Monday, May 7, 2012

கம்ப இராமாயணம் - அது தான் வந்துட்டோம்ல


கம்ப இராமாயணம் - எங்க போவோம்? 

கம்பன் படைத்த பாத்திரங்களில் சொல் வன்மை படைத்த பாத்திரங்கள் அனுமனும் விச்வாமித்ரனும்.

அவர்கள் வாயிலாக கம்பன் சொல்லில் விளையாடுகிறான்.

தசரதன் அரண்மனைக்கு விஸ்வாமித்திரன் வந்திருக்கிறான். "என்ன விஷயம்" என்று தசரதன் கேட்கிறான்.

விஸ்வாமித்திரன் பதில் சொல்கிறான்

"என்னை போன்ற முனிவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் எங்க போவோம் ?

சிவனிடம் போவோம், இல்லேன்னா திருமாலிடம் போவோம், இல்லேன்னா பிரமனிடம் போவோம்,
அதுவும் இல்லைனா இந்திரனிடம் போவோம், இல்லேனா அயோத்திக்குப் போவோம்" என்று வந்த காரியத்தை சொல்கிறான்.

அதாவது எனக்கு ஒரு கஷ்டம் இருக்கிறது, அதை தீர்க்க வேண்டி எங்கெல்லாமோ அலைந்து திரிந்து விட்டு இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்கிறான்.


என் அனைய முனிவரரும் இமையவரும்
இடையூறு ஒன்று உடையரானால்.
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும்.
பாற்கடலும். பதும பீடத்து
அந் நகரும். கற்பக நாட்டு அணி நகரும்.
மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும். அல்லாது. புகல் உண்டோ?-
இகல் கடந்த புலவு வேலோய்!

என் அனைய = என்னை போன்ற

முனிவரரும் = முனிவர்களும்

இமையவரும் = வானவர்களும்

இடையூறு = துன்பம்

ஒன்று உடையரானால் = ஒன்று உண்டானால்

பல் நகமும் நகு = பல் தெரியும்படி பளிச்சென சிரிக்கும் (நகமும் = நகும் = சிரிக்கும்)

வெள்ளிப் பனிவரையும். = வெள்ளியை உருக்கி வார்த்தார் போல்
இருக்கும் பனிமலை (கைலாய மலை)

பாற்கடலும். = பாற்கடலும் (திருமால்)

பதும பீடத்து = தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் (பிரம்மாவும்)

அந் நகரும். = அந்த சத்ய லோகமும்

கற்பக = கற்பக மரம் உள்ள

நாட்டு அணி நகரும் = இந்திர லோகமும்

மணி மாட = மாடங்களில் உயர்ந்த மணிகள் பொருத்தப்பட்ட

அயோத்தி என்னும் = அயோத்தி என்ற

பொன் நகரும். = பொன் போன்ற நகரும்

அல்லாது. = அன்றி

புகல் உண்டோ? = வேறு போக்கிடம் ஏது?

இகல் =பகை

கடந்த = கடந்த, வென்ற

புலவு வேலோய்! = இரத்தம் தோய்ந்த வேலை உடையவனே

நீ எல்லாரையும் விட பெரிய ஆளு. உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என்று எவ்வளவு நாசுக்காக ஐஸ் வைக்கிறான்.



1 comment:

  1. என்னை இந்தப் பாடல் ஒரு புன்முறுவல் செய்ய வைத்தது! நன்றி!

    ReplyDelete