Tuesday, May 1, 2012

திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை



திருப்புகழ் - காலன் முதுகில் ஒரு அறை

முருகனின் பக்தர்களை காலன் அணுகும் போது, முருகன் அவன் முதுகில் ஒரு அறை வைப்பாராம்.

அதில் அவன் முதுகு இரண்டா விரிந்த மாதிரி ஆயிருமாம்...என்ன ஒரு அழகான கற்பனை.




பாண மலரது தைக்கும் ...... படியாலே
 பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
 நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
 நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
 சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
 தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
 காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
 காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


பதம் பிரிக்காமல் அருணகிரிநாதரின் பாடல்களை புரிந்து கொள்ளவது எளிதல்ல....


பாண மலர் அது தைக்கும் படியாலே
பாவி இளமதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
நானும் மையலில் இளைக்கும் தரமேதான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா
காலன் முதுகை விரிக்கும் பெருமாளே




பாண மலர் = மன்மதனின் மலர் அம்புகள் (பாணம் = அம்பு)


அது தைக்கும் படியாலே = அது என் மார்பில் தைக்கும் படியாகவும்


பாவி இளமதி = இரக்கமிலாத அந்த இளைய நிலா

கக்கும் கனலாலே = பொழியும் கனலாலே (வெப்பத்தாலே)

நாணம் அழிய = வெட்கம் போக

உரைக்கும் குயிலாலே = கூவும் குயிலாலே

நானும் = அருணகிரியான நான் (தன்னை ஒரு பெண்ணாக நினைத்து எழுதுகிறார்)

மையலில் இளைக்கும் தரமேதான் =காதலில் இளைக்கும் படியாக

சேணில் அரிவை = சேய்மையில் (விண்ணுலகில்) உள்ள பெண்ணை (தெய்வ நாயகியை) 

அணைக்கும் திரு மார்பா = கட்டி அணைக்கும் திரு மார்பனே

தேவர் மகுடம் = தேவர்களின் மகுடம்

மணக்கும் கழல் வீரா = அவர்கள் எப்போதும் முர்கனின் காலில் விழுந்து வணங்குவதால், 
அவர்கள் மகுடத்தில் உள்ள மணம் (பூ, சந்தனம் போன்ற பொருள்களின் மணம்) முருகனின் காலில் மணக்கிறது

காண = காணக்கூடிய

அருணையில் நிற்கும் கதிர் வேலா = திருவண்ணாமலையில் நிற்கும் கதிர்வேலா

காலன் = காலனின்

முதுகை விரிக்கும் பெருமாளே = முதுகை விரிக்கும் பெருமாளே


1 comment:

  1. "பாவி இளமதி கக்கும் கனலாலே"

    இந்த ஒரு வரிக்கே பல்லாயிரம் பொன் கொடுக்கலாம்!

    ReplyDelete