Saturday, November 9, 2013

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம்

தேவாரம் - கழுதை சுமந்த குங்குமம் 


கழுதை அழுக்கு மூட்டையை சுமந்தாலும் குங்கும பூ மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வித்தியாசமும்  தெரியாது.

ஏதோ பொதி சுமந்து போகிறோம் என்று தான் அதற்குத்  தோன்றும்.

அல்லது குங்கும பொதியை சுமந்ததால் அந்த கழுதைக்கு பெரிய பேரும் புகழும் கிடைக்கவா  போகிறது.

அது போல காரண காரியம் தெரியாமல் மக்கள் பல பேர் பல இறை காரியங்களை செய்து  கொண்டிருகிறார்கள்.

கற்பூரம்  காட்டுவது,மணி அடிப்பது, மத சின்னங்களை அணிந்து கொள்வது, தூக்கம்  முழிப்பது, சாப்பிடாமல் இருப்பது என்று எண்ணற்ற காரியங்களை செய்து  கொண்டிருக்கிறார்கள். ஏன்  செய்கிறாய் என்று கேட்டால் தெரியாது....எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று  .பதில் வரும். அர்த்தம் தெரியாமல் பாடல்களையும் மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருப்பவர்களை பார்க்கலாம்....

கழுதை சுமந்த குங்குமம்...

உள்ளன்போடு உருகி அவனை நினையாமல் இந்த சடங்குளினால் என்ன பயன் என்கிறார் சுந்தரர் ....

பாடல் 

கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நானுழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே


பொருள் 

கழுதை = கழுதை 

குங்குமம் = குங்குமம் 

தான் சுமந்து எய்தால் = அது சுமந்து சென்றால் 

நகைப்பர் = நகைப்பார்கள் 

பாழ் புக மற்றது போலப் = ஒரு பலனும்  அதற்கு இல்லாதது போல 

பழுது = தவறி 

 நான் = நான் 

உழன்று = தவித்து  

உள் தடுமாறிப் = உள்ளம் தடுமாறி 

படு = பெரிய 

சுழித் தலைப் பட்டனன் = சுழலில் அகப்பட்டுக் கொண்டேன் 

எந்தாய் = என் தந்தையே 

அழுது = அழுது 

நீ = நீ 

இருந்து என் செய்தி மன்னனே = இருந்து என்ன செய்யப் போகிறாய் மனமே
 
அங்கணா அரனே என  மாட்டாய் = அங்கணா அரனே என்று  மாட்டாய் 

இழுதை = இழுக்கு 

எனக்கு = எனக்கு 

ஓர் = ஒரு 

உய்வகை = உய்யும் , வாழும் வகை 

அருளாய் = அருள் செய்வாய் 

இடை மருதுறை = இடை மருது என்ற ஊரில் உறையும் 

எந்தை பிரானே = என்னை என்றும் பிரியாதவனே 


பூஜை புனஸ்காரங்களில் புண்ணியம்  இல்லை.

அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் மாணிக்க வாசகர். அது போல உள்ளன்போடு  உருகினால் வாழும் வழி கிடைக்கும் என்கிறார் சுந்தரர் 



4 comments:

  1. "கழுதை சுமந்த குங்குமம்" என்பது அருமையான கருத்து. இந்த blog-ஐப் படிப்பவர் சிலருக்கு, இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், சமயப் பெரியவர் சுந்தரரே சொல்லி விட்டாரே! ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. உண்மையான பொருள்
    சுமப்பது குங்குமம் அழுக்குத் துணியல்ல என்ற ஞானத்துடன் மகிழ்வுடன் சுமக்க வேண்டும்.
    இந்த உடம்பும் உயிரும் வாழ்வும் வளமும் அன்பான சிவத்தின் அருட்கொடை என்று அறிந்து சிவபெருமானுக்கு பூஜை சேவை விரதம் இருக்க வேண்டும் என்கிறார்.

    க்ளாஸ்ல கவனிக்காம இருப்பதற்கு ஸ்கூலுக்கு வரவே வேண்டாமே என்று ஆசிரியர் கடிந்தால்
    க்ளாஸுக்கு வந்து நன்கு கவனிக்க வேண்டும் என்பதே செய்தி. ஸ்கூலுக்கு வர வேண்டாம் என்பதல்ல.

    ReplyDelete
  4. நூற்றுக்கு நூறு சரி. நமசிவாய.

    ReplyDelete