அபிராமி அந்தாதி - கரை காணா இன்பம்
அவள் இன்னைக்கு வருவாளா ? வர்றேன்னு சொன்னாளே ? ஒரு வேளை அது நாளைக்கோ ? நான் தான் சரியாக கேட்கலையோ ? வர்றேன்னு சொன்னா வந்துருவா ? இல்ல வர்ற வழியில என்ன பிரச்சனையோ பாவம்....
அது யாரு அவ தான ? அவளை மாதிரி தான் இருக்கு.
அந்த உருவம், அந்த நடை, அவள் தான்னு நினைக்கிறேன். ஆமா, அவளே தான்....அப்பாட, ஒரு வழியா வந்துட்டாள்...அவ கிட்ட வர வர இதய துடிப்பு ஏறுகிறது...இன்னும் கிட்ட வந்துட்டாள்...லேசா வேர்க்குது...நிமிந்து பார்க்கிறாள்...மனதுக்குள் ஆளுயர அலை...அவள் கிட்ட வர வர மனதுக்கு சந்தோஷ ஊற்று குமிழியிட்டு கிளம்புகிறது...அருகில் வந்து விட்டாள்...தொடும் தூரம் தான்...அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்த மாதிரி ஒரே மகிழ்ச்சி மனதுக்குள்ளே...எங்கு பார்த்தாலும் வெள்ளம்...கரை காணா முடியாத வெள்ளப் பெருக்கு ..தத்தளிக்கிறேன் அந்த சந்தோஷ சாகரத்தில்...
மிகுந்த சந்தோஷம் வரும் போது அறிவு விடை வாங்கிக் கொண்டு போய் விடும்...ஆனால் அவளைப் பார்க்கும் போது உண்டாகும் அளவு கடந்த மகிழ்ச்சியிலும் அறிவு விடை பெற்று போகவில்லை...
அவள் அறிவையும் ஆனந்தத்தையும் ஒன்றே தருகிறாள்....
பாடல்
வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.
பொருள்
வெளிநின்ற = (எனக்கு ) வெளியில் நின்ற
நின்திருமேனியைப் = உன்னுடைய திரு மேனியை
பார்த்து,= பார்த்த
என் விழியும் = என் கண்களும்
நெஞ்சும் = மனமும்
களிநின்ற = ஆனந்தத்தின்
வெள்ளம் = வெள்ளம்
கரைகண்டது, இல்லை,= கரை காணாமல் எங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது
கருத்தினுள்ளே = என்னுடைய கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் = அப்போது கூட, தெளிவான ஞானம்
திகழ்கின்றது, = என்னுள்ளே ஒளி விடுகின்றது
என்ன திருவுளமோ? = உன் திருவுள்ளம் எதுவோ
ஒளிநின்ற கோணங்கள் = ஒளி வீசும் கோள்கள்
ஒன்பதும் மேவி உறைபவளே = ஒன்பதிலும் சென்று இருப்பவளே.
நல்ல பாட்டுக்கு, சும்மா சினிமா ஸ்டைல்ல விளக்கம். அருமை.
ReplyDelete