Tuesday, June 12, 2012

நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


அவள் காதலனோடு செல்ல முடிவு செய்து விட்டாள்.

யாரிடமும் சொல்லவில்லை. 

அவள் இருக்கும் வீடு, அப்பா, சகோதரர்கள், தோழிகள், வீட்டில் உள்ள சாமான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். இதை எல்லாம் விட்டு விட்டு போகப் போகிறோம் என்று அவளுக்குள் சோகம் ததும்புகிறது.

யாரிடம் சொல்வாள். சொல்லிவிட்டா ஓடிப் போக முடியும்.

அவளுடைய அம்மாவைப் பார்க்கிறாள். எப்படி இந்த அம்மாவை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்று மனம் தவிக்கிறது.

என்றும் இல்லாத வழக்கமாய் அம்மாவை கட்டிக் கொள்கிறாள். ரொம்ப இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.

அம்மாவிற்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் வீட்டை விட்டு காதலனோடு சென்று விட்டாள்.

அம்மா, தனிமையில் இருந்து யோசிக்கிறாள்.

"பாவம் ரொம்ப பயந்து விட்டாள் போல இருக்கிறது. அது தான் அவ என்னை அப்படி கட்டி கட்டி பிடிச்சாளா. அப்ப எனக்கு தெரியல ஏன் அந்த குழந்தை என்னை கட்டி கட்டி பிடிச்சுதுன்னு...ஹ்ம்ம்...இப்ப தெரியுது" என்று பெரு மூச்சு விடுகிறாள்.

நாலடியார் தரும் அந்தப் பாடல்

முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
தீம்பாவை செய்த குறி.


முலைக்கண்ணும் = மார்போடு மார்பு அழுத்தவும்

முத்தும் = எங்கள் முத்து சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று உரசவும்

முழுமெய்யும் = முழு உடம்பும் ஒன்றோடு ஒன்று உரசும் படி

புல்லும் = அணைத்துக் கொண்டாள்

இலக்கணம் யாதும் அறியேன் = அதுக்கு காரணம் என்ன என்று 
தெரியவில்லை

கலைக்கணம் = மான் கூட்டம்

வேங்கை வெரூஉம் = புலி வரும்போது

நெறிசெலிய = பயந்து பதறி செல்லுவதை

போலும்என் = போலும் என்

தீம்பாவை செய்த குறி. = மகள் செய்த குறிப்புகள்


புலி என்பது மகளின் திருமணத்தை எதிர்க்கும் அப்பா, அண்ணன்கள், உறவுகள் என்று கொள்ளலாம்.

வெளியே சொல்ல பயந்து, அம்மாவை கட்டிப் பிடித்து கொண்டாள். பிடித்தது மட்டும் அல்ல, கன்னத்தோடு கன்னம், கழுத்தோடு கழுத்து, மார்போடு மார்பு என்று ரொம்ப அழுத்தமாக கட்டி அணைத்து கொள்கிறாள்.

வீட்டில் எதிர்ப்பு,
காதலனோடு செல்ல தவிப்பு,
அம்மாவை கட்டிக் கொண்ட அன்பு,

ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி அந்த உணர்ச்சி அலைகள் நம் மனம் தொட்டு போவதை உணர முடிகிறதல்லாவா?



2 comments:

  1. இந்த மாதிரிக் காதலை அம்மாக்களுக்கு நன்கு புரியும் போலும்! அற்புதமான பாடல்.

    ReplyDelete
  2. Beautiful explanation, great work sir.

    ReplyDelete