இராமாயணம் - அவை அடக்கம்
12000 பாடல்களுக்கு மேல் இழைத்து இழைத்து பாடிய கம்பர் அவை அடக்கம் சொல்லுகிறார்.
எளியவர்களில் எளியவனான நான், சொற்களை கொண்டு நூல் நூற்பது மாதிரி இந்த நூலை நூற்கத் தொடங்கி இருக்கிறேன்.
இந்த கதையின் நாயகன் இராமன்.
அவன் எப்பேர் பட்டவன் தெரியுமா ?
ஒரு இலக்கை நோக்கி அம்பு எய்தால் அது கட்டாயம் அந்த குறியை சென்று அடையும்.
எப்படித் தெரியுமா ?
தவ வலிமை உள்ளவர்கள் ஒரு சாபம் கொடுத்தால் அது எப்படி தப்பாமல் சென்று அடையுமோ அது போல சென்று அடையும். நடுவில் எத்தனை தடை வந்தாலும் அவற்றை தாண்டி இலக்கை சென்று அடைய வைக்கும் திறம் படைத்தவன் இராமன்.
அவனுடைய கதையை கூட நான் முதன் முதலாகச் சொல்ல வில்லை. வால்மீகி முதலில் வட மொழியில் சொல்லிவிட்டார்.அவர் பெரிய தவ சீலர். அவர் சொன்னதை நான் மீண்டும் சொல்கிறேன். அவ்வளவுதான்.
கம்பன் இந்தப் பாட்டில் விளையாடுகிறான்...
பாடல்
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.
பொருள்
நொய்தின் நொய்ய = எளிமையிலும் எளிமையான, கீழிலும் கீழான
சொல் நூற்கலுற்றேன் = சொற்களை கொண்டு நூற்க தொடங்கி உள்ளேன்
எனை = என்ன ஒரு அதியசம்
வைத வைவின் = பெரியவர்கள் இட்ட சாபம் போல
மராமரம் = மராமரங்களை
ஏழ் துளை = ஏழு துளை செய்து
எய்த எய்தவற்கு = சென்று அடையும்படி எய்தவற்கு
எய்திய = அப்படிப்பட்ட திறமையை கொண்ட
மாக்கதை = பெரிய கதை
செய்த = செய்த
செய் தவன் = தவம் செய்தவன். செய்த தவம், செய்கின்ற தவம், செய்யும் தவம். வினைத்தொகை. வால்மீகி.
சொல் நின்ற தேயத்தே. = அவனுடைய சொல் நின்ற தேசத்தில்
கம்பனின் சொல் விளையாட்டை கொஞ்சம் பார்ப்போம்
எய்த எய்தவற்கு எய்திய - மூன்று எய்த என்று வருகிறது.
முதல் "எய்த" என்பதற்கு அம்பை எய்த என்று பொருள்.
இரண்டாவது "எய்தவற்கு" என்பதற்கு அம்பை செலுத்திய இராமன். எய்தவன்.
மூன்றாவது "எய்திய" என்பதற்கு அடைந்த என்று பொருள் .
அதே போல்
செய்தவன் என்ற சொல் விளையாட்டு
செய்தவன் என்றால் உருவாகியவன் என்று பொருள்.
செய் தவன் என்றால் தவம் செய்தவன் என்று பொருள்
அவை அடக்கம் சொல்வதிலும், என்ன புகுந்து விளையாடுகிறார்!
ReplyDelete