புற நானூறு - உடன் கட்டை ஏறுதல்
உடன் கட்டை ஏறுதல் என்ற ஒன்றை இன்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
கலாசாரத்தில், பண்பாட்டில் எவ்வளவோ உயர்ந்த ஒரு இனம் இது போன்ற ஒரு வழக்கத்தை கொண்டு இருந்தது என்று நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது.
வெட்கி தலை குனிய வேண்டிய ஒரு விஷயம்.
பெண்களை ரொம்பவும் படுத்தி இருக்கிறார்கள், அந்த காலத்தில்.
உடன் கட்டை ஏறாத பெண்ணின் வாழ்க்கை ரொம்பவும் கடினமானதாய் இருந்து இருக்கிறது.
அந்த வாழ்க்கைக்கு, உடன் கட்டை எவ்வளவோ மேல் என்று ஒரு பெண்ணே சொல்வது, கொடுமையிலும் கொடுமை.
பல் சான்றீரே! பல் சான்றீரே!
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது,
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
பல் சான்றீரே! = இங்கு கூடி இருக்கும் பல பெரியவர்களே
பல் சான்றீரே! = இங்கு கூடி இருக்கும் பல பெரியவர்களே
'செல்க' எனச் சொல்லாது, = உடன் கட்டை ஏற செல்க என சொல்லாது
'ஒழிக' என விலக்கும், = போகாதே என்று தடுக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் = பெரிய சூழ்ச்சி செய்யும்
பல் சான்றீரே! = பெரியவர்களே
அணில் வரிக் = அணிலின் முதுகில் உள்ள வரி போல உள்ள
கொடுங் காய் = வெள்ளரிக்காய்
வாள் போழ்ந்திட்ட = வாள் கொண்டு பிளந்தால்
காழ் போல் = அதில் தோன்றும் சிறு சிறு விதை போல்
நல் விளர் நறு நெய் தீண்டாது, = இருக்கும் நல்ல நெய்யை தொடாமல்
அடை இடைக் = இலையின் மேல்
கிடந்த = கிடக்கும்
கை பிழி பிண்டம், = கையால் பிழிந்து வைத்த (பழைய சோறு)
வெள் எள் சாந்தொடு = வெள்ளை எள்ளு (வறுக்காத) சட்டினியோடு
புளிப் பெய்து அட்ட = கொஞ்சம் புளி சேர்த்து இட்ட
வேளை வெந்தை, = வேந்தும் வேகாததும் ஆன
வல்சி ஆக,= உண்ண வேண்டும்
பரல் பெய் = சிறு சிறு கற்கள் நிறைந்த கட்டாந்தரையில்
பள்ளிப் பாய் இன்று வதியும் = பாய் இல்லாமல் படுக்க வேண்டும்
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ = அந்த மாதிரி வாழும் பெண் அல்ல நான்
பெருங் காட்டுப் = சுடுகாட்டில்
பண்ணிய கருங் கோட்டு ஈமம் = அடுக்கிய கரிய பெரிய கட்டைகளால் ஆன ஈமப் படுக்கை
நுமக்கு அரிதாகுக தில்ல; = உங்களுக்கு வேண்டுமானால் கடினமான
விஷயமாய் இருக்கலாம்
எமக்கு = எனக்கு
எம் பெருந் தோள் கணவன் = பெரிய தோள்களை உள்ள கணவன்
மாய்ந்தென, = இறந்த பின்
அரும்பு அற = மொட்டு அவிழும்
வள் இதழ் = அழகிய இதழ்களை கொண்ட
அவிழ்ந்த தாமரை = மலர்ந்த தாமரை மலர்களை கொண்ட
நள் இரும் பொய்கையும் = இனிய பொய்கையும் (குளமும்)
தீயும் ஓரற்றே! = (சிதையில் ஏற்றிய) தீயும் ஒன்றே
பெண்களுக்கு நாம் மிகப் பெரிய தீங்கு இழைத்து இருக்கிறோம்.
வெள் எள் சாந்தொடு- வறுக்காத என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது ?
ReplyDeleteசில பாடல்களை படித்த பொழுது பெண்களே உடன் கட்டையை விரும்பி இருக்கிறார்களே என்று வியந்து இருக்கிறேன். இப்பொழுது தான் தெரிகிறது அதை ஏற்காமல் இருந்திருந்தால் வாழ்வே கடினம் என்று.
எள்ளை வறுத்தால் கறுத்து விடும் தானே ? வெள்ளை எள், வறுக்காத எள். சரியா ?
Deleteஇப்படி ஒரு பாடல் அந்தக் காளத்திலேயே வெளிப்படையாக எழுதி இருக்கிறார்களே. ஆச்சரியம்தான்.
ReplyDeletehttp://aggraharam.blogspot.in/2013/06/blog-post.html
ReplyDelete:(
ReplyDeleteபூதப்பாண்டியன் மனைவி
ReplyDelete