மங்கையராகப் பிறப்பதற்கே - கவிமணி பாடல்
மங்கையா ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!
முதல் இரண்டு வரி எல்லோருக்கும் தெரியும்....
அடுத்த இரண்டு வரி மிக மிக இனிமையான வரிகள் ....
பெண்கள் கை பார்த்துதான் இந்த உலகில் அறங்கள் வளர்கின்றன.பெண் இல்லாவிட்டால் அறம் எங்கே வளரப் போகிறது ? அவள் பால் நினைத்து ஊட்டும் தாய்.
பெண்மையின் சிறப்பை கவி மணி மிக அழகாகப் பாடி இருக்கிறார்.படித்து இன்புறுங்கள்.
741 அல்லும் பகலும் உழைப்பவர் ஆர்? - உள்ளத்து
அன்பு ததும்பி யெழுபவர் ஆர்?
கல்லும் கனியக் கசிந்துருகித் - தெய்வ
கற்பனை வேண்டித் தொழுவர் ஆர்?
742 ஊக்கம் உடைந்தழும் ஏழைகளைக் காணில்
உள்ளம் உருகித் துடிப்பவர் ஆர்?
காக்கவே நோயாளி யண்டையிலே - இரு
கண்ணிமை கொட்டா திருப்பவர் ஆர்?
743 சிந்திய கண்ணீர் துடைப்பவர் ஆர்? - பயம்
சிந்தை யகன்றிடச் செய்பவர் ஆர்?
முந்து கவலை பறந்திடவே - ஒரு
முத்தம் அளிக்க வருபவர் ஆர்?
உள்ளந் தளர்வுறும் நேரத்திலே - உயிர்
ஊட்டும் உரைகள் உரைப்பவர் ஆர்?
அள்ளியெடுத்து மடியிருத்தி - மக்கள்
அன்பைப் பெருக்கி வளர்பவர் ஆர்?
745 நீதி நெறிநில்லா வம்பருமே - நல்ல
நேர்வழி வந்திடச் செய்பவர் ஆர்?
ஓதிய மானம் இழந்தவரை - உயர்
உத்தமர் ஆக்க முயல்பவர் ஆர்?
746 ஆவி பிரியும்அவ் வேளையில் - பக்கத்து
அன்போ டகலா திருப்பவர் ஆர்?
பாவி யமனும் வருந்திடாமல் - ஈசன்
பாதம் நினைந்திடச் செய்பவர் ஆர்?
747 ஏங்கிப் புருஷனைத் தேடியழும் - அந்த
ஏழைக் கிதஞ்சொல்லி வாழ்பவர் ஆர்?
தாங்கிய தந்தை யிழந்தவரைத் - தினம்
சந்தோஷ மூட்டி வளரப்பவர் ஆர்?
748 சின்னஞ் சிறிய வயதினிலே - ஈசன்
சேவடிக் கன்பெழச் செய்பவர் ஆர்?
உன்னம் இளமைப் பருவமெலாம் - களிப்பு
உள்ளம் பெருகிடச் செய்பவர் ஆர்?
749 மண்ணக வாழ்வினை விட்டெழுந்து - மனம்
மாசிலா மாணிக்க மாயொளிர்ந்து
விண்ணக வாழ்வை விரும்பிடவே - நிதம்
வேண்டிய போதனை செய்பவர் ஆர்?
750 அன்பினுக் காகவே வாழ்பவர் ஆர்? - அன்பின்
ஆவியும் போக்கத் துணிபவர் ஆர்?
இன்ப உரைகள் தருபவர் ஆர்? - வீட்டை
இன்னகை யாலொளி செய்பவர் ஆர்?
751 இப்பெரு நற்கரு மக்களெல்லாம் - உமக்கு
ஈசன் அளித்த உரிமைகளாம்
மெய்ப்பணி வேறும் உலகில் உண்டோ? - இன்னும்
வேண்டிப் பெரும்வரம் ஒன்றுளதோ?
No comments:
Post a Comment