Monday, November 26, 2012

பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பிரபந்தம் - அவ்வளவு பெரிய வாயா ?


பொய்கை ஆழ்வாரின் முதல் திரு அந்தாதியில் சில பாசுரங்கள் ஆச்சரியமானவை. மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் இறைவனின் குணங்களைப் பாடும் பொழுது, இவர் மட்டும், இறைவனின் குணங்களை நம்பாதவர் மாதிரி, நீ உலகை அளந்தாயாமே ? அவ்வளவு பெரிய திருவடியா உனக்கு ? உலகை எல்லாம் உண்டாயாமே ? அவ்வளவு பெரிய வாயா உனக்கு ? நீ எப்போ அப்படி எல்லாம் செய்தாய் என்று எனக்குத் தெரியாது என்று கூறி சந்தேகப்படுவதுபோல்  புகழ்கிறார்...

இனிமையான சந்த நயம் மிக்க பாசுரங்கள்...

பாடல்


மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோவுன் வாய்?

பொருள் 

மண்ணும் = இந்த பூமியும்

மலையும் = மலையும்

மறிகடலும் = அலை கடலும்

மாருதமும் = காற்றும்

விண்ணும் = ஆகாயத்தையும்

விழுங்கியது = நீ விழுங்கியது

மெய்யென்பர், = உண்மை என்று சொல்வார்கள்

எண்ணில் = எண்ணிப் பார்த்தால்

அலகளவு = அலகு என்றால் அடிப்படை அளவு (Unit ). அலகளவு என்றால் எந்த அலகில் அளந்து பார்த்தாலும்

கண்டசீ ராழியாய்க்கு = கடல் போன்ற குணங்களை கொண்ட உனக்கு,

அன்றிவ் = அன்று  எந்த 

வுலகளவு முண்டோவுன் வாய்? = உலகளவு உண்டோ உன் வாய் ? இந்த உலகம் கொள்ளும் அளவிற்கு பெரியதா உன் வாய் ? யசோதை வாயை திற என்ற போது, சின்ன கண்ணனாய் உன் சிறிய வாயையை திறந்து காண்பித்தாய், அதில் எல்லா உலகமும் தெரிந்தது...அப்போ உன் வாய் பெரிசால இருக்கணும்...எப்படி சின்னதாய் இருந்தது ? 


1 comment:

  1. "வஞ்சப் புகழ்ச்சி" போல, வஞ்சப் பழிப்பா?!

    ReplyDelete