இராமயணம் - வாயெல்லாம் உலர்ந்தது
ஒரு ஆபத்து என்றால், நமக்கு இதயம் பட படவென்று அடித்துக் கொள்ளும், வியர்க்கும், வாயெல்லாம் உலர்ந்து போகும்.
கும்ப கர்ணன் போர் களத்திற்கு வந்திருக்கிறான். அவனை பார்க்க விபீடணன் செல்கிறான்.
விபீடணன் சென்றது கும்பகர்ணனை இராமன் பக்கம் இழுக்க. அப்படி கும்ப கர்ணன் வந்து விட்டால் அவனுக்கு ஆபத்து வராது என்ற சகோதர பாசத்தில்
கும்ப கர்னணன் நினைத்தான், எங்கே விபீடணன் மீண்டும் இராவணன் பக்கம் வந்து விடுவானோ, அப்படி வந்து விட்டால் அவனுக்கு ஆபத்து ஆயிற்றே என்று பதறுகிறான் - சகோதர பாசத்தில்.
விபீடணனை பாரத்ததும் கும்பகர்ணன் சொல்கிறான்...
"....இராவணனால் நம் குலத்தின் இயல்பு அழிந்தது. ஆனால் உன்னால் அது சரி செய்யப்பட்டு புண்ணியம் பெற்றது. உன் தோள்களைப் பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நீ என்னை பார்க்க இங்கு வந்தது எனக்கு மன உளைச்சலை தருகிறது. எங்கே உனக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று என் வாய் எல்லாம் உலர்கிறது..."
பாடல்
"குலத்து இயல்பு அழிந்ததேனும், குமர! மற்று உன்னைக் கொண்டே
புலத்தியன் மரபு மாயாப் புண்ணியம் பொருந்திற்று " என்னா,
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன்; மன்ன! வாயை
உலத்தினை, திரிய வந்தாய்; உளைகின்றது உள்ளம், அந்தோ!
பொருள்
குலத்து இயல்பு = நம் குலத்தின் இயல்பு (பெருமை)
அழிந்ததேனும், = (இராவணனால்) அழிந்தாலும்
குமர! = குமரனே (எவ்வளவு அன்போடு கூப்பிடுகிறான்)
மற்று உன்னைக் கொண்டே = உன்னை கொண்டு
புலத்தியன் மரபு = புலத்தியன் மரபு (இராவணனின் முன்னோர்)
மாயாப் = இறவா
புண்ணியம் பொருந்திற்று = புண்ணியம் அடைந்தது
என்னா = என்று
வலத்து இயல் = வெற்றியயை இயல்பாகக் கொண்ட
தோளை = (உன் ) தோள்களை
நோக்கி மகிழ்கின்றேன்; = பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன்
மன்ன! = மன்னவனே (எந்த நாட்டுக்கு மன்னன் ?)
வாயை உலத்தினை, = என் வாய் உலரும்படி
திரிய வந்தாய்; = திரும்பி வந்தாய்
உளைகின்றது உள்ளம், = என் மனம் உளைச்சல் கொள்கிறது
அந்தோ! = ஐயோ
No comments:
Post a Comment