Sunday, November 24, 2013

இராமாயணம் - ஆவி வேக

இராமாயணம் - ஆவி வேக 


சீதையின் நினைவாகவே இருக்கிறான் இராவணன்.  அவன் படுக்கையில் தூவி இருந்த மலர்கள் எல்லாம் அவன் உடல் சூட்டில் கருகுகின்றன.

அவன் அட்ட திக்கு யானைகளை வென்ற தோள் வலிமை கொண்டவன். காதல் அவனை வலிமை குன்றச் செய்கிறது. உடம்பு தேய்கிறது. தேய்கிறது என்றால் மெலிந்து போகிறான். உள்ளம் நைந்து போகிறது. ஆவி வேகிறது.

காதல் சூட்டில் இரத்தம் கொதிக்கிறது. அந்த சூட்டில் ஆவி வேகிறது.

அவன் தான் என்ன செய்வான் , பாவம்.

பாடல்

நூக்கல் ஆகலாத காதல் நூறு 
     நூறு கோடி ஆய்ப் 
பூக்க, வாச வாடை வீசு சீத நீர் 
     பொதிந்த மென் 
சேக்கை வீ கரிந்து, திக்கயங்கள் 
     எட்டும் வென்ற தோள், 
ஆக்கை, தேய, உள்ளம் நைய, 
     ஆவி வேவது ஆயினான்.


பொருள்

நூக்கல் ஆகலாத காதல் = தவிர்க்க முடியாத காதல்

நூறு நூறு கோடி ஆய்ப் பூக்க = ஆயிரம் தாமரை மொட்டுக்கள். காதல் நூறு நூறு கோடியாக உள்ளத்தில் பூத்தது.


வாச = வாசனை பொருந்திய

வாடை = குளிர்ந்த காற்று

வீசு = வீசும்போது

சீத நீர் = குளிர்ந்த நீர்

பொதிந்த மென் சேக்கை  வீ =  வாசனையும் குளிர்ச்சியும் பொதிந்து வைத்த படுக்கை

கரிந்து = அவன் உடல் சூட்டால் கரிந்து

திக்கயங்கள் = திக்கு யானைகளை (திக்கு = திசை; கயம் = யானை)

எட்டும் வென்ற தோள் = எட்டு திசைகளில் உள்ள யானைகளை வென்ற தோள்கள்

ஆக்கை = அவற்றை கொண்ட உடல்

தேய = மெலிய

உள்ளம் நைய = உள்ளம் நைய

ஆவி வேவது ஆயினான் = ஆவி வேவது ஆயினான்.

காமம் சுடுகிறது.

அப்பேற்பட்ட இராவணனை உருக்கி போடுகிறது இந்த காதல் அல்லது காமம்.

நாமெல்லாம் எந்த மூலை.

மோகத்தின் சூட்டை தாங்க முடியாமல் "மோகத்தை கொன்று விடு இல்லால் என் மூச்சை  நிறுத்தி விடு " என்றார் பாரதியார்




1 comment:

  1. நல்ல பாடல். இந்த மாதிரி உணர்ச்சி நிறைந்த பாடல்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடிகிறது (காதல் மட்டுமல்ல, எல்லா உணர்ச்சிகளையுமே).

    நன்றி.

    ReplyDelete