Sunday, February 15, 2015

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?

பிரபந்தம் - உன் மனதை யார் அறிவார் ?


நாம் சிறுவர்களாக இருக்கும் போது நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்மை சிலவற்றைச் செய்யச் சொல்வார்கள். நமக்கு அது பிடிக்காது. கோவம் வரும். ஏன் இப்படி நம்மை சிரமப் படுத்துகிறார்கள் என்று எரிச்சல் அடைவோம்.

ஆனால், நமக்கு வயதான பின், அவர்கள் சொன்னதின் அர்த்தம் விளங்கும். நம் நன்மைக்குத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

அது போல இறைவன் நமக்குச் சிலவற்றை செய்கிறான். ஏன் இப்படி நடக்கிறது, என்று நமக்கு எரிச்சலும், கோவமும் வரும். பின்னால் நாம் புரிந்து கொள்வோம் ஏன் நமக்கு அப்படி எல்லாம் நடந்தது என்று.

அதை ஆண்டாள் மிக அழகாகச் சொல்கிறாள்.

"நாங்கள் மிக இளம் பெண்கள். எங்கள் மார்புகள் கூட இன்னும் முழுவதும் வளரவில்லை. நீ என்னவெல்லாமோ செய்கிறாய். நீ செய்வது ஒன்றும் எங்களுக்கு புரியவில்லை. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நீ செய்வது. நீ எவ்வளவு பெரியவன். ஒரு பெண்ணின் பொருட்டு, கடலில் பாலம் அமைத்து, அரக்கர் குலத்தை வேரோடு அழித்தாய். உன் வலிமையின் முன் நாங்கள் எம்மாத்திரம்..."

என்று இறைவனின் செயல்களுக்கு நாம் காரணம் அறிய முடியாது என்று சொல்கிறாள்.

பாடல்

முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.

பொருள்

முற்று இலாத = முதிர்வு அடையாத

பிள்ளைகளோம் = பிள்ளைகள் நாங்கள்

முலை போந்திலா தோமை  = முலைகள் முழுமை பெறாத எங்களை

நாள்தொறும் = தினமும்

சிற்றில் மேல் இட்டுக் கொண்டு = சிறிய வீட்டில் அழைத்துச் சென்று

நீ சிறிது உண்டு = நீ செய்தது சிறிது உண்டு

திண்ணென நாம் அது சுற்றிலோம் = உறுதியாக நாம் அவற்றை கற்றிலோம்

கடலை அடைத்து  = கடலை அடைத்து (பாலம் அமைத்து)

அரக்கர் குலங்களை முற்றவும் = அரக்கர் குலங்களை முற்றாக அழித்து

செற்று = சண்டை இட்டு

இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! = இலங்கையை போர்க்களம் ஆக்கியவனே

எம்மை வாதியேல் = எங்களை துன்புறுத்தாதே


1 comment:

  1. ஹ்ம்ம்... சுமாரான பாட்டு... பரவாக இல்லை!

    ReplyDelete