Wednesday, February 25, 2015

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை

திருவாசகம் - திரு சதகம் - நரகம் போனாலும் கவலை இல்லை 


இந்திரன் வாழும் இந்திர லோகம்,  திருமால் வாழும் பரம பதம், பிரம்மா வாழும் சத்ய உலகம் இது எல்லாம் கிடைத்தாலும் வேண்டாம்.

சரி, இது எல்லாம் வேண்டாம், என்ன தான் வேண்டும் ? வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ? இறைவனிடம் போய் எனக்கு அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்லுவது ஒரு வேண்டுதலா ?

மாணிக்க வாசகர் சொல்கிறார்...இது எல்லாம் வேண்டாம்...நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை...

இது என்னடா புதுக் குழப்பம்.  வைகுண்டம் வேண்டாம், நரகம் வேண்டும் என்கிறாரே இந்த மணிவாசகர்.

"இறைவா, உன் திருவருள் இருக்கப் பெற்றால் நரகம் என்றாலும் எனக்கு சம்மதம்" என்கிறார்.

இறைவனின் திருவருள் இருந்தால் நரகம் கிட்டாது என்பது அவர் நம்பிக்கை.

என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதாரோடு சேர மாட்டேன் என்கிறார். அடியவர்களோடு சேர்ந்தால் குடி கெடாது என்பது அவர் நம்பிக்கை.

தீயவரே ஆயினும் உன் நண்பர்கள் என் நண்பர்கள் என்று இராமன் சுக்ரீவனிடம் கூறுவான். அது எப்படி தீயவர்களை நட்பாக கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புபவர்கள் உண்டு. சுக்ரீவனின் நண்பன் தீயவனாக இருக்க மாட்டான் என்பது இராமனின் நம்பிக்கை.

 பாடல்


கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும்,
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும்,
எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா!
உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே!

பொருள்

கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு = புரந்தரன் என்றால் இந்திரன். மால் என்றால் திருமால், அயன் என்றால் பிரம்மா. அவர்களின் வாழ்வே கிடைத்தாலும் கொள்ள மாட்டேன். 


குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்;  = என் குடியே கேட்டாலும் உன் அடியவர்கள் அல்லாதோரோடு சேர மாட்டேன்


நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்;= உன் திருவருள் இருக்கப் பெற்றால், நரகமே கிடைத்தாலும் இகழ மாட்டேன்


இறைவா! = இறைவா

உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; = உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் 


எங்கள் உத்தமனே! = எங்கள் உத்தமனே

இறை அருள் போதும். வேறு எதுவும் வேண்டாம். எத்தனை துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ள முடியும் என்று  கூறுகிறார்.

வழி இருக்கிறது. நமக்கு போகத்தான் மனம் இல்லை.



2 comments:

  1. கம்ப இராமாயணம் அருமை. தேவாரம் அருமை. குறுந்தொகை அருமை. இந்த BLOGஇல் வரும் எல்லாப் பாடல்களுமே அருமை.

    ஆனால், மாணிக்கவாசகரைப் படிக்கும்போது மட்டும் மனதைப் பிழிகிற மாதிரி இருக்கிறது. இத்தனைக்கும் எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனாலும் அவரது உணர்ச்சியைப் பாடலில் வடித்து வைத்திருப்பது நம் மனதை எட்டும்போது நம்மை உலுக்குகிறது.

    ReplyDelete
  2. True Mr. Dilip. இறை பக்தி உள்ள எங்கள் நிலமை எப்படி இருக்கும். மனதை என்னமோ செய்கிறது என்பது தான் உண்மை. படித்த பின் சில நிமிடங்கள் ஆகிறது வெளிய வர . நன்றி RS

    ReplyDelete