திருக்குறள் - புறங்கூறாமை - பிறன்பழி கூறுவான்
(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)
கெட்ட பழக்கங்களை விட வேண்டும் என்று எல்லோருக்கும் தெரியும். புகை பிடிக்கக் கூடாது, நொறுக்கு தீனி தின்னக் கூடாது, சோம்பேறியாக அதிகாலையில் தூங்கக் கூடாது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும் கெட்ட பழக்கங்களை விட முடிவதில்லை.
காரணம் என்ன?
ஒன்று பழகி விட்டது. மற்றது எப்படி விடுவது என்று தெரிவதில்லை.
புறம் கூறுவது கெட்ட பழக்கம்தான். அதை எப்படி விடுவது?
அதற்கும் ஒரு வழி சொல்கிறார் வள்ளுவர்.
"நீ ஒருவனைப் பற்றி அவன் இல்லாத போது தவறாக ஒன்றைச் சொன்னால், அதை என்றாவது அவன் அறிவான். அப்படி அறியும் போது, அவனுக்கு கோபம் வரும். என்னைப் பற்றி அப்படியா சொன்னனாய் என்று கோபம் கொண்டு, உன் வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு தவறான சம்பவத்தை தேடிக் கண்டு பிடித்து, உனக்கு மறைவாக இல்லை, உன் முகத்தின் முன் உனக்கு எவ்வளவு வலி தர முடியுமோ அவ்வளவு வலியைத் தருவான். எனவே, புறம் சொல்லாதே"
என்று எச்சரிக்கிறார்.
பாடல்
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html
(pl click the above link to continue reading)
பிறன்பழி = மற்றவனின் தவறை
கூறுவான் = புறம் கூறுவான் (அவன் இல்லாதபோது ஸொல்லுவான்)
தன்பழி = தன்னுடைய தவறை
யுள்ளும் = பலவற்றில்
திறன்தெரிந்து = பெரிதான ஒன்றை
கூறப் படும் = எடுத்துக் கூறப் படும்
குறளை நேரடியாகப் படித்தால் பொருள் விளங்காது.
பிறன் பழி கூறுவான் - புரிகிறது.
தன் பழியுள்ளும் திறன் அறிந்து கூறப்படும் என்றால் என்ன? சொல்லுக்குப் பொருள் விளங்குகிறது. ஆனால், அதன் உள் அர்த்தம் விளங்கவில்லை.
பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரியாமலேயே போய் இருக்கும்.
பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு பொருள் சொல்கிறார்.
முதலாவது "பிறன் பழி கூறுவான்" . இதில் பிறரைப் பற்றி அவன் இல்லாத போது தவறாகக் கூறுவான் என்று பொருள் சொல்கிறார். எப்படி அப்படி பொருள் சொல்ல முடியும் என்றால், நாம் படிக்கும் அதிகாரம் "புறங்கூறாமை". எனவே, இங்கே கூறுதல் என்பது புறம் கூறுதல் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.
இரண்டாவது, "தன் பழியுள்ளும் திறன் அறிந்து கூறப் படும்" என்பதற்கு
"தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்."
இனி உரையை பிரிப்போம்:
"தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து"
நம்மிடம் பல குற்றங்கள் இருக்கும். பல வெளியே தெரியாமலேயே இருக்கும். அந்தக் குற்றங்களில், வெளியே தெரிந்தால் எது நமக்கும் பெரிய துன்பத்தை, அவமானத்தைத் தருமோ அதைக் கண்டு பிடித்து. "
மூன்றாவது,
"தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி"
நாம் ஒருவரைப் பற்றி புறம் கூறி விடுகிறோம். அது அவனுக்கு ஒரு வருத்தத்தை தரும். ஆனால, அவன் பதிலுக்கு அதே அளவு வருத்தம் தரும் ஒன்றை நமக்குச் செய்ய மாட்டான். ஒன்றுக்கு பத்தாகச் செய்வான்.
"அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி"
அவன் எப்படி நம்மைப் பற்றி சொல்லுவான் என்றால், நமக்கு உயிரே போய் விடும்படியான குற்றங்களை கண்டு பிடித்து சொல்லுவான். அதுவும் எப்படிச் சொல்லுவான் தெரியுமா?
"எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்"
நம் எதிரிலேயே, பலர் முன்னிலையில் கூறுவான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தலை குனிந்து நிற்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது.
"திறன் அறிந்து" என்ற வார்த்தைக்கு பரிமேல் அழகர் கூறும் உரை அது.
- நம்முடைய மிகப் பெரிய குற்றத்தை கண்டு பிடித்து
- நமக்கு உயிரே போகும் படி
- பலர் முன்னிலையில் நம் எதிரிலேயே சொல்லுவான்
இது உனக்குத் தேவையா?
தேவை என்றால் சரி, நீ புறம் சொல்லிக் கொண்டுத் திரி என்கிறார்.
யாருக்கு இந்த அவமானம், துன்பம் வேண்டும்?
அதைத் தவிர்க்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? புறம் சொல்லாமல் இருக்க வேண்டும்.
புறம் சொல்லுவதால் வரும் மிகப் பெரிய தீமையை சுட்டிக் காட்டி, அந்தத் துன்பத்தில் இருந்து நாம் விடுபட வழி சொல்லித் தருகிறார்.
இதைத் தெரிந்த பின், யாருக்காவது, புறம் சொல்ல மனம் வருமா?
(அறன் அல்ல
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html
அறனழீஇ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html
அறம்கூறும் ஆக்கம்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html
முன்இன்று பின்நோக்காச் சொல்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html
புன்மையால் காணப் படும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html
No comments:
Post a Comment