Tuesday, July 30, 2024

திருக்குறள் - புலித்தோல் போர்த்திய பசு

 திருக்குறள் - புலித்தோல் போர்த்திய பசு 



பசுத் தோல் போர்த்திய புலி என்று கேட்டு இருக்கிறோம். வள்ளுவர் புலித்தோல் போர்த்திய பசு பற்றி கூற இருக்கிறார். 


துறவி என்பவன் கட்டிய மனைவி, மக்கள், சொத்து, சுகம் போன்றவற்றை துறந்து வாழ்பவன். அவனுக்கு உலக இன்பங்களில் நாட்டம் இல்லை என்று மக்கள் நம்புகிறார்கள். கட்டிய மனைவியையே துறந்தவன் வேறு எந்த பெண் மேல் ஆசை வைக்கப் போகிறான், என்று நினைத்து தங்கள் மனைவி, பெண் பிள்ளைகளை துணிந்து அவன் இருக்கும் இடத்துக்கு அனுப்புகிறார்கள். 


ஆனால், எல்லா துறவிகளும், உண்மையிலேயே துறவிகளா என்றால் இல்லை. 


சிலர், துறவி வேடம் அணிந்த சாதாரண மனிதர்கள். சாதாரண மனிதர்களுக்கு உள்ள காமம், ஆசை, விருப்பு, வெறுப்பு எல்லாம் அவர்களிடம் அப்படியே இருக்கும். வேடம் தான் துறவி. உள்ளே மிகச் சாதாரண, சராசரி மனிதனாக இருப்பார்கள். 


அவர்களைத்தான் வள்ளுவர் புலித் தோல் போர்த்திய பசு என்கிறார்.


ஏன்?


பசு வயலில் இறங்கி பயிர் பச்சைகளை மேயும். அதைப் பார்த்து அங்குள்ளவர்கள், அதை விரட்டி அடிப்பார்கள். 


அந்தப் பசுவே தன் மேல் ஒரு புலித்தோலை போர்த்திக் கொண்டால் மக்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். காரணம்

முதலாவது, புலி என்று நினைத்து பயந்து ஓடி விடுவார்கள். 


இரண்டாவது, புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. எனவே, தங்கள் பயிருக்கு ஒரு சேதாரமும் இல்லை என்று நினைப்பார்கள். 


எனவே, பசு கள்ளத்தனமாக ஊரை ஏமாற்றி பயிரை மேய்ந்து விடும். 


அது போல சில போலிச் சாமியார்கள், துறவி வேடம் போட்டுக் கொண்டு உலக இன்பங்களை அனுபவிப்பார்கள் என்கிறார். 


பாடல் 


வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று


பொருள் 



வலிஇல் = துறவறம் மேற்கொள்ளும் மன வலிமை இல்லாத 


 நிலைமையான்  = நிலையில் உள்ளவன் 


வல்லுருவம் = பெரிய துறவி வேடம் 


பெற்றம் = பசு 


புலியின்தோல் = புலியின் தோலை 


போர்த்து = மேலே போர்த்துக் கொண்டு 


மேய்ந் தற்று = மேய்ந்தது போல 


உலகம், வெளித் தோற்றத்தை வைத்து ஒருவனை எடை போடுகிறது. அது தவறு என்கிறார். மடாதிபதிகள், துறவிகள், குருமார்கள் என்று அவர்களின் தோற்றம் மற்றும் அடை மொழிகளை கொண்டு ஒருவனை எடைபோடக் கூடாது. 


வள்ளுவர் காலத்திலேயே போலிச் சாமியார்கள் இருந்து இருக்கிறார்கள். அன்றும் மக்கள் ஏமாந்து இருக்கிறார்கள். 


என்ன சொல்ல. 




No comments:

Post a Comment