Monday, June 4, 2012

கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை


கம்ப இராமாயணம் - பொங்குதே புன்னகை 


இராமனும் சீதையும் கோதாவரிக் கரையில் வசிக்கிறார்கள். 

"சான்றோர் கவி என கிடந்த கோதாவரி" என்பான் கம்பன்.

யாரும் அற்ற அடர்ந்த வனம். கரை புரண்டு ஓடும் கோதாவரி. கரையின் இருபக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள்.

அந்த மரங்களின் நிழால் குளிர்ந்து விளங்கும் ஆற்றங்கரை.

இராமனும், சீதையும் தனிமையில்.

அந்த கோதாவரி ஆற்றில் நீர் அருந்த சில அன்னப் பறவைகள் வருகின்றன.

அவற்றின் நடையையை இராமன் பார்க்கிறான்.

அதை, சீதையின் நடையோடு ஒப்பிட்டு ஒரு புன்னகை சிந்தினான்.

அதே ஆற்றில் நீர் அருந்த யானைகள் வருகின்றன. நீர் அருந்திச் செல்லும் ஆண் யானையை சீதை பார்க்கிறாள்.

இராமனின் நடையை நினைத்துப் பார்க்கிறாள். என்றும் இல்லாமல் அன்று புதியதாய் ஒரு புன்னகை சிந்தினாள்.


காதல் இரசம் சொட்டும் கம்பனின் அந்தப் பாடல்....

ஓதிமம் ஒதுங்க, கண்ட உத்தமன், உழையள் ஆகும் 
சீதை தன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்; 
மாது அவள் தானும், ஆண்டு வந்து, நீர் உண்டு, மீளும் 
போதகம் நடப்ப நோக்கி, புதியது ஓர் முறுவல் பூத்தாள்.


ஓதிமம் = அன்னப் பறவைகள்

ஒதுங்க = ஒதுங்கி ஓர் ஓரமாய் இருக்கக்

கண்டஉத்தமன் = கண்ட உத்தமனான இராமன்

உழையள் ஆகும் = உழை என்றால் அண்மை என்று ஒரு பொருள் (மற்ற பொருள் = யாழின் நரம்பு, மான், நான்காவது சுரம், பூவின் இதழ்). கம்பன் எதை நினைத்து இந்த வார்த்தையை போட்டானோ. நான், அருகில் இருக்கும் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

சீதை தன் நடையை நோக்கி, = சீதையின் நடையை நோக்கி

சிறியது ஓர் முறுவல் செய்தான்; = சின்னதாக ஒரு புன்னகை செய்தான்

மாது அவள் தானும் = பதிலுக்கு அவளும்

ஆண்டு வந்து = அங்கு வந்து

நீர் உண்டு = நீர் குடித்து

மீளும் = மீண்டு செல்லும்

போதகம் நடப்ப நோக்கி = ஆண் யானை நடப்பதைப் பார்த்து

புதியது ஓர் முறுவல் பூத்தாள். = புதியதாய் ஒரு புன்முறுவல் பூத்தாள்



(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

1 comment:

  1. காதல் நிறைந்த, இராமன் - சீதை இருவரின் அன்னியோன்யத்தை உணர்த்தும் பாடல்.

    உழையள் என்ற சொல்லுக்கு எந்தப் பொருள் கொடுத்தாலும் பொருந்துகிறதே!

    பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    ReplyDelete