Wednesday, September 11, 2013

குறுந்தொகை - பிரிவுத் துயர்

குறுந்தொகை - பிரிவுத் துயர்

பிரிவுத் துயர் எவ்வளவு கடினமானது என்று அனுபவித்தர்களுக்குத்தான் தெரியும்.

இருப்பு கொள்ளாது. எப்ப பாக்கப் போறோம், எப்ப பாக்க போறோம் என்று மனம் கிடந்து தவிக்கும். வெளியேயும் சொல்ல முடியாது. உள்ளேயும் வைத்துக் கொள்ள முடியாது.

இங்கே பார்க்க மாட்டோமா, அங்கே பார்த்து விட மாட்டோமா என்று மனம் கிடந்து அலையும்.

பார்க்கும் இடம் எல்லாம் அவன் அல்லது அவளாகத் தெரியும்.

கூட்டமாக இருக்கும் இடம் எல்லாம் மனம் கவர்ந்தவனையோ, வளையோ மனம் கண்டு விட பர பரக்கும் .

காணாமல் சோர்ந்து போகும்.

அந்த பிரிவு துயரை தாங்கிக் கொள்ளவும் ஒரு வலு வேண்டும். எவ்வளவு நாள் தான் இந்த பிரிவைத் தாங்க முடியும் ?

குறுந்தொகையில் , தலைவி தலைவனை பிரிந்த துயரை தோழிக்கு சொல்கிறாள்.

அவள் ஊரில் மலைகள் உண்டு. அழகிய சோலைகள் உண்டு. அந்த சோலைகளில் வாழும் மயில்கள்,  பாறையோரம் முட்டை இட்டு வைத்து இருக்கும். அந்த முட்டைகளை, அங்கு உள்ள ஆண் குரங்கு குட்டிகள் பந்து என நினைத்து உருட்டி விளையாடும். அப்படிபட்ட குரங்குகளை கொண்ட நாட்டின் தலைவனை நட்பாக கொண்டேன். இன்று அவன் பிரிவு என்ன வாட்டுகிறது. இந்த பிரிவுத் துயரை ஆற்றல் உள்ளவர்களால் தான் தாங்க முடியும். (என்னால் முடியாது என்பது பொருள்)

பாடல்

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி தோழி உண்கண்
நீரொடு ஒராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே.

பொருள்





கான = கானகத்தில் உள்ள

மஞ்ஞை = மயில்

அறை ஈன் = பாறையின் பக்கத்தில் இட்ட

முட்டை = முட்டையை

வெயிலாடு = வெயிலில் உலாவும்

முசுவின் குருளை = குரங்கின் குட்டி

 உருட்டும் = உருட்டி விளையாடும்

குன்ற நாடன் கேண்மை = மலைகளை உள்ள நாட்டுக் காரனின் நட்பு

என்றும் = எப்போதும்


நன்றுமன் = நன்றாக இருக்கிறது

வாழி தோழி = நீ வாழிய என் தோழி

உண்கண் = மை உண்ட என் கண்கள்

நீரொடு = கண்ணீரோடு

ஒராங்குத் =ஒரு மாதிரியாக

தணப்ப = அவனைப் பிரிய

உள்ளாது = நினைக்காது

ஆற்றல் வல்லு வோர்க்கே = ஆற்றல் வல்லவர்களுக்கே உடையது

குரங்கு குட்டி மயிலின் முட்டை உடைந்து விடும் என்று அறியாமல் விளையாடுகிறது.

அது போல இந்த தலைவனும் என் மனம் உடைந்து விடும் என்று அறியாமல் அதோடு விளையாடுகிறானோ ? என்பது தொக்கி நிற்கும் பொருள்.




1 comment:

  1. தொக்கி நிற்கும் பொருள் அருமை.

    ReplyDelete