பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 4
பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், ஒரு நாள் தெருவில் , ஞானியைப் போல தோன்றும் ஒரு குள்ள மனிதனைக் கண்டார்.ஏனோ அந்த மனிதனின் மேல் பாரதியாருக்கு ஒரு ஈர்ப்பு.
அந்த குள்ளச் சாமியின் கையை பற்றிக் கொண்டு "நீ யார் " என்று கேட்டார்.
அப்போது அந்த குள்ளச் சாமி, பாரதியின் கையை உதறி விட்டு ஓட்டம் பிடித்தான். பாரதியும் விடவில்லை.அந்த குள்ளச் சாமியின் பின்னாலேயே ஓடுகிறார்.
இரண்டு பெரிய ஞானிகள் செய்யும் வேலையா இது என்று நமக்கு வியப்பு வரும்.
ஓடிய குள்ளச் சாமி, அங்கிருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தை அடைந்தான். பாரதியும் அங்கே சென்று அந்த குள்ளச் சாமியை மடக்கிப் பிடித்தான்.
பாடல்
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்
பொருள்
பற்றிய கை திருகி அந்த குள்ளச் சாமி , பரிந்தோடப் பார்த்தான், நான் விடவே இல்லை.
சுற்று முற்றும் பாத்து, பின் புன் முறுவல் பூத்தான் அந்த குள்ளச் சாமி.
அவனுடைய தூய்மையான தாமரை போன்ற இரண்டு பாதங்களைக் கண்டேன்.
குற்றம் இல்லாத அந்தக் குள்ளச் சாமியும், கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு, அங்கிருந்த வீட்டின் கொல்லைப் புரத்தை அடைந்தான்.
அவன் பின்னே நான் ஓடிச் சென்று அவனை மறித்துக் கொண்டேன்
......
அதன் பின் அங்கு என்ன நடந்து இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
குள்ளச் சாமி பாரதிக்கு ஞான உபதேசம் செய்தான்.
என்னென்ன செய்திகள் சொல்லி இருப்பார், எவ்வளவு நேரம் சொல்லி இருப்பார், வேதம், புராணம், இதிகாசம் இவற்றில் இருந்து எல்லாம் எடுத்து அறங்களை சொல்லி இருப்பார் இல்லையா ?
சிந்தித்துக் கொண்டிருங்கள்...
குள்ளச் சாமி என்ன சொன்னார் என்று நாளை பார்ப்போம்....
No comments:
Post a Comment