Sunday, November 4, 2012

திருக்குறள் - உப்பு உற்பத்தி

திருக்குறள் - உப்பு உற்பத்தி 

உப்பு எப்படி உற்பத்தி செய்வார்கள் தெரியுமா ? 

முதலில் பாத்தி கட்டி அதில் உப்பு தண்ணீரை (கடல் நீரை)  தேக்கி வைப்பார்கள். 

சூரிய வெப்பத்தில் அந்த உப்பு நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகும். அதில் உள்ள உப்பு தங்கி விடும்.

முதலில் உப்பு நீரை இறைக்க வேண்டும். பின் அது ஆவியாகும் வரை காத்திருக்க வேண்டும். 

வள்ளுவர் இன்னொரு உப்பு உற்பத்தி முறையையை சொல்கிறார். 



ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

ஊடிப் பெறுகுவம்  = ஊடலிலும் பெறுவோம்

கொல்லோ = அசைச் சொல்

நுதல் = நெற்றி 

வெயர்ப்பக் = வியர்க்க

கூடலில் = அவளோடு கூடிய கூடலில் 

தோன்றிய உப்பு. = தோன்றிய உப்பு

அவளோடு கலந்து கூடிய பொழுது அவளின் நெற்றியில் உண்டான வியர்வையில் இருந்து வந்த உப்பை மீண்டும் அவளோடு ஊடல் கொண்டும் பெறுவேன். 

முதலில் வியர்வை வர வேண்டும். அது உலர  வேண்டும். எவ்வளவு நேரம் ஆகும். அப்படிப் பட்ட இனிமையான சுகம் கூடலில் மட்டும் அல்ல, ஊடலிலும் கிடைக்கும் என்று வள்ளுவர் சொல்லுகிறார். 

இதை ஒரு பெண் சொல்வதாகவும் இருக்கலாம்

1 comment:

  1. ஊடலில் வரும் வியர்வை சும்மா டென்ஷன்ல வர்றது. கூடலில் வரு வியர்வை ... அற்புதமான குறள்!

    ReplyDelete