூர்பனகியின் இழந்த மூக்கு

தசரதனின் கட்டளை

அதை ஏற்று வந்த இராமனின் பணிவு

எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரனின் தவம்

இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து இராவணின் உயிரை கொண்டு சென்று விட்டது என்கிறாள்.




காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும்அவர்தம் கற்பும்
ஏந்து புயத்து இராவணனார் காதலும்அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான்தயரதனார்பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும்கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்றுஅம்மா!


காந்தையருக்கு = பெண்களுக்கு (காந்தள் மலரை போன்ற மென்மையானவர்களுக்கு)

அணி அனைய = அணிகலம் போன்ற (பெண்களில் சிறந்த)

சானகியார் = ஜானகியின்

பேர் அழகும், = மிக சிறந்த அழகும்

அவர்தம் கற்பும் = அவருடைய கற்பும்

ஏந்து புயத்து = உயர்ந்த கைகளை கொண்ட

இராவணனார் காதலும், = இராவணின் காதலும்

அச்சூர்ப்பணகை = அந்த சூர்பனகை

இழந்த மூக்கும், = இழந்த மூக்கும்

வேந்தர் பிரான், = அரசர்களின் தலைவனான

தயரதனார் =தசரதனின்

,பணியதனால் = கட்டளையால்

வெங் கானில் = கொடுமையான கானகத்தில்

விரதம் பூண்டு = விரதம் மேற்கொண்டு

போந்ததுவும், = இராமன் போனதுவும்

கடைமுறையே = எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான

புரந்தரனார் = இந்திரன்

பெருந் தவமாய்ப் = செய்த பெரும் தவமாய்

போயிற்றுஅம்மா! = ஆனது அம்மா


எனக்கு மண்டோதரியின் புலம்பலை படிக்கும் போது எல்லாம், என்னோவோ அவள் இராமனின் வீரத்தை அவ்வளவு பெரிதாக நினைக்கவில்லையோ என்று தான் தோன்றுகிறது.

இராவணன் இறந்ததற்கு காரணம் என்று பெரிய பட்டியலை சொல்லி, அதில் இராமனின் வீரம், அவனுடைய ஆற்றல் என்று எதையும் சொல்லாமல் விடுகிறாள்.

இன்னும் சில பாடல்கள் உள்ளன.

வரும் blog - குகளில் அவற்றை பார்க்கலாம்.

அதன் பின், நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று "கமெண்ட்" பாக்ஸ்-இல் பதிவு செய்யுங்கள்.


(Appeal: If you like this blog, please click g+1 below to express your liking)


1 comment:

  1. அது என்ன இந்திரனின் தவம்? புரியவில்லையே?

    ReplyDelete