Monday, May 21, 2012

பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள்


பெரிய புராணம் - பனியில் நனைந்த மலை மகள் 

தமிழ் இலக்கியத்தில் வர்ணைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி கட்டுரையே எழுதலாம்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பனி விழும் மலைகளை பற்றி வர்ணிக்கிறார்.

படித்துப் பாருங்கள், காதோரம் குளிர் அடிக்கும்....

அளிக்குலங்கள் சுளித்தகலவரவிந்த முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல் லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியாற்
குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும்;

பதம் பிரிப்போமா ?


அளிக் குலங்கள் சுளித்து அகலஅரவிந்தம் முகம் புலர 
பளிங்கு மணி மரகத வல்லியிர் கோத்த பான்மை என
துளித் தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பணியால்
குளிர் குடைந்து வெண் படாம் போர்த்தனைய குன்றுகளும்

பனியினால் தாமரை மலராமல் கூம்பி இருக்கிறது. அதை கண்ட வண்டுகள் முகம் சுளித்து வேறு இடம் சென்று விட்டன.

மரகத கொடியில் பளிங்கு மணியை கோர்த்தாற்போல் புல்லின் நுனியில் பனித் துளிகள் முத்து முத்தாக நிற்கின்றன.

மலையின் மேல் பனி மூடி இருக்கிறது.

அது என்னமோ குளிருக்கு அந்த மலைகள் வெள்ளை கம்பளி போர்த்த மாதிரி இருக்கிறது.

பொருள்

அளிக் குலங்கள்= வண்டு இனங்கள்.

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே 
(அபிராமி அந்தாதி)

சுளித்து அகல = முகம் சுளித்து அகல

அரவிந்தம் = தாமரை

முகம் புலர = முகம் சுருங்க. தாமரை முகம் வாடி சுருங்கி நின்றதால், வண்டு அதனை விட்டு நீங்கி சென்றது.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

தாமரை முகம் மலர்ந்து வரவேற்காததால், வண்டு கோவித்துக் கொண்டு போய் விட்டது

ஏர்மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர் எனைப்பலர் உள்ள இவ்வூரில் உன்தன்
மார்வு தழுவுதற் காசை யின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு
கூர்மழை போல்பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார்மணற் குன்றில் புலர நின்றேன் வாசு தேவா! உன்வரவு பார்த்தே.(பிரபந்தம்)

பளிங்கு மணி = பளிங்கினால் செய்த மணி

மரகத வல்லியிர் = மரகத கொடியில்

கோத்த பான்மை என =கோர்த்து எடுத்த மாதிரி

துளித் தலை மேல் = தன் தலை மேல்ஒரு  துளி தாங்கி நிற்கும்

அறுகு = புல்

பனி தொடுத்து =பனித்துளியையை  கொண்டு

அசைய = அசைய

சூழ் பணியால் =சூழ்ந்திருக்கும் பனியால்

குளிர் குடைந்து = குளிரில் நடுங்கி

வெண் படாம் =வெண்மையான போர்வையை

போர்த்தனைய குன்றுகளும் = போர்த்தியதை போன்ற குன்றுகளும்



3 comments:

  1. என்ன அருமையான பாட்டு! அப்படியே அந்த மலையையும், குளிரையும் உணர வைக்கின்றது.

    ReplyDelete
  2. Aaha , arumai. Pullin mel irukum panithuli will be really beautiful to see in the early morning.
    revathi.

    ReplyDelete
  3. மேலே கொடுத்த பிரபந்தத்துக்கும் உரை எழுதலாமே! நல்லா இருக்கும் போல இருக்கிறதே!

    ReplyDelete