Thursday, July 5, 2012

நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும்


நீதி நெறி விளக்கம் - கல்வியும் காமமும் 


நீதி நெறி விளக்கம் என்ற நூல் குமர குருபரர் எழுதியது.

தமிழில் உள்ள அற நெறி நூல்களில் மிக மிக அருமையான நூல்.

கல்வி, ஆரம்பிக்கும் போது கஷ்டமாய் இருக்கும்.

இரவு பகலாய் கண் விழித்து படிக்க வேண்டும்.

மனப்பாடம் செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் பரீட்சை எழுத வேண்டும்.

முதலில் கடினமாய் இருந்தாலும், பின் நல்ல வேலை கிடைத்து, நிறைய பணம் சம்பாதிக்கும் போது, கல்வியால் புகழ் வரும் போது சந்தோஷமாய் இருக்கும். கல்வியின் தொடக்கம் கடினம், முடிவு இனிமை.

காமம், முதலில் இன்பம் தருவது போல் இருக்கும். ஆனால் போகப் போகப் அதனால் வரும் துன்பம் பெரிது. "நெடுங்காமம்" என்கிறார். இதற்கு இரண்டு பொருள் சொல்கிறார்கள்.

ஒன்று, வரம்பற்ற காமம். ஒரு வழிமுறை இல்லாத காமம். விதிகளை மீறிய காமம். முறையற்ற காமம்.

இன்னொன்று, காலங்கடந்து வரும் காமம்.

உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.






தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும்
மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்குச் சின்னீர வின்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது.    

கொஞ்சம் சீர் பிரிப்போம்:

தொடங்குகால் துன்பாமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி - நெடுங்காமம்
முற்பயக்கும் சின்னீர இன்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது

பொருள்:

தொடங்குகால் = தொடங்கும்போது

துன்பாமாய் = கடினமாய் இருக்கும்

இன்பம் பயக்கும்= பின் இன்பம் பயக்கும் (எது ?)

மடம் கொன்று = மடமையை கொன்று

அறிவு அகற்றும் கல்வி = அறிவின் எல்லையை அகலமாகும் கல்வி

நெடுங்காமம் = வரம்பற்ற காமம்

முற்பயக்கும் = முதலில் இன்பமாய் இருக்கும்

சின்னீர இன்பத்தின் = சிறிதுகாலம் அந்த இன்பம் இருக்கும்

முற்றிழாய் = பெண்ணே

பிற்பயக்கும் பீழை பெரிது = அந்த மாதிரி காமத்தினால் பின்னால் வரும்

துன்பம் மிகப் பெரிது

No comments:

Post a Comment