Sunday, June 3, 2012

திருவாசகம் - பொம்மலாட்டம்


திருவாசகம் - பொம்மலாட்டம்


இந்த உலகம், வான், மண், காற்று, ஒளி எல்லாவற்றையும் பார்க்கும் போது இதை எல்லாம் யாரோ படைத்து இருப்பார்களோ என்று மனதிற்கு தோன்றுகிறது.

ஆனால், அறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் அப்படி யாரும் இருப்பதாய் தோன்றவில்லை.

என்ன தான் செய்வது? அவன் உண்மையா? அல்லது உண்மை இல்லாதவனா? 

இரண்டும் தான் என்கிறார் மணி வாசகர்.

பொம்மலாட்டம் நடக்கிறது. அறியாத குழந்தைகளுக்கு ஏதோ அந்த பொம்மைகள் தானே எல்லாம் செய்வது போல தோன்றும்.

அறிந்த பெரியவர்களுக்குத் தெரியும் அந்த பொம்மைகளை ஆட்டுவிப்பது வேறு யாரோ என்று.

சில சமயம் பொம்மைகளே நாம் தான் எல்லாம் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்....

இது என் சொத்து, என் மனைவி, என் பிள்ளைகள் என்று மனிதர்கள் நினைப்பது அப்படிதான் என்கிறார் மணி வாசகர்...

வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

வான் ஆகி = வான் வெளி ஆகி

மண் ஆகி = மண் ஆகி

வளி ஆகி = காற்று ஆகி

ஒளி ஆகி = ஒளி ஆகி

ஊன் ஆகி = உடம்பு ஆகி

உயிர் ஆகி = உடம்பில் உள்ள உயிர் ஆகி

உண்மையும் ஆய் = உண்மை எதுவோ, அதுவாகி

இன்மையும் ஆய் = உண்மையும், உண்மை இல்லாததும் ஆகி

கோன் ஆகி = எல்லாவற்றுக்கும் தலைவனாகி

யான், எனது என்று = நான், எனது என்று

அவர்அவரைக் கூத்தாட்டு வான் ஆகி = சொல்லிக் கொண்டு திரிபவர்களை ஆடுவிப்பான் ஆகி

நின்றாயை = நின்ற என் தாயை

என் சொல்லி வாழ்த்துவனே! = என்ன சொல்லி வாழ்த்துவேன்?

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

2 comments:

  1. இது ஒரு சாமர்த்தியமான வழி: மனிதன் மாயையில் மயங்கினால், அவனை மயங்க வைப்பது இறைவன்; அதே சமயம், மனிதனை மாயையிலிருந்து விடுவிப்பதும் இறைவனே. இப்படிச் சொல்லி விட்டால், என்ன நடந்தாலும் அதன் காரணம் இறைவன் என்று சொல்லி விடலாமே. இப்படிப் பல பாடல்களில் வருகிறது ("அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"). இது ஏதோ ஒரு வட்டமான வாதம் (circular argument) போல் தோன்றுகிறது.

    ஆனாலும் படித்து ரசிக்கத் தகுந்த பாடல். (மாணிக்கவாசகரின் கவித் திறமையைப் பாராட்ட நான் ஒரு தூசு).

    ReplyDelete
    Replies
    1. என்னால் இன்னும் நம்ப முடியவில்லை...மாணிக்க வாசகர் போன்றவர்கள் அறியாமல் சொல்கிறார்கள் என்றோ அல்லது அறிந்தே பொய் சொல்கிறார்கள் என்றோ. உண்மை இல்லாத ஒன்று இத்தனை காலம் நிலைத்து நிற்குமா?

      Delete