Monday, November 11, 2013

இராமாயணம் - காலம் என்று ஒரு வலை

இராமாயணம் - காலம் என்று  ஒரு வலை 




“சீலமும் தருமமும் சிதைவு இல் செய்கையாய்!
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? “

நல்ல ஒழுக்கமும், தர்மமும் சிதைவு இல்லாமல் செயல்களை செய்பவனே (இராமனே) சிவனுக்கும், திருமாலுக்கும், பிரம தேவனுக்கும் உதவி செய்த மூலப் பொருளே ஆயினும் காலம் என்ற வலையை கடக்க முடியாது.

தசரதன் இறந்த செய்தி கேட்டு கலங்கிய இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

காலம் என்ற ஒன்றை யாராலும் கடக்க முடியாது. இறக்கும் காலம் வந்தால் அது நிகழ்ந்தே  தீரும்.அதை அந்த கடவுளாலும்  முடியாது. அப்படியென்றால் சாதரண மனிதர்கள் எம்மாத்திரம்.

பொருள்


“சீலமும் = நல் ஒழுக்கமும்

 தருமமும் = அறமும்

 சிதைவு இல் செய்கையாய் = சிதைவு இல்லாத செய்கை கொண்டவனே

சூலமும் = சூலத்தை கொண்ட சிவனும்

திகிரியும் = சக்கரத்தை கொண்ட மாலும்

சொல்லும் = வேதத்தை கொண்ட பிரமனும்

தாங்கிய  = அப்படி அந்த மூவரையும் தாங்கிய

மூலம் = மூலப் பொருளான அந்த பரம் பொருள்

வந்து உதவிய = வந்து உதவிய  

மூவர்க்கு ஆயினும் = அந்த மூவர்கள் ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? = காலம் என்ற வலையை கடக்க முடியுமா ? முடியாது.

மூவர்க்கும் மேலான ஒரு பரம் பொருள் பற்றி கம்பர் இங்கு கூறுகிறார்.

அது பற்றி பின்னொரு நாள் பார்ப்போம்.



1 comment:

  1. "வலை" என்பது ஒரு இனிய பிரயோகம். வலையில் மாட்டிக்கொண்டால் தப்ப முடியாதது போல. நன்றி.

    ReplyDelete