Tuesday, February 24, 2015

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான்

இராமாயணம் - நயனங்கள் பனிப்ப நின்றான் 


வாக்கு தவறிய சுக்ரீவனை கண்டு எச்சரிக்க கோபத்தோடு வந்த இலக்குவன் முன் பகலில் வந்த நிலவு போல தாரை வந்து நின்றாள்.

கழுத்தில் தாலி இல்லை, வேறு ஒரு அணிகலன்கள் எதுவும் அணியவில்லை, பூ சூடவில்லை, குங்குமம் இல்லை, கழுத்து வரை உடலை முழுவதும் போர்த்து ஆடை அணிந்து கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட இலக்குவனின் கண்கள் நீரை வார்த்தன.

பாடல்

மங்கல அணியை நீக்கி,
    மணி அணி துறந்து வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி,
    குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்குவெம் முலைகள், பூகக்
    கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல்,
    நயனங்கள் பனிப்ப நின்றான்.


பொருள் 

மங்கல அணியை நீக்கி = மங்கல அணியான தாலியை நீக்கி

மணி அணி துறந்து = உயர்ந்த மணிகள் சேர்ந்த அணிகலன்களை துறந்து

வாசக் கொங்கு அலர் கோதை மாற்றி = வாசம் உள்ள மலர்கள் கொண்ட மாலையை அணியாமல்

குங்குமம் சாந்தம் கொட்டாப் = குங்குமச் சாந்தை பூசாத

பொங்குவெம் முலைகள் = பொங்கும், வெம்மையான முலைகள்

 பூகக் கழுத்தொடு = மறையும் படி கழுத்துவரை

மறையப் போர்த்த = மறையும் படி ஆடையைப் போர்த்து

நங்கையைக் கண்ட வள்ளல் = பெண்ணைக் கண்ட வள்ளல்

நயனங்கள் பனிப்ப நின்றான் = கண்கள் நனையும் படி நின்றான்

ஒரு ஆண் , அழகான பெண்ணைப் பார்க்கும் போது அவனுள் என்னவெல்லாம் நிகழலாம்  என்று கம்பன் பல இடங்களில் காட்டுகிறான்.

சீதையை கண்ட இராமன்,
அகலிகையைக் கண்ட இராமன்,
தாரையைக் கண்ட இலக்குவன்,
சீதையைக் கண்ட இராவணன்

ஒரு அழகான பெண்ணை கண்டது இராம, இலக்குவ, இராவணனின் மனம் எப்படி வேலை செய்கிறது என்று கம்பன் காட்டுகிறான்.


1 comment:

  1. மிக நல்ல பாடல் உரை. நன்றி.

    ReplyDelete