Saturday, November 2, 2013

பெரிய புராணம் - நா அடங்கா முன்னம்

பெரிய புராணம்  - நா அடங்கா முன்னம் 



தாத்தா படுக்கையில் படுத்திருக்கிறார்.  ரொம்ப முடியவில்லை. தாகமாக இருக்கிறது. பசிக்கிறது. வயதாகி விட்டது என்பதற்காக பசியும் தாகமும் போயா விடுகிறது.

கொஞ்சம் கஞ்சி கொடு, தவிக்கிறது கொஞ்சம் தண்ணி தா என்று கேட்க்க நினைக்கிறார்...நாக்கு நடுங்குகிறது. பேச்சு வரவில்லை. எப்படி சொல்லி, என்ன கேட்பார். கேட்டால் கிடைக்கும். கேட்க முடியவில்லை.

பேசிய நாக்குதான்...இன்று பேச்சு வரவில்லை....

அப்படி ஒரு நாள் வருவதற்கு முன், அவன் பெயரை சொல்லிக் கொண்டிரு. பின்னாளில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தால் தண்ணி கேட்க்கக் கூட நாக்கு உதவாமல் போகலாம்...அவன் பெயரை எங்கே சொல்வது....

 அப்போதைக்கு இப்போதே சொல்லி வையுங்கள்

பாடல்

கடுவடுத்த நீர்கொடுவா காடிதா என்றுநடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்தபாழ்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

பொருள்

கடுவடுத்த நீர்கொடுவா = கடுக்காய் என்று ஒரு காய் உண்டு. அதை தண்ணீரில் போட்டு வைப்பார்கள். அதற்க்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. அந்தத் தண்ணீரை கொண்டு வா

 காடி தா = காடி என்றால் புளித்த கஞ்சி. அதை கொண்டு வா 

என்று = என்று

நடுநடுத்து நாவடங்கா முன்னம் = சொல்லுவதற்குள், நாக்கு நடுங்கி சொல்ல முடியாமல் போவதற்கு முன்


பொடியடுத்த = பொடி என்றால் சாம்பல். சாம்பல் நிறைந்த

பாழ் கோட்டஞ் = பாழடைந்த கோட்டை (இடு காடு )

சேரா முன் = சேர்வதற்கு முன்னால்

பன் மாடத் = பல மாடங்கள் கொண்ட

 தென் குடந்தைக் = குடந்தைக்கு தென் புறம் உள்ள

கீழ்க்கோட்டஞ் = கீழ் கோட்டம் என்ற ஊரில் உள்ள அவன் பெயரை 

செப்பிக் கிட = சொல்லிக் கொண்டிரு

என்னடா இவன், நாளும் கிழமையுமாய் இந்த மாதிரி பாடலை எழுதுகிறானே என்று நினைப்பவர்களுக்கு ....

பயத்தில் பெரிய பயம் மரண பயம்.

அந்த பயத்தை வென்று விட்டால் வாழ்வில் வேறு எந்த பயமும் வராது.

பயப்படும் விஷயத்தை கண்டு ஓடினால் பயம் மேலும் அதிகம் ஆகும்.

இந்த நன் நாளில், எல்லா பயன்களும் உங்களை விட்டு ஓட, இந்த பாடல் அடிகோலட்டும்

"நாமங்கள் நவின்றேலோர் எம்பாவாய்"



1 comment:

  1. கிழக் கோலத்தை நன்றாக காட்டுகிறது இந்தப் பாடல்.

    ReplyDelete