Saturday, May 26, 2012

கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


சாக யாருக்குத்தான் பிடிக்கும்? சிரித்துக் கொண்டே யாராவது இறந்திருக்கிறார்களா?

வாழ்க்கை என்பதே சாவோடு கொண்ட ஒரு தொடர் போராட்டாம் தானோ?

"சாமாறே விரைகின்றேன்" என்றார் மணி வாசகர்.

அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரை காலனை கண்டு பயந்திருக்கிறார்கள்.

"காலா, நீ கிட்டே வா, உன்னை எட்டி உதைக்கிறேன்" என்று அவர்கள் சொன்னாலும், அந்த பயம் தெரியாமல் இல்லை.

பட்டினத்தார் கூட இறப்புக்கு அப்புறம் என்ன ஆகுமோ என்று ரொம்ப வாழும் போது கவலைப் பட்டிருக்கிறார்.


இராமாயணத்தில் இராவணன் இறந்து கிடக்கிறான்.

இறந்த அவன் உடலை கம்பன் வர்ணிக்கும் அழகே அழகு.

சாவை கூட இவ்வளவு கவித்துவமாக சொல்ல முடியுமா ?

இறந்து கிடக்கும் அவன் முகம் உயிரோடு இருந்ததை விட மூன்று மடங்கு பொலிவாய் இருந்ததாம்.




வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்கவினையம் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல் அடங்கஆற்றல் தேயத்
தம்மடங்கு முனிவரையும் தலை அடங்க நிலை அடங்கச் சாய்ந்த நாளின்
மும்மடங்கு பொலிந்தனஅம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா!)

வெம்மடங்கல் = அடங்கல் என்றால் சிங்கம். வெம் + அடங்கல் = கொடிய, ஆக்ரோஷமான சிங்கம்

வெகுண்டனைய சினம் அடங்க = வெகுண்ட அந்த சிங்கத்தின் கோவம் அடங்க

மனம் அடங்க = அலை பாயும் இராவணின் மனம் அடங்க

வினையம் வீயத் = வினையும் என்றால் சூழ்ச்சி. வீய என்றால் வீழ.

தெம்மடங்கப் = பகைவர்களை அடக்கிய

பொருதடக்கைச் = பொருதல் = சண்டை இடுதல்; தடக்கை = வலிய, பெரிய கை. இராவணனுக்கு இருபது கைகள்

செயல் அடங்க = அவற்றின் செயல் அடங்க

மயல் அடங்க = ஜானகியின் மேல் கொண்ட மையில் அடங்க

ஆற்றல் தேயத் = அவனுடைய ஆற்றல் எல்லாம் தேய

தம்மடங்கு முனிவரையும் = புலன்களை தம்முள் அடக்கிய முனிவர்களின்

தலை அடங்க = அவன் முன் தலை வணங்கி அடங்கி இருக்க

நிலை அடங்கச் = அப்படி செய்த நிலை அடங்க. இனிமேல் முனிவர்கள் அவனுக்கு பயந்து அப்படி இருக்க வேண்டாம்

சாய்ந்த நாளின் = எல்லாம் அடங்கி சாய்ந்த நாளில்

மும்மடங்கு பொலிந்தன = மூன்று மடங்கு பொலிந்தன

அம்முறை துறந்தான் = அந்த வழி தவறிய (முறை இல்லாமல்
வாழ்ந்தவன் இராவணன்)

உயிர் துறந்த முகங்கள் அம்மா! = உயிர் துறந்த முகங்கள். "முகங்கள்" என்று அவனுக்கு மட்டும் தான் சொல்ல முடியும் ...பத்து முகங்கள் ஆயிற்றே !


எத்தனை "அடங்கல்" இந்தப் பாட்டில். எல்லாம் அடங்கி விட்டது.

அவனுடைய கோவம், ஆற்றல், தவ வலிமை, ஜானகி மேல் கொண்ட காதல் எல்லாம் அடங்கிற்று..ஒண்ணே ஒண்ணைத் தவிர...

அவன் முகத்தில் ஜொலிக்கும் அந்த கம்பீரம்...அது முன்னை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.

ஏன் அப்படி?

உரை எழுதிய பெரியவர்கள் இராமனின் அம்பு பட்டதால் என்று கூறுகிறார்கள்.

எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது...

ஒரு வேளை ஜானகிக்காக தான் உயிரையும் கொடுத்தது அவளுக்கு தெரிய வரும், அப்போதாவது அவளுக்கு தன் மேல் சிறிது காதலாவது, அல்லது கருணையாவது வரும் என்று கடைசி நிமிடத்தில் நினைத்து சந்தோஷப் பட்டிருப்பானோ?






1 comment:

  1. இராவணன் ஒரு ராஜாதி ராஜா, ஆனால் ஒரு விஷயுத்தில் முறை தவறிவிட்டான். அதை என்ன அழகாகக் கம்பர் எழுதியுள்ளார்!

    ஆனால், உன் கற்பனையும் நல்ல கற்பனைதான்.

    இராமன் அம்பு பட்டதால் பொலிந்தான் என்பது, சும்மா இந்த பக்திமான்களின் கற்பனை வளம் இல்லாத சப்பைக்கட்டு.

    ReplyDelete