Wednesday, February 18, 2015

ஆசாரக் கோவை - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?

ஆசாரக் கோவை  - ஏன் பிரார்தனை பண்ண வேண்டும் ?


நீங்கள் நன்றாக உன்னித்து கவனித்துப் பார்த்தால் தெரியும், உங்கள் மனம் எப்போதும் ஒரு நிலையில் இல்லை என்று.

இன்னும் ஆழமாக கவனித்தால் இன்னொன்றும் புரியும்....உங்கள் மன நிலை ஒரு சக்கரம் போல மாறி மாறி சில எண்ணங்களில், குணங்களில் சுழல்வது புரியும்.

இந்த மன நிலையை நம் முன்னவர்கள் மூன்றாகப்  பிரித்தார்கள்.

- சாத்வீகம்
- ராஜசம்
- தாமசம்

நம்முடைய அனைத்து மன நிலைகளையும் இந்த மூன்றுக்குள் அடக்கி விடலாம்.

 சரி,இந்த மூன்று மன நிலைகளும் எப்படி வருகின்றன ? எது இவற்றை மாற்றுகிறது ?

நம் உணவு
நாம் விடும் மூச்சு
கால நிலை

கால நிலை நம் மனதை பாதிக்கிறது என்று நம் முன்னவர்கள்  .கண்டு  அறிந்தார்கள்.

சில எண்ணங்கள்  மாலையிலும்,இரவிலும்  வரும்.

சில எண்ணங்கள் காலையில் வரும். சில  மதியம்.

சிந்தித்துப்  பாருங்கள்.

மதியம், மண்டையைப்  பிளக்கும் வெயிலில் காதலிக்கு முத்தம் தந்தால் எப்படி   இருக்கும் என்று. அப்படி ஒரு எண்ணமே  வராது.

சரி....காலம் நம் மன நிலையை மாற்றுகிறது என்றே வைத்துக்  .கொள்வோம் அதனால் என்ன இப்ப ?

 .வருகிறேன் ....

காலம் நம் மன நிலையை மாற்றும் என்றால், அது ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்கு மாறும் போது ஒரு குழப்பமான மன நிலை  தோன்றும்.

இரவு முடிந்து பகல் தோன்றும் போது , பகல் முடிந்து இரவு தோன்றும் போது ஒரு குழப்பமான மன நிலை தோன்றும்.

ஒன்றிலிருந்து மற்றதுக்குப் போகும்போது சில சலனங்கள் இருக்கும்.

மாலை கொஞ்சம்  மயக்கும்.ஏன் ?

அது போலத்தான் காலையும்.

இரண்டு காலங்கள் சந்திக்கும் நேரத்தை  சந்தி நேரம் என்றார்கள்.

இந்த நேரத்தில் வந்தனம் பண்ணுவது சந்தியா வந்தனம் என்று  பெயர்.

பல சந்திகள் இருந்தாலும், இரண்டு சந்திகள்  முக்கியமானவை ...ஒன்று காலைச் சந்தி, மற்றது மாலைச் சந்தி.

இந்த இரண்டு சந்தி வேளையிலும் மனம் மிக அதிகமான அளவில் சலனத்துக்கு உள்ளாகும்.

அந்த மனதை ஒரு கட்டுக்குள் கொண்டு வர , நம் முன்னவர்கள், அந்த நேரத்தில் வழிபாடு பண்ணச்  சொன்னார்கள்.

சிந்தனையை ஒரு கட்டுக்குள்  வைக்கச் சொன்னார்கள்.

குழப்பமான நேரத்தில் மனம் போன வழியில் போனால் சிக்கலில் மாட்டிக் கொள்வோம். அதை தடுத்து, மனதை நிலைப் படுத்த ஏற்பட்டது தான் சந்தியா வந்தனங்களும் , காலை , மாலை  வழிபாடுகளும்.

இஸ்லாமியர்கள் ஐந்து முறை  .தொழுகிறார்கள். ஐந்து சந்தி உண்டு.

ஆசாரக் கோவை இந்த வழிபாட்டைப் பற்றிச்  சொல்கிறது.

பாடல்

 நாள் அந்தி, கோல் தின்று, கண் கழீஇ, தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.

பொருள்  -  சுருக்கம்

காலையில் பல் துலக்கி, முகம் கழுவி தெய்வத்தை தான் அறிந்தவாறு தொழுது எழுக. மாலையில் நின்று தொழுவது சரி  அல்ல.  பழி.

பொருள்

நாள் அந்தி = அதிகாலையில்

கோல் தின்று = ஆலம்  குச்சி,அரசம் குச்சி இவற்றால் பல் துலக்கி

கண் கழீஇ = கண் கழுவி (முகம் கழுவி )

தெய்வத்தைத் = தெய்வத்தை

தான் அறியுமாற்றால் = நீங்கள் அறிந்த படி (மற்றவர்கள் சொன்ன படி அல்ல)

தொழுது எழுக! = தொழுது எழுக

அல்கு அந்தி = அல்கு என்றால் இரவு. அல்கு அந்தி என்றால்  மாலையில்

நின்று தொழுதல் பழி = நின்றபடி இறைவனை தொழக் கூடாது. அமர்ந்துதான் தொழ வேண்டும்.

நல்லது நிறைய  சொல்லி விட்டுப் போய் இருக்கிறார்கள்.

செய்கிறோமோ இல்லையோ, தெரிந்தாவது கொள்வோம்.












1 comment:

  1. "ஏன் பிரார்தனை பண்ண வேண்டும்" என்று தலைப்பில் கேட்டு விட்டு, அதற்கு பதில் சொல்லவே இல்லையே!

    ReplyDelete