வில்லிபாரதம் - உணர்வில் ஒன்று படுக
பாரதத்தில் மிக முக்கியமான, ரொம்பவும் அறிந்திராத ஒரு இடம்.
துரோணன் போர்க்களத்தில் இருக்கிறான். அவனை வெல்வது யாராலும் முடியாது. போர் நடந்து கொண்டே இருக்கிறது.
அப்போது ஒரு நாள் ....
மரிசீ, அகத்தியர் போன்ற ஏழு முனிவர்கள் துரோணரிடம் வந்து "நீ என்ன கொண்டிருக்கிறாய்? இது நீ செய்யும் வேலை அல்ல. இதை எல்லாம் விடு. விண்ணுலகு சேர வேண்டாமா, உன் மனதில் உள்ள குழப்பத்தை விடுத்து , உணர்வில் ஒன்று படு " என்று உரிமையோடு சொன்னார்கள்.
அவர்கள் சொன்னவுடன் துரோணனுக்கு உண்மை விளங்கிற்று. அவனுக்கு போரில் உள்ள முனைப்பு குறைந்தது. துரோணன் உயிர் துறக்கும் காலம் வந்தது என்று உணர்ந்த கண்ணன் , துரோணனை கொல்ல தர்மனுக்கு ஒரு வழி சொல்லித் தந்தான்.
பாடல்
தொடு கணை வில்லும் வாளும் துரகமும் களிறும் தேரும்
விடுக; வெஞ் சினமும் வேண்டா; விண்ணுலகு எய்தல் வேண்டும்;
கடுக, நின் இதயம்தன்னில் கலக்கம் அற்று, உணர்வின் ஒன்று
படுக!' என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர், பவம் இலாதார்.
பொருள்
தொடு கணை வில்லும் = அம்பை தொடுக்கின்ற வில்லும்
வாளும் = வாளும்
துரகமும் = குதிரையும்
களிறும் = யானையும்
தேரும் = தேரும்
விடுக = விட்டு விடு
வெஞ் சினமும் வேண்டா = கொடிய சினமும் வேண்டாம்
விண்ணுலகு எய்தல் வேண்டும் = விண்ணுலகை அடைய வேண்டும்
கடுக = விரைவாக
நின் இதயம்தன்னில் = உன் இதயத்தில்
கலக்கம் அற்று = கலக்கத்தை அற்று
உணர்வின் ஒன்று படுக!'= உணர்வில் ஒன்று படுக
என்று, உரிமை தோன்றப் பகர்ந்தனர் = உரிமையோடு கூறினார்கள்
பவம் இலாதார் = பிறப்பு இல்லாதவர்கள் (அந்த முனிவர்கள்).
இது துரோணனுக்கு மட்டும் சொல்லப் பட்டது அல்ல.
உங்களுக்கும் எனக்கும் சொல்லப்பட்டது.
நாம் செய்யாத யுத்தமா ? நாளும் நாளும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
எதற்கு இந்த போராட்டம் ? எதை அடைய ?
அரசை துரியோதனன் அடைந்தால் என்ன ? தர்மன் அடைந்தால் என்ன ? துரோணனுக்கு அதில் என்ன ஆகப் போகிறது ?
துரோணனின் நோக்கம் என்ன ? விண்ணுலகு அடைவது ? அதற்க்கு இந்த யுத்தம் உதவுமா ?
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் நோக்கம் நிறைவேற உதவுமா என்று பாருங்கள்.
தேவை இல்லாத யுத்தங்களில் ஈடு படாதீர்கள்.
Wonderful meaning. Unless you tell this we wont even think in this line. Superb.
ReplyDeleteநல்ல பாடல். நல்ல விளக்கம்.
ReplyDeleteவயதான துரோணருக்கு சொன்னது நமக்கு எப்படிப் பொருந்தும் என்று எண்ணிப் பார்கிறேன்...
நாம் வேலை, குடும்பம் எல்லாவற்றையும் விடவேண்டும் என்று பொருளா? அல்ல, “வேண்டாத யுத்தத்தில் ஈடுபட வேண்டாம்” என்பது அருமையான உட்கருத்து.
எது வேண்டிய யுத்தம், எது வேண்டாதது என்பதை யார் முடிவு செய்வது? நமக்கு நாமேதான் உள்ளுக்குள்ளே பார்த்து முடிவு செய்ய வேண்டியதுதான்.
“எது வேண்டிய யுத்தம்?” என்ற கேள்விதான் முக்கியமானது.
இந்தப் பாடலைப் படித்ததும் தோன்றியதை மேலே எழுதினேன்.