Sunday, September 15, 2013

திருக்குறள் - கூடா ஒழுக்கம்

திருக்குறள் - கூடா ஒழுக்கம் 


கூடா ஒழுக்கம் என்றால், ஏதோ சேரக் கூடாதவர்களோடு சேர்வது என்று சிலர் நினைக்கலாம்.

அது அல்ல.

பரிமேலழகர் சொல்கிறார்

" அஃதாவது, தாம் விட்ட காம இன்பத்தை உரன் இன்மையின் பின்னும் விரும்புமாறு தோன்ற , அவ்வாறே கொண்டு நின்று தவத்தோடு பொருந்தாததாய தீய ஒழுக்கம் . அது விலக்குதற்கு , இது தவத்தின்பின் வைக்கப்பட்டது."

அதாவது, ஒரு கால கட்டத்தில், காம இன்பம்  போதும்,இனி  என்று சொல்லிவிட்டு துறவறம் மேற் கொண்டவர்கள், அதை விட முடியாமல் பின்னும் காமத்தின் பின்னே செல்வதை காண்கிறோம். அப்படி பட்ட ஒழுக்கத்தை தீய ஒழுக்கம் என்கிறார். அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதால், கூடா ஒழுக்கம் என்ற இந்த அதிகாரம் தவம் என்ற அதிகாரத்தின் பின்னால் வைக்கப் பட்டது.

அசரம் பாபு, நித்யானந்தா, பிரேமானந்தா என்று எத்தனையோ பேரை பற்றி கேள்விப் படுகிறோம். அவை எல்லாம் கூடா ஒழுக்கத்தால் வந்தவை. 


பாடல்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

பொருள்






வஞ்ச மனத்தான் =  வஞ்ச மனம் கொண்டவனின்

படிற்று ஒழுக்கம் =  மறைவான ஒழுக்கத்தை

பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் = அவன் உடம்போடு கூடிய ஐந்து பூதங்களும் உள்ளுக்குள் நகும்

காமம் தோன்றுகிறது. அதை இல்லை என்று மற்றவர்களை அவன் ஏமாற்றுகிறான்.எனவே அந்த மனத்தை வஞ்ச மனம் என்றார்.

இப்படி அவன் அதை மறைத்தலால், அதை படிற்று ஒழுக்கம் என்றார்.

ஒரு புறம் காமம் கையை பிடித்து  இழுக்கிறது.

இன்னொரு புறம் அது இல்லை என்று ஊரை ஏமாற்றும் மனம்.

இரண்டுக்கும் நடுவில் கிடந்து அவன் படும் பாட்டை கண்டு, ஐந்து பூதங்களும்  உள்ளுக்குள்   சிரிக்குமாம்.

போலி சாமியார்கள் அந்தக் காலத்திலும் இருந்து  இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல, அவர்களுக்கு கட் அவுட்டும் வைத்து இருக்கிறார்கள், வள்ளுவர் காலத்திலேயே

என்னது வள்ளுவர் காலத்தில் கட் அவுட்டா என்று திகைக்கிரீர்களா?  அடுத்த ப்ளாகைப் படித்து விட்டு  சொல்லுங்கள்.


1 comment:

  1. சரியான கருத்துதான். எந்த மதத்திலுமே இது உண்டு போலும்.

    ReplyDelete