கந்தரனுபூதி - மதி கெட்டு அறவாடி
இப்போதெல்லாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போவது என்றால், வண்டியில் கூகிள் வரை படத்தை ஏற்றி (load ) பண்ணிவிட்டு அது காட்டும் வழியில் போகிறோம். இடது புறம் திரும்பு என்றால் திரும்புகிறோம். நேராகப் போ என்றால் போகிறோம்.
ஒரு வேளை அந்த செயலி தவறான வழியைக் காண்பித்தால், நாமும் அதைப் பின் பற்றி தவறான இடத்துக்குப் போய் விடுவோம் அல்லவா.
அப்படி போய்,காட்டில் மாட்டிக் கொண்டவர்கள், கடலுக்குள் போனவர்கள், வயகாட்டுகுள் போனவர்கள் பற்றிய செய்தியை எல்லாம் படிக்கிறோம். சிரிக்கிறோம்.
நம்மை ஒவ்வொரு நாளும் வழி நடத்துவது நம் அறிவு. அது நம்மை சரியாக வழி நடத்துகிறதா என்று எப்படித் தெரியும்?
இவரைப் பார், அதைச் செய், இதைச் செய்யாதே, அந்த புத்தகத்தில் உள்ளதை பின் பற்றினால் இந்த இந்த பலன்கள் கிடைக்கும் என்று நம் மனம் சொல்கிறது. அது சரியா தவறா என்று எப்படித் தெரியும்?
நம் கருத்துக்கு எதிர் கருத்தைக் கொண்டவர்களும் தாங்கள் சரியான பாதையில் போவதாகச் சொல்கிறார்கள். யார் செல்லும் பாதை சரி?
குழப்பம் வருகிறது அல்லவா? மதி மயங்குகிறது அல்லவா? எந்த வழியில் செல்வது என்று ஒரு மயக்கம் வருகிறது அல்லவா? எது சரியான வழி என்று திகைக்கிறோம் அல்லவா?
கூகிள் காட்டிய வழியில் சென்ற பின், நாம் நினைத்த இடம் வரவில்லை. அல்லது, நாம் போகும் பாதை சரிதானா என்ற சந்தேகம் வந்தால் என்ன செய்வோம்? அருகில் உள்ள கடையில், அல்லது அங்கு இருக்கும் ஆட்களிடம் விசாரிப்போம்.
வாழ்க்கை என்ற பயணத்தில், செல்லும் இடம் சரிதானா என்று யாரைக் கேட்டு உறுதி செய்து கொள்வது?
எல்லாம் அறிந்த, ஞானமே வடிவான முருகன் இருக்கிறான். அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனக்கு இனிமேல் ஒரு குழப்பமும், மயக்கமும் இல்லை என்கிறார்.
பாடல்
மதி கெட்டறவாடி மயங்கியறக்
கதி கெட்டவமே கெடவோ கடவேன்
நதி புத்ர ஞான சுகாதிய வத்
திதி புத்ரர் வீறு அடு சேவகனே
பொருள்
மதி கெட்டறவாடி = மதி கெட்டு அற வாடி = புத்தி கெட்டுப் போய், ரொம்ப வாட்டம் உற்று
மயங்கி = மயக்கம் உற்று
யறக் கதி = அற கதி = அறவழி
கெட்டவமே = கெட்டு + அவமே = வீணாக கெட்டுப் போய்
கெடவோ கடவேன் = வீணாகவோ நான் இருக்கிறேன்? (இல்லை என்பது கருத்து)
நதி புத்ர = நதியின் புத்திரனே
ஞான சுகாதிய = ஞான + சுக + அதிபதி = ஞானத்தினால் வரும் பேரின்பத்தை தரும் தலைவனே
அத்திதி புத்ரர் = அத்திதி என்ற அரக்கியின் புத்திரார்களான அரக்கர்கள்
வீறு = பெருமை, வீரம், வீரியம்
அடு = சண்டையிட்ட
சேவகனே = சேவகனே
எனக்கு வாழ்வில் பல குழப்பங்கள் இருக்கு. நீ தான் ஞானத்தின் தலைவன் ஆயிற்றே. உன்னிடம் வந்து விட்டேன். சரியான வழியைக் காட்டு என்று வேண்டுகிறார். அல்லது, அவன் காட்டுவான், இனி குழப்பம் இல்லை என்றும் கொள்ளலாம்.
முருகன் எப்படி வழி காட்டுவான்?? இதெல்லாம் சும்மா சொல்றது தான்.
ReplyDelete