Friday, February 27, 2015

திருக்குறள் - பொறாமை என்ற பாவி

திருக்குறள் - பொறாமை என்ற பாவி 


பொறாமை என்ற ,ஒரு பாவி , நம் செல்வத்தை அழித்து நம்மை  நரகத்தில் செலுத்தி விடும்.



பாடல்

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

பொருள்

அழுக்காறு = பொறாமை

என ஒரு = என்ற ஒரு

பாவி = பாவி

திருச் செற்று = செல்வத்தை அழித்து

தீயுழி = தீக் குழியான நரகத்தில்

உய்த்துவிடும் = செலுத்தி விடும்.

மேலோட்டமான அர்த்தம் இவ்வளவுதான்.

மிக மிக ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் . சற்றே விரிவாகப் பாப்போம்.

பொறாமை என்றால் என்ன ?

மற்றவர்கள் பெற்றதைக் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இன்மை.

மனிதனுக்கு எத்தனையோ கெட்ட குணங்கள் உண்டு - காமம், கோபம், லோபம், சோம்பேறித்தனம், பொய்மை என்று எவ்வளவோ இருக்கும் போது  ஏன்  பொறாமையை மட்டும் வள்ளுவர் இப்படி சொல்லுகிறார் ?

மற்ற குணங்கள் வரும், சற்று நேரத்தில் போய் விடும். நேரத்தில் அல்லது காலத்தில்  போய் விடும்.

பொறாமை என்ற தீக் குணம் வந்து விட்டால் அது போகவே போகாது.

கோபம் எவ்வளவு நேரம் இருக்கும் ?

காமம் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கும் ?

எவ்வளவு நேரம் பொய் செல்ல முடியும் ?

ஆனால் பொறாமை வந்து விட்டால் அது போகவே போகாது. இரவு படுக்கையிலும்  வந்து தூக்கத்திலும் அரிக்கும். அவனுக்கு அவ்வளவு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று தூங்க விடாது.

அது மட்டும் அல்ல,

ஒரு தீயவனோடு நாம் உறவு கொண்டால் என்ன ஆகும் ? முதலில் நம்மை அவன் தீய  வழியில் செலுத்துவான். அவன் வழியில் போய் நாம் நம் செல்வங்களை இழப்போம்.  செல்வத்தை இழந்த பின் பயம் வரும், எதிர் காலம் பற்றி, பணம் இல்லாவிட்டால் என்ன ஆவோம் என்ற பயத்தில் அந்த செல்வத்தை  எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைப்போம், எந்த வழியானாலும்   சரி, விட்ட பணத்தை பிடிக்க வேண்டும் என்று மேலும் பல தீய வழியில் முயன்று பாவங்களைச் செய்து மறுமைக்கும் பாவம் தேடிக் கொள்வோம்.

அது  போல,பொறாமை வந்து விட்டால்,


மற்றவனை விட நாம் அதிகம் சம்பாதிக்க வேண்டும்,  செல்வம் சேர்க்க வேண்டும், நம் பிள்ளையை உயர்த்த வேண்டும் என்று பல குறுக்கு வழிகளை சிந்திப்போம், தவறான பாதையில் போனால் செல்வம் அழியும். அது மேலும்  பொறாமைக்கு  வித்திடும்...தவறான பாதை போய் தீய பாதையில் போகத் தலைப் படுவோம்....இலஞ்சம் கொடுக்கலாமா, அவனை எப்படி கவுக்கலாம் என்று மனம் கணக்கு போடும், அவனைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம்  பேசச் சொல்லும், அவனுக்கு வரும் நல்ல  பெயரை, வாழ்வை தடுக்க திட்டம்   போடும்....அதக்காக செலவு செய்யும் மனம்.

பணம் போகும்

தவறான  செய்ததால் பாவம் வந்து சேரும்....அதனால் நரகம் கிடைக்கும்.

நரகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை, இந்த வாழ்கையே தீயில் கிடந்து  கருகுவதைப் போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாவியைக் கண்டால் எப்படி நாம் பயந்து விலகுவோமோ அப்படி பொறாமையைக் கண்டு  விலக வேண்டும்.

எல்லோரும் பாவியைக் கண்டு விலகினால் அந்த பாவி எப்படி உயர்வான் என்று கேட்டு  அந்த பாவியோடு சகவாசம் வைத்து கொள்பவர்கள் வைத்துக் கொள்ளட்டும்.

நீங்கள் சுகப் படவேண்டும் என்றால், தீயவர்களை விட்டு விலகுங்கள்.

அதே போல பொறாமை என்ற குணத்தையும் விட்டு விலகி இருங்கள்.

பொறாமை வந்து விட்டால் இருக்கும் செல்வமும் போய் , நரகமும் வந்து சேரும்.

சரி, இந்த பொறாமை வாராமல் எப்படி நம்மை காத்துக் கொள்வது ?

அதற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர்.





1 comment: