Thursday, June 14, 2012

தேவாரம் - பிறவா நாள்


தேவாரம் - பிறவா நாள் 


திரு பாதிரிப் புலியூர்.

கடலூர் மாவட்டத்தின் தலை நகர்.

புலிக்கால் முனிவர் பூஜை செய்த தலம்.

திரு நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் போட்ட இடம்.

"சொற்றுணை வேதியன்" என்ற நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல் தெப்பமாக மாற, அதில் மிதந்து கரை ஏறி வந்தார்.

இன்றும் "கரை ஏற விட்ட குப்பம்" என்ற இடம் கடலுருக்கு அருகில் உள்ள தேவனாம்பட்டினம் என்ற கடற் கரையில் உள்ளது.

அங்கே நாவுக்கரசருக்கு ஒரு கோயில் இருக்கிறது.


நாவுக்கரசர் சொல்கிறார்....இறைவனைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவாத நாள் என்கிறார்.





அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.


அரியானை = அறிந்து கொள்வதற்கு கடினமானவனை

அந்தணர்தம் சிந்தை யானை = அந்தணர்களின் சிந்தனையில் இருப்பவனை

அருமறையின் = அறிய பெரிய வேதங்களின்

அகத்தானை = உள் இருப்பவனை

அணுவை = அணுத் துகளை

யார்க்கும் = யார் ஒருவரும்

தெரியாத தத்துவனைத் = தெரியாமல் வைத்த தத்துவனை

தேனைப் = தேன் போன்று இருப்பவனை

பாலைத் = பால் போன்றவனை

திகழொளியைத் = திகழும் ஒளி போன்றவனை

தேவர்கள்தங் கோனை = தேவர்களின் தலைவனை (கோ = தலைவன்)

மற்றைக் = மற்றும்

கரியானை = கரிய நிறம் கொண்ட திருமால்

நான்முகனைக் = பிரமன்

கனலைக் = தீ

காற்றைக் = காற்று

கனைகடலைக் = அலையும் கடல்

குலவரையைக் = பெரிய மலை

கலந்து நின்ற = இவற்றை எல்லாம் கலந்து நின்றானை

பெரியானைப் = பெரியவனை

பெரும்பற்றப் புலியூ ரானைப் = புலி கால் முனிவர் பூசித்த திருப்பாதிரிப் புலியூரில் உள்ளவனை

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. = பற்றி, பேசாத நாள் எல்லாம் பிறவாத
நாளே

பிறவாத நாள் எல்லாம், வாழாத நாள் தானே ?

6 comments:

  1. அந்தணர்தம் சிந்தை யானை why only in அந்தணர்களின் சிந்தனையில்?

    ReplyDelete
    Replies
    1. இறைவனை பற்றி சிந்திப்பவர்கள் - அந்தணர்கள்...:)

      நாவுக்கரசரின் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. அந்த காலத்தில் அந்தணர்கள் தான் பொதுவாக ஆண்டவன் சேவையில் ஈடு பட்டு இருந்தார்கள் என்று நினைக்கிறேன்

      Delete
  2. அணுவை யார்க்கும் தெரியாத தத்துவனை- SUPERB LINE.

    ReplyDelete
  3. ஏன் திருப் "பாதிரிப்" புலியூர் என்று பெயர் வந்தது? \

    பாடல் பரவாக இல்லை. சும்மா இறைவனைப் பாடுவோம் என்பது போன்ற பாடல்கள் எனக்கு அவ்வளவு மனதுக்கு விருப்பமாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஊரின் தல விருட்சம் "பாதிரி" மரம்.

      மா, பலா, பாதிரியைப் பார் என்று ஒரு பாடல் உண்டு.
      மா மரம் பூத்து பின் கனி கொடுக்கும்
      பலா மரம் பூக்காமலே கனி கொடுக்கும்
      பாதிரி மரம் பூக்கவும் செய்யாது, கனியும் கொடுக்காது

      அது போல் மனிதர்களும் உண்டு

      கேட்காமலே கொடுப்பவர்கள்
      கேட்ட பின் கொடுப்பவர்கள்
      கேட்டாலும் கொடுக்காதவர்கள்

      Delete
    2. பாதிரி என்றால் கிருத்துவப் பாதிரி என்று நினைத்தேன்.

      இதே போல ஒரு தமிழ் சினிமா பாட்டு உண்டு. "பனை மரம், தென்னை மரம், வாழை மரம், மக்கள் பழகும் பழக்கத்துக்கு மூன்று விதம் ..." என்று.

      Delete