Friday, November 16, 2012

ராமாயணம் - அறிவின் பயன்


ராமாயணம் - அறிவின் பயன்


சீதை உப்பரிகையில் இருந்து இராமனைப் பார்த்தாள். பார்த்தவுடன் காதல் கொண்டாள். பின்னால் சிவ தனுசை இராமன் வளைத்தான். வில்லை வளைத்தவனுக்கு மாலை இட வருகிறாள் சீதை. 

வில்லை வளைத்தவன் அவள் பார்த்த அதே வாலிபன் தானா என்று அவளுக்குத் தெரியாது. 

அவள் மனம் பட பட வென்று அடித்துக் கொள்கிறது. அவனாய் இருக்குமோ ? அவனாய் இருக்கணுமே ...அவனாய் இல்லாட்டி என்ன செய்வது என்று குழம்புகிறாள். 

திருமண மண்டபம் வருகிறாள். இராமனைப் பார்க்கிறாள். மனதில் ஒரு நிம்மதி. அப்பாட...இவன் தான் அவன் என்று அமைதி கொள்கிறாள்....

இது என்ன பெரிய விஷயம் ?

அறிவுள்ளவர்கள் இறைவனை தேடுவார்கள். அவனை அறிந்து கொள்ள முயல்வார்கள். அவன் திருவடி அடைய முயற்சி செய்வார்கள். நிறைய புத்தகம் படிப்பார்கள்...பெரியவர்கள் சொல்வதை கேட்பார்கள்....இறைவன் இதுவா, இறைவன் அதுவா...இதுவாக இருக்குமா ? அதுவாக இருக்குமா என்று கிடந்து குழம்புவார்கள். இறைவன் என்று ஒருவன் இருந்தால் ஏன் இவ்வளவு துன்பமும் துயரமும் என்று குழம்பி கிடப்பார்கள். 

முடிவில் அவனை அவர்கள் அறியாலாம். அப்படி அவர்கள் கடைசியில் இறைவனை அறியும்போது அவர்கள் மனதில் எப்படி ஒரு நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் பிறக்குமோ அது போல் கடைசியில் இராமனை கண்ட சீதைக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறந்தது...

எப்படி  உதாரணம் ? 

அரை குறை அறிவு நம்மை குழப்புகிறது. இதுவா, அதுவா, இவனா, அவனா என்று மனம் பேதலிக்கிறது. அறிவு முதிர்ச்சி அடையும் போது இறைவனை அறிய முடிகிறது. அப்படி அறிவின் முதிர்ச்சி அடைந்தவர்களின் மன நிலையை ஒத்திருந்தது சீதையின் மன நிலை.

பாடல் 


கணங் குழை. ‘கருத்தின் உறை
   கள்வன் எனல் ஆனான்.
வணங்கு வில் இறுத்தவன்’
   எனத் துயர் மறந்தாள்;
அணங்குறும் அவிச்சை கெட.
   விச்சையின் அகம்பாடு
உணர்ந்து. அறிவு முற்று பயன்
   உற்றவரை ஒத்தாள்.

பொருள் 

கணங் = பொருந்திய

குழை = காதில் அணியும் ஒரு வகை ஆபரணம்

கருத்தின் = கருத்தில், மனத்தில்

உறை = உறைகின்ற, வசிக்கின்ற

கள்வன் = கள்வன், அவள் மனதை அவள் அனுமதி இல்லாமல் கொள்ளை கொண்டதால் அவன் கள்வன். "உள்ளம் கவர் கள்வன் " என்பார் ஞான சம்பந்தர்

எனல் ஆனான்.= அவனே ஆனான், யார் ?

வணங்கு வில் = வளைகின்ற வில்லை

இறுத்தவன்  = உடைத்தவன்

எனத் = என்று அறிந்து

 துயர் மறந்தாள்; = துன்பத்தை மறந்தாள் 

அணங்குறும் = வருத்தப்படும், கவலைப் படும்

அவிச்சை கெட = பொய்யான ஆன்மீக அறிவு

விச்சையின் = மெய் அறிவின்

அகம்பாடு = உள் அர்த்தங்களை  

உணர்ந்து. = அனுபவ பூர்வமாக உணர்ந்து 

அறிவு முற்று = முதிர்ந்த அறிவின்

பயன் = பயன் 

உற்றவரை = அடைந்தவர்களை

ஒத்தாள். = ஒத்திருந்தாள்

நீங்கள் கேட்கலாம்...இதில் இறைவன் எங்கிருந்து வந்தான் என்று. கம்பர் ஒண்ணும் இறைவனை பற்றி சொல்லவில்லை இந்த பாட்டில் என்று நீங்கள் சொல்லலாம். 

மீண்டும் ஒரு முறை படியுங்கள். எனக்குத் தோன்றியது ஒரு வேளை உங்களுக்கும் தோணலாம்...

No comments:

Post a Comment