Pages

Wednesday, July 31, 2024

கந்தரநுபூதி - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

 கந்தரநுபூதி - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 



நாம் யாரிடம் இருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள முடியாது?  எல்லோரிடமும் ஏதோ ஒன்று இருக்கிறது நாம் கற்றுக் கொள்ள. 


அசையாமல் நிற்கும் மரமும், மலையும் கூட ஏதோ ஒன்றை நமக்கு சொல்லித் தருகின்றன. 


எத்தனை துன்பம் வந்தாலும், அசையாமல் இரு. உலகை கவனித்துக் கொண்டு இரு. மழையும், வெயிலும், இரவும், பகலும் வரும் போகும். பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்று சொல்லாமல் சொல்லி நிற்கின்றன. 


அப்படி இருக்கும் போது மற்றவற்றை பற்றி என்ன சொல்வது?


இன்றைய நவீன உலகில், whatsaap, youtube, wikipedia, internet, என்ற அறிவு எங்கும் விரிந்து கிடக்கிறது. கற்றுக் கொள்ளும் மனம் வந்துவிட்டால் எதில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம். 


அருணகிரிநாதர் சொல்கிறார், 


முருகா, நீ குரு வடிவில் வந்து எனக்கு அருள் தந்தாய். குரு என்றால் ஏதோ ஒரு ஆள், ஒரு வடிவம் அல்ல. உருவம் உள்ளவனாய், இல்லாதவனாய், இருப்பவனாக, இல்லாதவனாக, மலராக, மலரில் உள்ள மணமாக, மாணிக்கக் கல்லாக, அதில் உள்ள ஒளியாக, உயிராக, உயிர் செல்லும் வழியாக நீ இருந்து நான் செல்லும் இடம் எல்லாம் எனக்கு ஞான உபதேசம் செய்தாய்...இறுதியில் உன்னை எங்கெங்கோ தேடி அலைந்து என் மனக் குகையில் உன்னை கண்டு கொண்டேன்" என்கிறார். 


பாடல் 


உருவா யருவா யுளதா யிலதாய் 

மருவாய் மலராய் மணியா யொளியாய்க் 

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே . 


பொருள் 


உருவாய் = உருவம் உள்ளவனாக 


அருவாய்  = உருவம் இல்லாத அருபமாக 


உளதாய் = தெய்வம் உண்டு என்று நம்புபவர்களுக்கு உள்ளவனாய் 


இலதாய் = தெய்வம் இல்லை என்று நம்புபவர்களுக்கு இல்லாதவனாய் 

 

மருவாய் = மணமாக 


மலராய் = அந்த மணம் தோன்றும் மலராக 


மணியாக = வைரம் போன்ற மணியாக 


யொளியாய்க் = அந்த மணியில் தோன்றும் ஒளியாக 

 

கருவாய் = அனைத்துக்கும் காரணமாய் 


உயிராய்க் = அந்த அனைத்தையும் நடத்தும் உயிராய் 


கதியாய்  = அந்த உயிர் செல்லும் வழியாக 


விதியாய்க் = எந்த வழியில் எந்த உயிர் செல்ல வேண்டும் என்று நடத்தும் விதியாக 

 

குருவாய் = குருவாய் 


வருவாய் = நீயே வருவாய் 


அருள்வாய் = அருள்செய்வாய் 


குகனே = என் மனமெனும் குகைக்குள் இருப்பவனே 


இந்த உலகம் பொருள்களால் நிறைந்தது. 


சூரியன், சந்திரன், பூமி, வான், கடல், மலை,மரம், வீடு, என்று பொருள்களால் நிறைந்தது. 


பொருள்கள் என்பது குணங்களின் தொகுப்பு. மல்லிகை என்றால் வெண்மையாக இருக்கும், ஒரு குறிப்பிட்ட மணம் வீசும், சின்னதாக இருக்கும். இந்த குணங்களின் தொகுதிதான் பொருள்கள். 


குணங்கள் என்பது நம் மனதில் இருந்து வருவது. ஒருவன் ஒரு உணவை ருசித்து விட்டு என்ன உப்பு உரைப்பே இல்லை என்கிறான். அதை உணவை இன்னொருவன் ஐயோ, காரம் மண்டையைப் பிளக்கிறது என்கிறான். குணம் என்பது மனதில் இருக்கிறது. 


அப்படி என்றால் இந்த உலகம் நம் மனதில் இருக்கிறது. 


"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமசிவாயவே"


பொருளும், அவற்றின் குணங்களும் அவனே என்பதை அர்பிராமி பட்டரும் சொல்லுவார். 


 மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே


மணியும் அவளே, மணியில் இருந்து வரும் ஒளியும் அவளே

பிணியும் அவளே, பிணிக்கு மருந்தும் அவளே. 


பாடம் சொல்லித் தர இறைவன் இந்த வடிவில்தான் வர வேண்டும் என்று இல்லை. அருணகிரியின் கூற்றுப் படி, இந்த பரந்துபட்ட உலகமே ஒரு ஞானாசிரியன் தான். ஒவ்வொன்றும் நம் நல் வாழ்வுக்கு ஏதோ ஒரு வழியில் பாடம் சொல்லி கொண்டுதான் இருக்கிறது. 

கெட்டவன் கூட இப்படி வாழாதே என்று வழி காட்டுகிறான். 

கற்றுத் தர இந்த உலகம் தயாராக இருக்கிறது.  

ஞானம்தான் அருள். 

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. 

-------------------------------------

இதோடு கந்தர் அநுபூதி முற்றுப் பெறுகிறது. 

பொறுமையுடன் இதுவரை வாசித்தமைக்கு நன்றி.  

Tuesday, July 30, 2024

திருக்குறள் - புலித்தோல் போர்த்திய பசு

 திருக்குறள் - புலித்தோல் போர்த்திய பசு 



பசுத் தோல் போர்த்திய புலி என்று கேட்டு இருக்கிறோம். வள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசு பற்றி கூற இருக்கிறார். 


துறவி என்பவன் கட்டிய மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றை துறந்து வாழ்பவன். அவனுக்கு உலக இன்பங்களில் நாட்டம் இல்லை என்று மக்கள் நம்புகிறார்கள். கட்டிய மனைவியையே துறந்தவன் வேறு எந்த பெண் மேல் ஆசை வைக்கப் போகிறான், என்று நினைத்து தங்கள் மனைவி, பெண் பிள்ளைகளை துணிந்து அவன் இருக்கும் இடத்துக்கு அனுப்புகிறார்கள். 


ஆனால், எல்லா துறவிகளும், உண்மையிலேயே துறவிகளா என்றால் இல்லை. 


சிலர், துறவி வேடம் அணிந்த சாதாரண மனிதர்கள். சாதாரண மனிதர்களுக்கு உள்ள காமம், ஆசை, விருப்பு, வெறுப்பு எல்லாம் அவர்களிடம் அப்படியே இருக்கும். வேடம் தான் துறவி. உள்ளே மிகச் சாதாரண, சராசரி மனிதனாக இருப்பார்கள். 


அவர்களைத்தான் வள்ளுவர் புலித் தோல் போர்த்திய பசு என்கிறார்.


ஏன்?


பசு வயலில் இறங்கி பயிர் பச்சைகளை மேயும். அதைப் பார்த்து அங்குள்ளவர்கள், அதை விரட்டி அடிப்பார்கள். 


அந்தப் பசுவே தன் மேல் ஒரு புலித்தோலை போர்த்திக் கொண்டால் மக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். காரணம்

முதலாவது, புலி என்று நினைத்து பயந்து ஓடி விடுவார்கள். 


இரண்டாவது, புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. எனவே, தங்கள் பயிருக்கு ஒரு சேதாரமும் இல்லை என்று நினைப்பார்கள். 


எனவே, பசு கள்ளத்தனமாக ஊரை ஏமாற்றி பயிரை மேய்ந்து விடும். 


அது போல சில போலிச் சாமியார்கள், துறவி வேடம் போட்டுக் கொண்டு உலக இன்பங்களை அனுபவிப்பார்கள் என்கிறார். 


பாடல் 


வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


பொருள் 



வலிஇல் = துறவறம் மேற்கொள்ளும் மன வலிமை இல்லாத 


 நிலைமையான்  = நிலையில் உள்ளவன் 


வல்லுருவம் = பெரிய துறவி வேடம் 


பெற்றம் = பசு 


புலியின்தோல் = புலியின் தோலை 


போர்த்து = மேலே போர்த்துக் கொண்டு 


மேய்ந் தற்று = மேய்ந்தது போல 


உலகம், வெளித் தோற்றத்தை வைத்து ஒருவனை எடை போடுகிறது. அது தவறு என்கிறார். மடாதிபதிகள், துறவிகள், குருமார்கள் என்று அவர்களின் தோற்றம் மற்றும் அடை மொழிகளை கொண்டு ஒருவனை எடைபோடக் கூடாது. 


வள்ளுவர் காலத்திலேயே போலிச் சாமியார்கள் இருந்து இருக்கிறார்கள். அன்றும் மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். 


என்ன சொல்ல. 




Monday, July 29, 2024

கந்தரனுபூதி - மதி கெட்டு அறவாடி

 கந்தரனுபூதி - மதி கெட்டு அறவாடி 



இப்போதெல்லாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றால், வண்டியில் கூகிள் வரை படத்தை ஏற்றி (load ) பண்ணிவிட்டு அது காட்டும் வழியில் போகிறோம். இடது புறம் திரும்பு என்றால் திரும்புகிறோம். நேராகப் போ என்றால் போகிறோம். 


ஒரு வேளை அந்த செயலி தவறான வழியைக் காண்பித்தால், நாமும் அதைப் பின் பற்றி தவறான இடத்துக்குப் போய் விடுவோம் அல்லவா. 


அப்படி போய்,காட்டில் மாட்டிக் கொண்டவர்கள், கடலுக்குள் போனவர்கள், வயகாட்டுகுள் போனவர்கள் பற்றிய செய்தியை எல்லாம் படிக்கிறோம். சிரிக்கிறோம். 


நம்மை ஒவ்வொரு நாளும் வழி நடத்துவது நம் அறிவு. அது நம்மை சரியாக வழி நடத்துகிறதா என்று எப்படித் தெரியும்?


இவரைப் பார், அதைச் செய், இதைச் செய்யாதே, அந்த புத்தகத்தில் உள்ளதை பின் பற்றினால் இந்த இந்த பலன்கள் கிடைக்கும் என்று நம் மனம் சொல்கிறது. அது சரியா தவறா என்று எப்படித் தெரியும்?


நம் கருத்துக்கு எதிர் கருத்தைக் கொண்டவர்களும் தாங்கள் சரியான பாதையில் போவதாகச் சொல்கிறார்கள். யார் செல்லும் பாதை சரி?


குழப்பம் வருகிறது அல்லவா? மதி மயங்குகிறது அல்லவா?  எந்த வழியில் செல்வது என்று ஒரு மயக்கம் வருகிறது அல்லவா? எது சரியான வழி என்று திகைக்கிறோம் அல்லவா?


கூகிள் காட்டிய வழியில் சென்ற பின், நாம் நினைத்த இடம் வரவில்லை. அல்லது, நாம் போகும் பாதை சரிதானா என்ற சந்தேகம் வந்தால் என்ன செய்வோம்?  அருகில் உள்ள கடையில், அல்லது அங்கு இருக்கும் ஆட்களிடம் விசாரிப்போம். 


வாழ்க்கை என்ற பயணத்தில், செல்லும் இடம் சரிதானா என்று யாரைக் கேட்டு உறுதி செய்து கொள்வது?


எல்லாம் அறிந்த, ஞானமே வடிவான முருகன் இருக்கிறான். அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனக்கு இனிமேல் ஒரு குழப்பமும், மயக்கமும் இல்லை என்கிறார். 


பாடல் 


மதி கெட்டறவாடி மயங்கியறக் 

கதி கெட்டவமே கெடவோ கடவேன் 

நதி புத்ர ஞான சுகாதிய வத் 

திதி புத்ரர் வீறு அடு சேவகனே 


பொருள் 



மதி கெட்டறவாடி = மதி கெட்டு அற வாடி = புத்தி கெட்டுப் போய், ரொம்ப வாட்டம் உற்று 


மயங்கி = மயக்கம் உற்று 


யறக் கதி = அற கதி = அறவழி 


கெட்டவமே = கெட்டு + அவமே = வீணாக கெட்டுப் போய் 


கெடவோ கடவேன் = வீணாகவோ நான் இருக்கிறேன்? (இல்லை என்பது கருத்து) 


 

நதி புத்ர = நதியின் புத்திரனே 


ஞான சுகாதிய = ஞான + சுக + அதிபதி = ஞானத்தினால் வரும் பேரின்பத்தை தரும் தலைவனே 


அத்திதி புத்ரர் = அத்திதி என்ற அரக்கியின் புத்திரார்களான அரக்கர்கள் 


வீறு = பெருமை, வீரம், வீரியம் 


அடு = சண்டையிட்ட 


சேவகனே = சேவகனே  


எனக்கு வாழ்வில் பல குழப்பங்கள் இருக்கு. நீ தான் ஞானத்தின் தலைவன் ஆயிற்றே. உன்னிடம் வந்து விட்டேன். சரியான வழியைக் காட்டு என்று வேண்டுகிறார். அல்லது, அவன் காட்டுவான், இனி குழப்பம் இல்லை என்றும் கொள்ளலாம். 





Friday, July 26, 2024

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - ஒரு மீள் பார்வை

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - ஒரு மீள் பார்வை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_26.html

நாம் பலருக்கு பல நன்மைகள் செய்து இருப்போம். ஆனால், சமயத்தில் நமக்கு ஒரு உதவி தேவை என்று வரும்போது அவர்கள் நமக்கு உதவி செய்ய மாட்டார்கள். நம்மால் அதை ஜீரணிக்க முடியாது. ..எவ்வளவு செய்து இருப்பேன்...இப்படி செய்து விட்டானே என்று வருந்துவோம். 


இது ஏதோ நண்பர்களுக்குள் நடப்பது என்று நினைக்கக் கூடாது. 


கணவன் குடும்பத்துக்காக எவ்வளவோ உழைப்பான், தியாகம் செய்வான். ஏதோ ஒரு நாள், தவறாக ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அல்லது கேட்டது ஒன்றை வாங்கித் தர முடியாது என்று சொல்லி இருக்கலாம், அல்லது மனைவி வீட்டாரை மதிக்காமல் ஏதாவது தவறாக சொல்லி இருக்கலாம். அதற்காக அதை வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொண்டு பகை பாராட்டும் மனைவிமார்களைப் பற்றி கேட்டு இருக்கிறோம். 


அது கணவன்களுக்கும் பொருந்தும். மனைவி எவ்வளவோ விட்டுக் கொடுத்து, வலிகளைத் tதாங்கி குடும்பத்தை கொண்டு செல்வாள். ஏதோ ஒரு சமயம், ஏதோ ஒரு வார்த்தை தவறாக வந்து இருக்கலாம். அதற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு வன்மம் பாராட்டுவது அழகல்ல. 


இது வாழ்வில் அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்புகள், நண்பர்கள், மேலதிகாரி , கீழே வேலை செய்பவர்கள், என்று அனைத்து தளத்திலும் இந்த சிக்கல் இருக்கிறது. 


இதெல்லாம் ஏன் நிகழ்கிறது?


வள்ளுவர் விடை சொல்கிறார். 


நாம் நமக்கு பிறர் செய்த நல்லவற்றையும், தீயவற்றையும் எப்படி எடுத்துக் கொள்கிறோம்?


ஒரு கெடுதல் செய்தால் அதை மிகப் பெரிய விடயமாகவும், ஆயிரம் நல்லது செய்து இருந்தால் அவற்றை எல்லாம் மிகச் சாதரணமாகவும் எடுத்துக் கொள்கிறோம். அது தான் இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். 


இதையே மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும். 


ஒரே ஒரு நல்லதை மிகப் பெரிதாகவும், ஆயிரம் தீமைகளை மிகச் சாதாரண விடயமாகவும் கொண்டால் எப்படி இருக்கும்?


அது எப்படி முடியும் என்று கேட்டால், முன்னது முடியும் என்றால் பின்னதும் முடியும் தானே. 


உதாரணமாக, எனக்காக பெற்றோர், உறவு, சொந்தம், பந்தம், நட்பு, ஊர் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்திருக்கிறாள். அந்த ஒரு செயல் போதாதா அவளை கோவில் கட்டி கும்பிட என்று நினைத்து விட்டால், அவள் செய்யும் சில்லறை தொந்தரவுகள் பெரிதாகத் தெரியாது. 


மனுஷன் உயிரைக் கொடுத்து உழைக்கிறான், பாவம் என்று கணவனின் பங்களிப்பை பெரிதாக நினைத்து விட்டால் அவனின் கோப தாபங்கள் பெரிதாகத் தெரியாது. 


எதை பெரிதாக நினைக்க வேண்டும், எதை சிறிதாக நினைக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது சிக்கல். 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


nஎன்ற குறளில், தினையளவு நல்லது செய்தாலும், அதை பனை மரம் அளவு உயரமாக உள்ளதாக கொள்வார் என்றும். 


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.


உயிரை எடுக்கும் அளவுக்கு ஒரு கொடிய செயலை ஒருவர் நமக்குச் செய்தாலும், அவர் செய்த ஒரே ஒரு நல்ல காரியத்தை நினைத்தால் அந்த கொடிய காரியத்தின் மூலம் வரும் துன்பம் மறைந்து போகும் என்றும் கூறுகிறார். 


நல்லது செய்தால், அதை பெரிதாக நினைக்க வேண்டும். 


தீமை செய்தால், அதை மறந்து, மற்றவர் செய்த நன்மையை நினைக்க வேண்டும். அதாவது, தீயவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். 


எல்லாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. 



Wednesday, July 24, 2024

திருக்குறள் - கூடாவொழுக்கம் - வானுயர் தோற்றம்

 திருக்குறள் - கூடாவொழுக்கம் - வானுயர் தோற்றம் 


சில பேர் ஊருக்கு பெரிய ஆள் போல் காட்டிக் கொள்வார்கள். உள்ளே ஒன்றும் இருக்காது. 


பெரிய துறவி போலவும், பக்திமான் போலவும், அனைத்தும் அறிந்த ஞானி போலவும் காட்டிக் கொள்வார்கள். செய்வது எல்லாம் வேறு விதமாக இருக்கும். 


அவர்கள் செய்வது வெளியே தெரியாது. 


ஆனால், அவர்கள் மனதுக்குத் தெரியும். 


வள்ளுவர் கேட்கிறார் 


"வானத்தைப் போல உயர்ந்த தோற்றம் இருந்து என்ன பயன்? ஒருவன் , அவனுடைய மனம் அறிய குற்றம் செய்து வாழ்வானேயானால்"


என்று 


பாடல் 



வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றம் படின்


பொருள் 


வானுயர் = வானத்தைப் போல உயர்ந்த 


தோற்றம் = தோற்றம் 


எவன்செய்யும் = என்ன பலனைத் தரும்? (ஒன்றும் தராது) 


தன்னெஞ்சம் = ஒருவனுடைய மனம் 


தான் = அவன் 


அறி = அறிந்து 


குற்றம் படின் = குற்றம் செய்து வாழ்வானேயானால் 


சாமியார், குருஜி, யோகி, என்ற பெரிய பட்டங்களினால் ஒரு பலனும் அவனுக்கு இல்லை. ஊரை ஏமாற்றி காசு சம்பாதிக்க உதவலாம். அதைத் தவிர ஒரு பயனும் இருக்காது என்றவாறு. 




Friday, July 19, 2024

பாரதியார் கவிதைகள் - பாப்பா பாட்டு

பாரதியார் கவிதைகள் - பாப்பா பாட்டு 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_41.html


பல பாடல்களை வாசிப்போம். புரியும். மேலே சென்று விடுவோம். அதில் உள்ள ஆழ்ந்த ஆர்த்தத்தை பார்க்கத் தவறி விடுவோம். 


அப்படி விட்டுப் போன சில பாடல்கள் பின்னாளில் நினைவு வரும். அட, இதை எப்படி விட்டுவிட்டோம் என்று எண்ணம் வரும். 


அப்படி வரும் பாடல்களில் கீழே உள்ள பாரதியின் பாப்பா பாடலும் ஒன்றும்.  


சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;

நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு

நிறை உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்;

வயிர முடையநெஞ்சு வேணும்;-இது

வாழும் முறைமையடி பாப்பா!


இதில் என்ன சிந்திக்க இருக்கிறது. எளிமையான பாடல் தானே என்று தோன்றும். 


யோசித்துப் பாருங்கள். 


ஒன்றைத் தாழ்த்திச் சொல்வது தவறு. உயர்த்திச் சொல்வதும் தவறாகுமா?


குலத் தாழ்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருக்கலாம் 


ஒருவனின் சாதியைப் பற்றி கூறி, நீ தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன் என்று கூறினால் அது பிழை. பாவம் என்று சொல்லலாம்.


ஒருவனின் சாதியைப் பற்றிக் கூறி, நீ உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று கூறுவது தவறாகுமா?


தவறு என்கிறான் பாரதி. 


குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் 


குலத் தாழ்ச்சி சொல்லல் பாவம் என்று சொல்லி இருந்தால் அவன் ஒரு சாதரணக் கவிஞன். 


குல உயர்ச்சி சொல்லலும் பாவம் என்கிறான். 


ஒருவனை உயர்ந்த சாதிக்காரன் என்று சொல்வது பாவம் என்கிறான் பாரதி. 


தாழ்ச்சி சொல்லுவது எந்த அளவு பாவமோ, அதே அளவு பாவம் உயர்த்திச் சொல்லுவதும். 


நான் குலத்தால் உயர்ந்தவன் என்று ஒருவன் நினைத்தால், அவன் பாவம் செய்கிறான் என்று அர்த்தம் என்று பாரதி சொல்கிறான். 



திருக்குறள் - அகத்தே நகும்

 திருக்குறள் - அகத்தே நகும் 


கூடா ஒழுக்கம் என்பது மேற்கொண்ட தவத்திற்கு ஒவ்வாத அல்லது பொருந்தாத செய்கைகள். 


தவம் செய்வது கடினம். அப்படி கடினமான தவத்தை மேற்கொள்பவர்களை சமூகம் போற்றும். இன்றும் கூட துறவிகளுக்கு, சாமியார்களுக்கு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. நம்மால் ஒரு வேளை உணவை விட முடியவில்லை. ஒரு வேளை காப்பியை விட முடியவில்லை. தவம் செய்பவர்கள் உண்ணாமல் விரதம் இருக்கிறார்கள். ஆண் பெண் இன்பத்தை துறக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு கடினம் என்று சமுதாயம் அவர்களைப் போற்றுகிறது. 


ஆனால், தவம் மேற்கொண்டவர்கள் சில சமயம் தவத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் தவிப்பார்கள். சரி, தவத்தை விட்டு விடலாம் என்றால் ஊரில் கிடைக்கும் நல்ல பெயர் போய் விடும். 


என்ன செய்வது?  


ஊருக்குத் தெரியாமல், தவத்திற்கு புறம்பான காரியங்களை செய்வார்கள். அப்படிச் செய்பவர்கள் ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள். உலகம் அவர்களை "போலிச் சாமியார்" என்று முத்திரை குத்தி ஏளனம் செய்யும். 


எல்லா போலிச் சாமியார்களும் பிடிபடுவது இல்லை. மற்றவர்கள் ஊருக்குத் தெரியாமல் தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருப்பார்கள். அதே சமயம் பெரிய துறவி, குரு, சாமியார் என்ற பட்டமும் இருக்கும். 


அப்படிப்பட்டவர்களைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார் 


"நீ ஊரை ஏமாற்றி விட்டேன் என்று நினைக்காதே. உனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் உன் கபட வேடத்தை பார்த்து உன்னை எள்ளி நகையாடும். அதில் இருந்து நீ தப்பவே முடியாது" 


என்று. 


பாடல் 

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்


பொருள் 


வஞ்ச மனத்தான் = உள்ளொன்று வைத்து வெளியே ஒன்று செய்யும் வஞ்சக மனத்தை கொண்டவன் 


படிற்றொழுக்கம் = படிற்று என்றால் மறைத்து என்று அர்த்தம். மறைந்து செய்யும் செய்கைகள்.


பூதங்கள் = பூதங்கள்  


ஐந்தும் = ஐந்தும் 


அகத்தே நகும் = அவனுக்குள்ளேயே அவனைப் பார்த்து சிரிக்கும். 


அது என்ன பூதங்கள் ஐந்து?


அவை நீர், நிலம், தீ, ஆகாயம், காற்று என்ற ஐந்தும். 


இவை ஐந்தினாலும் ஆனதுதான் உலகம். இந்த ஐந்தும் உள்ளும் இருக்கின்றன. வெளியேயும் இருக்கின்றன. 


இந்து சமய கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று,  இந்த ஐம்பூதக் கோட்பாடு. 


வெளியில் இருக்கும் ஐந்து பூதங்களும் நம் உடம்பில் உள்ள புற மற்றும் அகக் கருவிகளோடு சம்பந்தப்பட்டவை.


உதாரணமாக நீர் என்பது நாக்கோடு சம்பந்தப்பட்டது. நாக்கு எப்போதும் நீரில்தான் இறக்கும். நாக்கு வறண்டு விட்டால் சுவை தெரியாது. 


நீர் நாக்கோடு சம்பந்தப்பட்டது. 


நாக்கு சுவையோடு சம்பந்தப்பட்டது. 


சுவை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் இவற்றோடு தொடர்புபட்டது. 


இப்படி ஒவ்வொரு பூதமும், நம் உடலோடு சம்பந்தப்பட்டது. 


இவற்றைத் தாண்டி, ஒவ்வொரு புலன்களுக்கும் ஒரு அதி தேவதை உண்டு என்கிறார்கள். 


பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் என்றால், உள்ளே இருக்கும் தெய்வ சாட்சியாக நிற்கும் என்பது நம்பிக்கை. 


நமக்கே தெரியாமல் நாம் எப்படி தவறு செய்ய முடியும்?


ஊரை ஏமாற்றலாம். நம் மனதை நாம் ஏமாற்ற முடியாது. 


எனவே, ஊருக்குத் தெரியாது என்று நினைத்து தவறு செய்யாதே என்கிறார். 


 

Wednesday, July 17, 2024

தேவாரம் - திருவெண்காடு

 தேவாரம் - திருவெண்காடு 


எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒரு கவலை, ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற ஆதங்கம், எதை எதையோ எண்ணி பயம். 


ஒன்று முன் நடந்ததை நினைத்து கவலை. அல்லது வரப்போவதை நினைத்து பயம். தவிப்பு. நடக்குமோ, நடக்காதோ என்ற தவிப்பு. 


ஒன்று இறந்த காலத்தில் வாழ்கிறோம். அல்லது எதிர் காலத்தில். 


ஒரு நாளும், நிகழ் காலத்தில் வாழ்வது இல்லை.  


சிலர் எதிர் காலம் என்றால் இறந்த பின் சொர்கம் போவோமா மாட்டோமா, வைகுண்டம் போவோமா, கைலாசம் போவோமா, இன்னொரு பிறவி எடுப்போமா என்று மிக நீண்ட காலத்துக்குள் போய் விடுகிறார்கள். 


வாழ்க்கை என்பது நிகழ் காலத்தில் இருப்பது. நிகழ்காலம் ஒன்று தான் சத்தியம். இறந்த மற்றும் எதிர் காலங்கள் கற்பனைகள். அவை நம் மூளையில் இருக்கிறதே தவிர நிஜத்தில் கிடையாது. 


நிகழ்காலம் என்பது ஒன்றும் பெரிய மகோன்னத நேரம் அல்ல. மிக மிக இயல்பாக இருப்பது. 


இந்த நொடியில் உங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பாருங்கள். அவற்றின் எதிர் மற்றும் இறந்த காலம் பற்றி பார்க்காமல், இந்த கணத்தில் அவை எப்படி இருக்கின்ற என்று பாருங்கள்.


மனைவியைப் பார்க்கும் போது, அவள் முன் எப்படி இருந்தாள், எப்படி மாறிவிட்டாள், என்றெல்லாம் நினைக்காமல், அவள் முகத்தை மட்டும் பாருங்கள். ஒரு பெண். உங்களோடு வாழ வந்தவள். உயிரும், உடம்புமாய் உள்ள ஒரு பெண். அன்பு வருகிறதா இல்லையா என்று பாருங்கள். மனைவிக்கும் அதே விதிதான். 


திருஞான சம்பந்தர்  அப்படி பார்த்து ஒரு பாடல் எழுதி இருக்கிறார். 


 

"சிவ பெருமான் உறையும் திருவெண்காடு என்ற தலம். அங்கு வரும் பக்தர்கள் சிவனின் பல நாமங்களை போற்றி அவனை வழி படுகிறார்கள். அந்த ஊரின் வெளியே பல பனை மரங்கள் உயர்ந்து வளர்ந்து இருக்கின்றன. கரு கருவென அவை நிற்கின்றன. அந்த மரங்களில் பச்சைக் கிளிகள் அமர்ந்து இருந்கின்றன. அந்தக் கிளிகள், அங்கு வரும் பக்தர்கள் சொல்லும் இறை நாமத்தைக் கேட்டு அவையும் அவற்றை மாறி மாறி சொல்கின்றன. அந்த பனை மரங்களுக்கு மேலே மேகங்கள் தவழ்கின்றன..."


பாடல் 



தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.


பொருள்


தண்மதியும் = குளிர்ந்த நிலவையும் 


வெய்யரவுந் = வெய் + அரவும் = கொடுமையான விடம் கொண்ட நாகத்தையும் 


தாங்கினான் = தரித்தவன் 


சடையினுடன் = தன் தலையில் 


ஒண் = ஒளி வீசும் 


மதிய = பிறைச் சந்திரனைப் போன்ற 


நுதலுமையோர் = நுதல் + உமை + ஓர் = நெற்றியை உடைய பார்வதியின் 


கூறுகந்தான்  = கூறு + உகந்தான் = உடலில் பாதியை மகிழ்ச்சியாக கொண்டவன்  


உறைகோயில் = வாழும் கோவில் 


பண் = இசையுடன் கூடிய 


மொழியால் = பாட்டால் 


அவன்நாமம் = அவனுடைய (சிவனின்) பெயரை 


பலவோதப் = பலர் ஓதக் 


பசுங்கிள்ளை = பச்சைக் கிளிகள் 


வெண் = வெண்மையான 


முகில் = மேகம் 


சேர் = சேரும், ஒன்றாக இருக்கும் 


கரும் = கரிய 


பெணைமேல் = பனை மரத்தின் மேல் 


வீற்றிருக்கும் = அமர்ந்து இருக்கு 


வெண்காடே = திரு வெண்காடு என்ற திருத்தலமே 


சிவனின் நாமத்தை சொல்லிக் கொண்டு சிலர் செல்கிறார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டு கிளிகள் அதைத் திருப்பிச் சொல்கின்றன. 


இதில் என்ன இருக்கிறது. இதில் பக்தி எங்கே இருக்கிறது?


செய்த பாவம் தொலையும், சுவர்க்கம் கிட்டும் என்றெல்லாம் இறந்த நிகழ் காலம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மனம் எங்கும் அலையவில்லை. சுற்றி பார்க்கிறார். 


இதுதான் தெரிகிறது. 


பக்தர்கள் வருவதும் போவதும், அவர்கள் பாடுவதும், பனை மரம் உயர்ந்து நிற்பதும், அதில் கிளிகள் இருப்பதும்....


அந்த நொடி, அந்த நிகழ்காலம்...அதுதான் புனிதமானது. 


புரிவது கடினம். 


முயலலாம். 




Monday, July 15, 2024

திருக்குறள் - தவத்திற்குப் பின்

 திருக்குறள் - தவத்திற்குப் பின் 


தவம் பற்றி சொல்லிவிட்டார். தவம் என்றால் என்ன , அதன் பெருமை, செய்வதனால் வரும் நன்மை, என்பன பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறினார். 


அடுத்து என்ன?


சில சமயம், நாம் பல நல்ல பழக்கங்களை கைக் கொண்டிருந்தாலும், மன உறுதி இல்லாமல், பழைய அனுபவத்தால், நல்லவற்றை கை விட்டு தீய பழக்கத்திற்கு மீண்டும் செல்ல வாய்ப்பு உண்டு. 


உதாரணமாக ஒருவர் மது அருந்தும் பழக்கத்தை மிகுந்த முயற்சிக்குப் (தவம்) பின் விட்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். நீண்டநாள் கழித்து பழைய நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து வருகிறார். வரும் போது விலை உயர்ந்த மது வாங்கி வருகிறார். மதுவை விட்ட அவருக்கு அந்த உயர்ந்த மதுவைக் கண்டவுடன் ஒரு ஆசை வருகிறது. ஒரே ஒரு peg அடிக்கலாமே. அதில் என்ன வந்து விடப் போகிறது என்று நண்பரோடு சேர்ந்து அருந்துகிறார். ஒன்று இரண்டாகிறது. இரண்டு மூன்றாகிறது. 


அதன் பின் மற்றொரு நண்பர், மற்றொரு விசேடம் என்று மீண்டும் பழையபடி முழு நேர குடிகாரராகி விடுகிறார். 


அவ்வளவு தூரம் போவானேன். 


உடம்பு எடை கூடிவிட்டது. இனிமேல் கண்ட கழுதைகளையும் உண்ணக் கூடாது என்று முடிவு எடுத்து இருப்போம். ஏதோ ஒரு விசேடம் வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் என்று இனிப்பு, ஐஸ் கிரீம் என்று சாப்பிட்டு விடுகிறோம். விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்போம். உணவு வாசனை மூக்கைத் துளைக்கும். விரதம் அதோகதி. 


இப்படி எதை எடுத்தாலும் மன உறுதி இல்லாவிட்டால், பழைய எண்ணங்கள் மீண்டும் வந்து தவத்தினால் பெற்ற பலன்கள் நீங்கிவிடும். 


தவத்திற்கு பொருந்தாத ஒழுக்கங்களை கூடா  ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர். இது தவம் செய்பவர்களுக்கு வேண்டாத, தீய ஒழுக்கம். இது பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்பதால் இது பற்றி அடுத்து கூற இருக்கிறார். 


நாம் பல கதைகளை கேட்டு இருப்போம். 


முனிவர்கள் காட்டில் தவம் செய்வார்கள். தேவ லோகப் பெண்கள் வந்து ஆடிப் பாடி அவர்கள் தவத்தைக் கலைப்பார்கள். 


கதியாக சொல்ல அது சரி. 


உண்மை என்ன?  காமம் உள்ளே இருந்து கொண்டே இருக்கிறது. தவம் செய்து அதை அடக்கினாலும், அழகான பெண் ஆசையோடு வந்தால், தவம் கலைந்து விடுகிறது. 


இதை எப்படி சமாளிப்பது என்பது அடுத்த அதிகாரம். 


எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார். 


வள்ளுவர் கைப் பிடித்து உள்ளே நுழைவோம். 




  

Sunday, July 14, 2024

கந்தர் அநுபூதி - எப்படிச் சொல்வது

கந்தர் அநுபூதி - எப்படிச் சொல்வது 


அனுபவங்களை வார்த்தைகளில் கொண்டுவருவது கடினம். 


தீ சுட்டுவிட்டது. வலி உயிர் போகிறது. அந்த வலியை கொஞ்சம் விளக்கமாகச் சொல் என்றால் எப்படிச் சொல்வது. 


காதலிக்காக காத்து இருக்கிறான் காதலன். சற்று நேரம் கழித்து வருகிறாள். அவள் மேல் கோபிக்கிறான். பின் இருவரும் அன்யோன்யமாக பேசி சிரித்து மகிழ்கிறார்கள். எங்கே அந்த சந்தோஷத்தை விளக்கிச் சொல் என்றால் எப்படிச் சொல்வது?


அனுபவங்களை, அனுபவித்துதான் அறிய முடியும். சொல்லிப் புரியாது. 


சாதாரண உலக அனுபவங்களே இப்படி என்றால், இறை அனுபவம் எப்படி இருக்கும்?  


அருணகிரிநாதர் இறை அனுபவம் பெற்ற பின் திகைக்கிறார். 


எப்படிச் சொல்வது?  யாரிடமும் சொல்ல முடியவில்லை. தன்னந்தனியே இருப்பது போல் இருக்கிறது.  அனுபவம் புரிகிறது. சொல்ல வார்த்தை இல்லை. தவித்துப் போகிறார். 


 

பாடல் 


தன்னந்தனி நின்றது தானறிய 

இன்னம் மொருவர்க்கிசை விப்பதுவோ 

மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் 

இன்னங்களையும் கருபை சூழ் சுடரே . 


பொருள் 



தன்னந்தனி நின்றது = தனந்தனியனாய் நின்றதை 


தானறிய = தான் மட்டும் அறிய 

 

இன்னம் = மேலும் 


 மொருவர்க்கிசை விப்பதுவோ = ஒருவற்கு + இசைவிப்பதுவோ ? வேறு ஒருவருக்கு சொல்ல முடியுமா? 

 

மின்னும் = மின்னல் போல்  


 கதிர்வேல் =  ஒளிக் கதிர்களை வீசும் வேலாயுதத்தை உடைய முருகா 

 


விகிர்தா =பல்வேறு வடிவங்களை உடையவனே 


நினைவார் = உன்னை தங்கள் மனத்தில் நினைப்பவர் 

 

இன்னங்களையும் = இன்னல்களை களையும், துன்பங்களைத் துடைக்கும் 


கருபை சூழ் சுடரே = கருணை நிறைத்த சுடரே 


நமக்கெல்லாம் ஒரு அனுபவம் நிகழ்ந்தால், அதை மற்றவர்களுக்குச் சொன்னால்தான் ஒரு திருப்தி வரும். 


சினிமா பார்த்தாலும் சரி, நாலு இடத்துக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் சரி, கல்யாணம் போன்ற சடங்குகளை நேரில் சென்று பார்த்து வந்தாலும் சரி, உடனேயே நாலு பேருக்குச் சொல்ல வேண்டும். படம் எடுத்து whatsapp போன்றவற்றில் பகிர வேண்டும். comments, like  ம் அள்ள வேண்டும். 


பகிர முடியாத அனுபவங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது ?


 


Thursday, July 11, 2024

திருக்குறள் - சிலர் பலர்

 திருக்குறள் - சிலர் பலர் 


இன்றைய குறளுக்கு முதலில் மேலோட்டமான உரை என்ன என்று பார்ப்போம். பின், பரிமேலழகர் தரும் நுணுக்கமான உரையை பற்றிச் சிந்திப்போம். 


இந்த உலகில் பணக்கார்கள் சில பேர் தான் இருக்கிறார்கள். ஏழைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 


ஏன்?


ஏன் மாறி இருக்கக் கூடாது? நிறைய பணக்கார்கள், கொஞ்சம் போல ஏழைகள் என்று ஏன் இருக்கக் கூடாது?


இதை பணம் மட்டும் அல்ல, அறிவாளிகள், ஞானிகள் சிலர், கல்லாத மூடர்கள் பலர். 


இது ஏன் இப்படி இருக்கிறது?


வள்ளுவர் சொல்கிறார் 


"இல்லாதவர்கள் பலராகவும், இருப்பவர்கள் சிலராகவும் இருக்கக் காரணம் தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர்கள் பலராகவும் இருப்பதால்"


என்று. 


பாடல் 


இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.


பொருள் 


இலர் = இல்லாதவர்கள் 


பலர் = அதிக எண்ணிகையில் 


ஆகிய = ஆனதற்கு 


காரணம் = காரணம் 


நோற்பார் = நோன்பு நோற்பார், தவம் மேற்கொள்வார் 


சிலர் = சிலராகவும் 


பலர் = அதிக எண்ணிகையில் உள்ளவர்கள் 


நோலா தவர் = தவத்தை செய்யாதவர்கள்.


இந்த உரை ஒரு மேலோட்டமான ஒரு உரை. 


இதில் உள்சென்று பரிமேலழகர் ஒரு உரை செய்கிறார். 


"செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன"


இருப்பதும், இல்லாததும் என்பது பொருள் செல்வத்தைப் பற்றியது அல்ல, அது அறிவு இருப்பதும், இல்லாததும் பற்றி என்கிறார். 


அது எப்படி இலர்பலர் என்று தானே இருக்கிறது. அதை எப்படி குறிப்பாக அறிவு இல்லாதவர் பலர் என்று கூற முடியும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் நாலடியாரில் இருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார். 


நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


கொஞ்சம் நாலடியாருக்குள் செல்வோம். 


இந்த உலகில் அறிவில்லாத மடையர்களிடம் நிறைய செல்வம் குவிந்து கிடக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறீர்கள்?  யாருக்கு வேண்டும் அறிவு? நிறைய செல்வம் இருந்தால் போதாதா?  அறிவை வைத்துக் கொண்டு என்ன செய்வது ?


நாலடியார் சொல்கிறது, 


"ஆண்மை இல்லாமல், பெண் குணம் நிறைந்த ஒரு பேடி நிறைய அணிகலன்களை அணிந்து கொள்ளலாம். அது அவனுக்கு அழகு செய்யுமா?  அசிங்கமாக அல்லவா இருக்கும்? அருவெறுக்கும் படி அல்லவா இருக்கும். அது போல, அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வமும் என்கிறது நாலடியார். 


மீண்டும் குறளுக்கு வருவோம். 


இல்லாமை என்பது இங்கே அறிவின்மையை குறிக்கிறது என்கிறார். 


அறிவில்லாவிட்டா இந்தப் பிறவியிலும் பலன் இல்லை. மறு பிறவியிலும் பலன் இல்லை.


இந்தக் குறளோடு தவம் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


மீண்டும் ஒரு முறை அந்தப் பத்து குறளையும் வாசித்துப் பாருங்கள். 


ஏதேனும் புதிய பொருள் தோன்றலாம்.




Wednesday, July 10, 2024

கந்தர் அநுபூதி - அறிவு

கந்தர் அநுபூதி - அறிவு 


நாம் அறிவு என்று எதைச் சொல்கிறோம்? எதையாவது ஒன்றிற்கு பேர் வைத்து விட்டால் அது அறிவு என்கிறோம். 


உதாரணமாக, நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்கிறோம். பெரிய அறிவாளி, அதைக் கண்டு பிடித்தவர் என்கிறோம். 


மரத்தில் இருந்து ஆப்பிள் விழுகிறது.  ஏன் விழுகிறது என்று தெரியவில்லை. ஆனால், அப்படி விழுவதற்கு பெயர் புவி ஈர்ப்பு விசை என்று பெயர் வைத்தார். 


தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கிறது? அதில் குளோரோபில் என்ற ஒரு பொருள் இருக்கிறது. எனவே பச்சையாக இருக்கிறது. ஏன் குளோரோபில் பச்சையாக இருக்கிறது என்று கேட்டால் பதில் இல்லை. 


ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கும் பெயர் இல்லை என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு இந்த உலகம் பற்றி என்ன தெரியும்?  


அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். 


உங்கள் பெயர், உங்கள் படிப்பு, நீங்கள் செய்யும் வேலை இந்த மூன்றும் இல்லாமல் உங்களை மற்றவர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்?  


அது இது என்ற பெயர்களைத் தாண்டி பொருளில் என்ன இருக்கிறது?  உலகில் என்ன இருக்கிறது?  அது உண்மையான அறிவு. 


அந்த அறிவு யாருக்கு வரும்? 


அப்படிப்பட்ட அறிவாளிகள், ஞானிகள் எப்படி இருப்பார்கள்?  அந்த ஞானத்தை அடைந்தால் நாம் எப்படி இருப்போம்?


இவற்றை விளக்குகிறார் அருணகிரியார்.


பாடல் 


அறிவொன்றற நின்றறிவா ரறிவிற் 

பிறிவொன்றற நின்ற பிரானலையோ 

செறிவொன்றற வந்திருளே சிதைய 

வெறிவென்ற வரோறுேம் வேலவனே . 


சீர் பிரிக்காவிட்டால் படிப்பதே சிரமம் 

 

அறிவு ஒன்று அற  நின்ற அறிவார் அறிவில்  

பிறிது ஒன்று அற  நின்ற பிரான் நீ அலையோ

செறிவொன்று அற வந்த இருளே சிதைய 

வெறி வென்றவர் உறும்  வேலவனே .


பொருள் 


அறிவு ஒன்று  = புற அறிவுகள், உலகப் பொருள்களைப் பற்றிய அறிவுகள்


அற = நீங்க 


நின்ற அறிவார் அறிவில் = நிலைத்து நிற்கும் அறிவால் அறிவார் 

  

பிறிது ஒன்று அற = உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லாத 


நின்ற பிரான் = நிலைத்து நிற்கும் பிரான் 


நீ அலையோ = நீ அல்லவா 


செறிவொன்று அற = செறி என்றால் அடர்ந்த. ஞானத்தை மூடி மறைக்க. 


 வந்த இருளே சிதைய =  வந்த அஞ்ஞானம் என்ற இருள் விலக 


வெறி = காமம், கோபம் போன்ற வெறித்தனமான உணர்வுகளை 


வென்றவர் = வென்ற ஞானிகள் 


 உறும்  வேலவனே  = அடையும் வேலவனே 


என்ன சொல்ல வருகிறார்?


உலக அறிவு மாறிக் கொண்டே இருக்கும். இன்று இருப்பது நாளை இருக்காது. புதிதாக வேறு ஒன்று வந்து விடும். இவற்றின் பின்னால் போனால், அதற்கு ஒரு முடிவே இல்லை. 


மாறாத, நிலைத்த ஞானம் ஒன்று இருக்கிறது. அதை அடைய வேண்டும். அது எப்போது வரும் என்றால், காமம், குரோதம், போன்ற உணர்வுகள் விலகி மனம் அமைதி அடைந்தால் வரும். அப்படி, அந்த நிலையை அடைந்தவர்கள் வணங்கும் வேலவனே என்று அவனைத் துதிக்கிறார். 


எது உண்மையான அறிவு என்று சிந்திக்க வைக்கிறார்.  


 



Tuesday, July 9, 2024

திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும்

 திருக்குறள் - கூற்றம் குதித்தலும் கை கூடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post_9.html


நமது பெரும்பாலான  துன்பங்களுக்கு  அடிநாதமாக இருப்பது மரண பயம்.  


எந்த துன்பத்தை எடுத்துக் கொண்டாலும், ஆழ்ந்து சிந்தித்தால் அதன் அடியில் இருப்பது மரணம் பற்றிய பயம் என்று தெரிய வரும். 


இப்படி யோசித்துப் பார்ப்போம், மரணமே கிடையாது என்று ஒரு வரம் நமக்கு கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். பசி, பிணி, ஏழ்மை, எதினாலும் நமக்கு மரணம் வராது என்று இருந்தால் எப்படி இருக்கும்?  


மரண பயம் பெரும் பயம்.


பெரிய பெரிய தவம் செய்தவர்கள் இறைவனிடம் கேட்பது "மரணத்தை வெல்ல வேண்டும்" என்ற வரம் தான். எந்த வரத்தையும் தரவல்ல இறைவன் கூட, "மரணத்தை வெல்லும் வரத்தை மட்டும் இது வரை யாருக்கும் தரவில்லை.". 


பெரிய பெரிய ஞானிகளைக் கூட இந்த மரண பயம் விட்டுவைக்கவில்லை. 


 காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்


என்பார் பாரதியார். 


"மரணப் பிரமாதம் நமக்கு இல்லை" என்பார் அருணகிரி. 


மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை

கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள

சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா

பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.


"காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் "

என்பார் அபிராமி பட்டர். 


இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.

உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே


மரண பயம் எல்லோருக்கும் இருக்கிறது. 


மரணத்தை வெல்ல முடியாது. தோன்றியது இறந்தே தீரும். பின் என்ன செய்வது. 


இந்த பயத்தைத் தாண்டி போய் விட முடியும் என்கிறார்.


தவம் செய்தால் மரணத்தை தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


பாடல் 



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு


பொருள் 



கூற்றம் = கூற்றுவன், எமன், காலன். உடலையும், உயிரையும் கூறு படுத்துவதால் அவன் கூற்றுவன் 


குதித்தலும் = தாண்டிச் செல்லுதலும் 


கைகூடும் = கை கூடும். முடியும். 


நோற்றலின் = தவம் நோர்பவற்கு 


ஆற்றல் = அந்த ஆற்றலினால் 


தலைப்பட் டவர்க்கு = முனைந்து அடைந்தவர்களுக்கு 


தவம் நோற்று, அதில் வெற்றி கண்டவர்களுக்கு, எமனையும் தாண்டிச் செல்ல முடியும் என்கிறார். 


இங்கே குதித்தலும் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார். பலர் பல அர்த்தம் சொல்கிறார்கள். பரிமேலழகர் எமனை கடந்து செல்ல முடியும் என்று பொருள் சொல்கிறார். 


சிந்திக்க வேண்டிய சொல். 


Sunday, July 7, 2024

பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே

 பெரிய புராணம் - விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே 


இறைவனை எப்படி அடைவது?


இறைவனை அடைய ஒரே ஒரு வழிதான் இருக்கிறதா? அல்லது பல வழிகள் இருக்கின்றனவா?


பூஜை என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும், ஆசாரம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்...குளித்து, முடித்து, ஈரத் துணி உடுத்து, இறைவன் மேல் பாடல்களைப் பாடி, கற்பூர தீபம் காட்டி...என்று ஒரு வழி முறை இருக்கிறதா அல்லது எப்படி வேண்டுமானாலும் வழிபடலாமா? 


எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம்...அன்பும், பக்தியும் தான் முக்கியம். என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்பதல்ல முக்கியம் என்பதை விளக்க வந்த நூல் பெரிய புராணம். 


ஒவ்வோரு நாயன்மாரும் வேறு வேறு வழியில் சென்று இறைவனை அடைந்தார்கள். எல்லோரும் ஒரே வழியில் செல்லவில்லை. 


அடிப்படை ஒன்றுதான். இறைவன் மேல் அன்பு, காதல், பற்று, பக்தி. அவன் அடியார்கள் மேல் அன்பு, மரியாதை, மதிப்பு. மத்தபடி அவர்கள் செய்தவை ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவை. 


கண்ணப்பர் வாயில் நீரை கொண்டுவந்து, இறைவன் மேல் கொப்பள்ளித்து அபிஷேகம் பண்ணினார், மாமிசத்தை கடித்துப் பார்த்து சரியாக உள்ளதை இறைவைனுக்கு படையல் செய்தார், தலையில் சூடிய மலரை இறைவனுக்கு படைத்தார்...அவர் தொடங்கிய ஆறே நாளில் இறைவனை அடைந்தார். 


"நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லேன்" என்பார் பட்டினத்தார். 


வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் 

மாதுசொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் 

தொண்டு செய்து நாளாறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன் 

நான் இனிச் சென்று ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே


அதே கோவிலில் ஆசார அனுஷ்டாங்களை கடைப்பிடித்து வாழ் நாள் எல்லாம் பூஜை செய்த சிவ கோச்சாரியாருக்கு இறைவன் காட்சி தரவில்லை. 


பெரிய புராணம் சொல்லும் செய்தி,  பக்தி முக்கியம். ஆராதனை, அபிஷேகம், தோத்திரம், ஆசாரம் முக்கியம் அல்ல என்பதுதான். 



"நிலவை தலையில் சூடி, மன்றத்தில் நடனமாடும் சிவனை துதி செய்யும் நாயன்மார்களும் அவர்களது அடியார்களும் சேர்ந்த பெரிய குழு கடைபிடித்த விதிகள் உலகில் என்றும் சிறந்து விளங்கட்டும்"


என்று ஆரம்பிக்கிறார் சேக்கிழார். 


பாடல் 


மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்

துதிசெயு நாயன்மார் தூய சொன்மலர்ப்

பொதிநல னுகர்தரு புனிதர் பேரவை

விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.


பொருள் 


மதி = நிலவு 


வளர் = வளரும். தேய் பிறை வளரும் 


சடைமுடி = சடை முடியைக் கொண்ட 


மன்று ளாரை = மன்றத்தில் உள்ளவரை  


முன் = முன்பு 


துதி = தோத்திரம் 


செயு = செய்யும் 


நாயன்மார் = நாயன்மார்களது  


தூய = தூய்மையான 


சொன் மலர்ப் = சொல்லிய ம் மலர். அதாவது தேவாரம், திருவாசகம் போன்ற பாமாலைகள் 


பொதிநல னுகர் = பொதி + நலன் + நுகர் = பொதிந்த நல்லனவற்றை அறிந்து அனுபவிக்கும் 

 


தரு = தரக் கூடிய 


புனிதர் பேரவை = புனிதர்கள் நிறைந்த பெரிய அவை (குழு) 


விதிமுறை  = அவர்கள் செய்த விதியினை 


உலகினில் = இந்த உலகில் 


விளங்கி = விளங்கச் செய்து 


வெல்கவே = அவை வென்று நிலைக்க வேண்டும்.


பேரவை - பெரிய அவை. இறைவனை வழிபடும் கூட்டம் நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அது பெரிய கூட்டமாக இருக்கும் என்பதால் பேரவை என்றார். 


விளங்கி வெல்கவே - அவர்கள் செய்த நூல்கள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை இவற்றை உலகுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். விளங்கினால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த விதி வென்றுவிடும். புரியாமலேயே, கண்மூடித்தனமாக நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைப் பின் பற்றினால் அது நீண்டு நிலைக்காது. புரிந்து செய்வது நிலைத்து நிற்கும். "விளங்கி, வெல்கவே". 


பொதி நலன் நுகர் = உண்மை அந்த நூல்களில் பொதித்து வைக்கப் பட்டு இருக்கிறது. அந்த நூல்களில் உள்ள நன்மையை ஆராய்ந்து எடுத்து அவற்றை அனுபவிக்க வேண்டும். 


முன் துதி செய்யும் நாயன்மார் = முன் என்றால் முன்பு. முன்பு நடந்ததை நினைத்து. துதி, மனதால் நினைத்து. செய்யும் என்றால் கையால் தொழுது. மனம், வாக்கு, செயல் என்ற மூன்றாலும் வழிபட்டு என்று பொருள். 



Friday, July 5, 2024

திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும்

 திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும் 


தவம் எப்போது செய்ய முடியும்?  நினைத்தவுடன் தவம் செய்து விட முடியுமா?


இன்று திருக்குறளில் தவம் என்ற அதிகிஆரத்தைப் படித்தேன்..என்னமா எழுதி இருக்கிறார்...நானும் இன்றே தவம் செய்யப் போகிறேன் என்று நினைத்தால் முடியுமா?


இரண்டாவது, தவம் செய்ய இடம் வேண்டாமா?  புராண கதைகளில் எல்லாம் தவம் செய்ய வேண்டும் என்றால் காட்டுக்குப் போக வேண்டும், குகையில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும் என்றெல்லாம் வருகிறது. காட்டுக்குப் போனால், பசி, தாகம், காட்டு மிருகங்களால் வரும் அபாயம் எல்லாம் இருக்குமே. அதை பார்பதா, தவம் செய்வதா?  


வள்ளுவர் சொல்கிறார், 


நான், எனது என்ற அக புற பற்றுகளை விடுத்து எவன் வேலை செய்கிறானோ, அவனே தவம் செய்பவன் ஆகிறான். அவனை நோக்கி அனைத்து உயிர்களும் தொழும் என்கிறார். 


சற்று சிக்கலான குறள். 


பாடல் 



தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்


பொருள் 


தன்னுயிர் = தன்னுடைய உயிர் 


தான் = தான் என்ற எண்ணம் 


அறப்  =  அறவே நீங்கப் 


பெற்றானை = பெற்றவனை 


ஏனைய = மற்றைய 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்கள் 


எல்லாம் தொழும் = எல்லாம் கை கூப்பி வணங்கும் 


அது என்ன, தன்னுயிர், தான் அறப்பெற்றானை ?


தனது உயிரைப் பற்றியும் கவலைப் படாமல், தனது உடமைகளைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு பொது நோக்குக்காக வாழ்பவனை எல்லா உயிர்களும் தொழும். 


இல்லையே. சரியா புரியலியே....


ஒரு விஞ்ஞானி இருக்கிறார். மக்களை வாட்டி வதைக்கும் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கிறார். சோறு, தண்ணி, தூக்கம் இல்லை. இராவா, பகலா பாடுபட்டு இறுதியில் அந்த மருந்தைக் கண்டு பிடித்து விடுகிறார். 


அந்த மருந்தினால் எத்தனையோ தலைமுறைகள் பயன் பெறப் போகின்றன. 


"இந்த மருந்தை கண்டுபிடித்த அந்த மகராசன் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்துவோம் அல்லவா?


கான்சருக்கு மருந்து கண்டு பிடித்தவர்கள், ஆபரேஷன் க்கு மயக்க மருந்து கண்டு பிடித்தவர்கள் என்று பட்டியல் நீளும். 


தன் சுகம், தன் குடும்பம் என்று இருக்காமல், பொது நலம் கருதி, உழைப்பவர்களை (தவம் செய்பவர்களை), எல்லா உயிரும் தொழும். 


பெனிசிலின் மருந்தை என்றோ கண்டு பிடித்தார், இன்றும் உயிர் காத்து நிற்கிறது அல்லவா. 


தவம் செய்பவர்களை உலகில் உள்ள உயிர்கள், இன்று மட்டும் அல்ல, வரும் நாட்களிலும் கை கூப்பித் தொழும் என்றவாறு. 






Monday, July 1, 2024

பெரிய புராணம் - மனிதப் பிறவியின் நோக்கம்

 பெரிய புராணம் - மனிதப் பிறவியின் நோக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/07/blog-post.html

மனிதர்களுக்கு விலங்குகளுக்கும் உள்ள பெரிய வேற்றுமை என்று சொன்னால், மனிதன் சிரிக்கத் தெரிந்தவன், விலங்குகளுக்கு சிரிக்கத் தெரியாது என்று பலர் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


அது மட்டும்தான் வேறுபாடா?


மனிதர்களால் சிந்திக்க முடியும். விலங்குகளும் சிந்திக்கும். மனிதன் அளவுக்கு இல்லை என்றாலும் அடிப்படை சிந்தனை இருக்கிறது. எதிர்காலத்துக்கு வேண்டும் என்று சேர்த்து வைக்கின்றன, கூடு கட்டுகின்றன, குஞ்சுகளை பாதுகாக்கின்றன, குட்டிகளுக்கு இரை தேடித் தருகின்றன. 


இருந்தும், 


அவற்றின் சிந்தனை ஒரு எல்லையில் நின்று விடுகிறது. மனிதனின் சிந்தனை விரிந்து கொண்டே போகிறது. அதற்கு ஒரு எல்லை இல்லை. 


எதை அடைய இந்த பிறவி நமக்கு கிடைத்து இருக்கிறது என்று மனிதன் சிந்திக்கிறான். பொருள் சேர்க்கவா?  இன்பங்களை அனுபவிக்கவா?  அதிகாரம் செய்யவா?  இன விருத்தி செய்யவா? என்று கேட்டுக் கொண்டே போன மனிதனுக்கு ஒன்று தெளிவாகத் தெரிந்தது. 


இவை எல்லாம் அழியக் கூடியன. செல்வம், இளமை, அதிகாரம், செல்வாக்கு, உறவுகள் எல்லாம் நிரந்தரம் இல்லாதவை. இன்று இருக்கும், நாளை போகும். அவற்றை அடைவதால் என்ன பயன். நாளை நம்மை விட்டுப் போய் விடும். அதற்காக நேரத்தை செலவழிப்பானேன் என்று நினைத்த மனிதன், இறுதியாக ஒன்றை கண்டு கொண்டான். 


என்ன ஆனாலும் சரி, அழியாத, மாறாத, நிரந்தரமான ஒரு உறுதியான பொருளை அடைவதுதான் பிறவியின் நோக்கம். அது என்ன என்று சிந்திக்கத் தலைப்பட்டான். 


அதை எப்படி அடைவது என்று சிந்தித்து, சிந்தித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். இறைவனின் திருவடிகளே உறுதியான பொருள். அதை அடைவதான் பிறவியின் நோக்கம் என்று உணர்ந்தான். 


பாடல் 

ஊன டைந்த உடம்பின் பிறவியே

தான டைந்த உறுதியைச் சாருமால்

தேன டைந்த மலர்ப்பொழிற் றில்லையுள்

மாந டஞ்செய் வரதர்பொற் றாடொழ.


பொருள் 


ஊன டைந்த = ஊனை அடைந்த, பெற்ற 


உடம்பின் = இந்த உடம்பின் 


பிறவியே = பிறவியின் நோக்கம் என்பது 


தான டைந்த = தான் இந்தப் பிறவியை அடைந்ததின் 


உறுதியைச் = நோக்கம் என்பது உறுதிப் பொருளை 


சாருமால் = சார்ந்து இருப்பதே. அதை எப்படி அடைவது என்றால்  


தேன டைந்த = தேன் நிறைந்த 


மலர்ப் = மலர்கள் உள்ள 


பொழிற் றில்லையுள் = சோலைகள் உள்ள தில்லையில் 


மாந டஞ்செய் = பெரிய நடனம் செய்யும் 


வரதர் = வரம் தருபவர் (சிவன்) 


பொற் றாடொழ = பொன் போன்ற பாதங்களைத் தொழுவதே 


அதை விட்டு விட்டு மற்றதெல்லாம் தேவை இல்லாத ஒன்று என்கிறார் சேக்கிழார் பெருமான். 


கற்றதனால் ஆய பயன் என்கொல்  வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். 


படி. நிறைய படி. படிக்க படிக்க, வரும் ஞானம் உன்னை இறைவனிடம் இட்டுச் செல்லும். 


இதையே அப்பரடிகளும் 


"...இனித்தமுடன் எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே"


என்பார். இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால், மனித பிறவி வேண்டும். 


ஞானம் என்பது தமிழ் படிப்பதாலோ, பக்தி இலக்கியம் படிப்பதாலோ மட்டும் வருவது அல்ல. எந்தத் துறையில், எதைப் படித்தாலும், அது முடிவில் இறைவன் திருவடிகளையே சென்று அடையும் என்பது அவர்கள் முடிவு. 


பயணத்தை தொடங்குவோம். முடிவு வரும் போது வரட்டும்.