Friday, July 13, 2012

குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


இதயம் என்னவோ ஒரு கை அளவுதான்.

அதில் காதல்  கடலளவு வந்தால் எப்படி அது கொள்ளும்?

நெஞ்சம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு.

கேட்கும் ஒலி எல்லாம் அவனாக.

பார்க்கும் ஒளி எல்லாம் அவனாக.

உடலோடு உரசும் உணர்வெல்லாம் அவனாக...

உண்ணும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணன் என்று ஆழ்வார்கள் சொன்னது மாதிரி...

பசி போகும்...பாடல் வரும்...

தூக்கம் போகும்...ஏக்கம் வரும்...

நாள் எது, தேதி என்று தெரியாது...

இத்தனை அவஸ்தையும் இந்த சின்ன மனதிற்குள்...தாங்க முடியுமா ?

அவள், தோட்டத்தில் உள்ள பலா மரத்தைப் பார்க்கிறாள்.

பெரிய பலாப் பழம் பழத்து தொங்குகிறது.

அதன் காம்போ மிக மிக சிறியது...

அவள் மனம் நினைக்கிறது...

"ம்ம்ம்...இந்த பலாப் பழம் போன்ற என் பெரிய இனிய காதலுக்கு, அதை தாங்கி நிற்கும் சின்ன காம்பு போல என் மனம்"...





வேரல்வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே!

வேரல்வேலி = மூங்கிலில் ஆன வேலி

வேர்க்கோட் = வேரில் பழுத்த

பலவின் = பலா மரங்களை

சாரல் நாட!  = மலை நாடனே

செவ்வியை = நல்ல நாளை, திருமண நாளை,

ஆகுமதி! = சீக்கிரம் ஆக்கு, (நாள் குறி)

யார் அஃது = யார் அதை

அறிந்திசினோரே! = அறிவார்கள் ?

சாரல் = மலை ஓரம்

சிறுகோட்டுப் = சிறிய காம்பில்

பெரும்பழம் = பெரிய பழம் (பலாப் பழம்)

தூங்கியாங்கு, = தூங்குவதைப் போல்

இவள் = இவளுடைய

உயிர்தவச் சிறிது, = உயிர், மனம், இதயம் மிகச் சிறிது

காமமோ பெரிதே! = காமமோ (காதலோ) ரொம்ப பெரிது....


2 comments:

  1. sorry a very small correction.
    உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை,எல்லாம் கண்ணன்.

    ReplyDelete
  2. அருமையான அதே சமயம் எளிமையான விளக்கம், தமிழ் இலக்கியம் பக்கம் நம்ம தமிழ் மக்கள் யாரும் தலை வச்சு படுக்காம இருக்கறதுக்கு தமிழ் செய்யுட்களோட complications தான் காரணம் னு நான் நெனைக்கறேன் , இது உண்மையா ரசனை மிகுந்த கவித்துவமான தமிழ் பாடல்களை மத்தவங்களுக்கு கொண்டு போய் சேர்க்க நல்ல வழி. உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் வாழ்த்துகள் , அப்டியே facebook ல இதே வேலையை நீங்க செஞ்சா இன்னும் பலருக்கு போய் சேரும் , what do u say?

    ReplyDelete