சிலப்பதிகாரம் - திரும்பி வந்த கோவலன்
சிலப்பதிகாரத்தில் முக்கியமான இடம், கோவலன் எல்லாம் தொலைத்து மீண்டும் கண்ணகியை காண வரும் நேரம்.
அவன் அவளிடம் எப்படி சொல்கிறான் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்கிறாள்....
கோடைக் கால மரம் இலையெல்லாம் இழந்து தனித்து நிற்பது போல, தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் தொலைத்து விட்டு திரும்பி வருகிறான் கோவலன்.
வந்தவன் கண்ணகியை வீடெங்கும் தேடுகிறான்.
எங்கும் காணவில்லை. படுக்கை அறைக்குப் போகிறான்.
அங்கே கண்ணகி சோர்ந்து படுத்து இருக்கிறாள்.
கோ: உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..சொல்லவே வெட்கமா இருக்கு
க: ம்ம்ம்
கோ: கண்ட பெண்கள் பின்னால் சுத்தி, இருந்த செல்வத்தை எல்லாம் அழித்து விட்டேன். கைல காலணா இல்லை....
கண்ணகி அப்பவும் கோவப் படாமல், என் சிலம்பு இருக்கிறது...அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள்
‘நீடிய காவலன் போலும், கடைத்தலையான் வந்து-நம்
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள்-குன்றம் தொலைந்த;
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
‘சிலம்பு உள; கொண்ம்’ என-
------------------------------------------------------------------------------
நீடிய காவலன் போலும் = (உள்ளிருந்த படியே கண்ணகி உணர்கிறாள், வந்திருப்பது கோவலன் என்று.) வந்திருப்பது நம் அரசன் போலும்.
கடைத்தலையான் வந்து =நம் வாசல் வந்து
நம் கோவலன்!’ என்றாள் = நம்முடைய கோவலன் என்றாள்
ஓர் குற்றிளையாள். = ஒரு சிறிய வேலைகள் செய்யும் இளையவள்
கோவலனும் = கோவலனும்
பாடு அமை = பெருமை உள்ள
சேக்கையுள் புக்கு = படுக்கை அறைக்குள் சென்று
தன் பைந்தொடி = தன் காதலி
வாடிய மேனி வருத்தம் கண்டு = வருந்தி வாடிய மேனியின் வருத்தம் கண்டு
யாவும் = அனைத்தும்
சலம் புணர் கொள்கைச் = தீய கொள்கைகளை உடைய
சலதியொடு ஆடி = பெண்களோடு ஆடி
குலம் தரு வான் பொருள் = நம் மூதாதையர்கள் சேர்த்து வைத்த வானளாவிய பொருட்களை
குன்றம் தொலைந்த = குன்று போல் குவிந்த செல்வத்தை தொலைத்து
இலம்பாடு = ஒன்றும் இல்லாமல் வந்து இருக்கிறேன்
நாணுத் தரும் எனக்கு’ என்ன = எனக்கு சொல்லவே வெட்கமா இருக்கு
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி = நலம் பயக்கும், சிரித்த முகத்தை காட்டி
சிலம்பு உள; கொண்ம்’ என = என் சிலம்பு உள்ளது, கொள்க என்றாள்
உன்னிப்பாக ரசிக்க வேண்டிய சில இடங்கள்.
தமிழில் மலைக்கு வேறு வேறு பெயர்கள் உண்டு.
மலை என்றால் மிகப் பெரியது. இமய மலை
வரை என்றாலும் மலைதான் ஆனால் தொடர்ந்து விரிந்த மலைக்கு வரை என்று பெயர். "வரையினை எடுத்த தோளும்"
அதை விட சின்னது குன்று.
அதை விட சின்னது சிலம்பு
கோவலன் குன்று போன்ற குலம் தரு செல்வத்தை தொலைத்தான்.
கண்ணகி சிலம்பை கொடுத்தாள்.
தமிழ் விளையாடுகிறது
இவ்வளவு அழகான கவிதையை நீங்கள் இவ்வளவு அழகாக எழுதியதால் தான் நன்றாக அனுபவிக்க முடிந்தது. நன்றி. நன்றி.
ReplyDeleteThanks for your nice feedabck. It encourages me to write more.
Deleteஅற்புதமான கவிதை! எப்படித்தான் எவ்வளவு அமைதியாக இருக்க முடிந்ததோ கண்ணகிக்கு!
ReplyDeleteசிலம்பு என்றால் சிறிய மலை என்பது இப்போதுதான் தெரிந்தது.
அருமையான விளக்கம். மிக்க நன்றி!