Friday, July 5, 2024

திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும்

 திருக்குறள் - உயிர்கள் எல்லாம் தொழும் 


தவம் எப்போது செய்ய முடியும்?  நினைத்தவுடன் தவம் செய்து விட முடியுமா?


இன்று திருக்குறளில் தவம் என்ற அதிகிஆரத்தைப் படித்தேன்..என்னமா எழுதி இருக்கிறார்...நானும் இன்றே தவம் செய்யப் போகிறேன் என்று நினைத்தால் முடியுமா?


இரண்டாவது, தவம் செய்ய இடம் வேண்டாமா?  புராண கதைகளில் எல்லாம் தவம் செய்ய வேண்டும் என்றால் காட்டுக்குப் போக வேண்டும், குகையில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும் என்றெல்லாம் வருகிறது. காட்டுக்குப் போனால், பசி, தாகம், காட்டு மிருகங்களால் வரும் அபாயம் எல்லாம் இருக்குமே. அதை பார்பதா, தவம் செய்வதா?  


வள்ளுவர் சொல்கிறார், 


நான், எனது என்ற அக புற பற்றுகளை விடுத்து எவன் வேலை செய்கிறானோ, அவனே தவம் செய்பவன் ஆகிறான். அவனை நோக்கி அனைத்து உயிர்களும் தொழும் என்கிறார். 


சற்று சிக்கலான குறள். 


பாடல் 



தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும்


பொருள் 


தன்னுயிர் = தன்னுடைய உயிர் 


தான் = தான் என்ற எண்ணம் 


அறப்  =  அறவே நீங்கப் 


பெற்றானை = பெற்றவனை 


ஏனைய = மற்றைய 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்கள் 


எல்லாம் தொழும் = எல்லாம் கை கூப்பி வணங்கும் 


அது என்ன, தன்னுயிர், தான் அறப்பெற்றானை ?


தனது உயிரைப் பற்றியும் கவலைப் படாமல், தனது உடமைகளைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு பொது நோக்குக்காக வாழ்பவனை எல்லா உயிர்களும் தொழும். 


இல்லையே. சரியா புரியலியே....


ஒரு விஞ்ஞானி இருக்கிறார். மக்களை வாட்டி வதைக்கும் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருக்கிறார். சோறு, தண்ணி, தூக்கம் இல்லை. இராவா, பகலா பாடுபட்டு இறுதியில் அந்த மருந்தைக் கண்டு பிடித்து விடுகிறார். 


அந்த மருந்தினால் எத்தனையோ தலைமுறைகள் பயன் பெறப் போகின்றன. 


"இந்த மருந்தை கண்டுபிடித்த அந்த மகராசன் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்துவோம் அல்லவா?


கான்சருக்கு மருந்து கண்டு பிடித்தவர்கள், ஆபரேஷன் க்கு மயக்க மருந்து கண்டு பிடித்தவர்கள் என்று பட்டியல் நீளும். 


தன் சுகம், தன் குடும்பம் என்று இருக்காமல், பொது நலம் கருதி, உழைப்பவர்களை (தவம் செய்பவர்களை), எல்லா உயிரும் தொழும். 


பெனிசிலின் மருந்தை என்றோ கண்டு பிடித்தார், இன்றும் உயிர் காத்து நிற்கிறது அல்லவா. 


தவம் செய்பவர்களை உலகில் உள்ள உயிர்கள், இன்று மட்டும் அல்ல, வரும் நாட்களிலும் கை கூப்பித் தொழும் என்றவாறு. 






3 comments:

  1. சாதாரணமாக நாம் எல்லோரும் தவம் என்றால் மேலுலகத்தில் நல்ல கதியை அடைய  தெய்வத்தின் அருளை பெற இடை விடாது பகவானின் நாமத்தை நினைத்து கொண்டும், சொல்லி கொண்டும இருப்பதைத் தான் தவம் என நினைத்துக கொண்டிருக்கிறோம்.அது அல்ல என்பதை விளக்கியுள்ளார்

    ReplyDelete
  2. தான் அறப்பெற்றான் என்றால் தனது ego வை ஒழித்து வென்றான் என்று கொள்ளலாம்

    ReplyDelete